Latest News

  

இன்று முதல் தமிழகத்தில் புதிய கோவிட் கட்டுப்பாடுகள்: எதற்கெல்லாம் அனுமதி?

சென்னை: ஒரு வருட காலத்திற்கும் மேலாக கொரோனா தொற்றின் பிடியில் உலகே சிக்கித் தவிக்கின்றது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது.

தொற்று பரவுவதைத் தடுக்க, தமிழக அரசு அவ்வப்போது பல கட்டங்களில் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மே 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா கட்டுப்பாடுகள் இன்று, அதாவது மே 6 ஆம் தேதி காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன. இவை மே 20 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் பின்வருமாறு:

- அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

- ரயில் மற்றும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் டாக்சிகளில் கட்டுப்பாட்டுக்கு (Restrictions) உட்பட்ட பயணம் அனுமதிக்கப்படும். வாகனங்களில் 50% கொள்திறனிலேயே பயணிக்க முடியும்.

- குளிரூட்டப்படாத பல்பொருள் மற்றும் மளிகைக் கடைகளைத் தவிர, மற்ற கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாது. 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே மளிகைக் கடைகளில் அனுமதிக்கப்பட வேண்டும். இந்த கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

- மருத்துவ கடைகளுக்கும் பால் வழங்கலுக்கும் எந்த தடையும் இருக்காது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- உணவகங்களிலும் ஹோட்டல்களிலும் உணவை எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் அமர்ந்து உணவு / தேநீர் உட்கொள்ள முடியாது.

- மீன், கோழி மற்றும் பிற இறைச்சி வகைகளை விற்கும் சந்தைகள் மற்றும் கடைகள் வார நாட்களில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இவற்றை இயக்கலாம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவை அனுமதிக்கப்படாது.

- பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி வழங்கல் தடையின்றி தொடரும்.

- சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி மற்றும் கலாச்சார நிகழ்வுகளை உட்புற ஆடிட்டோரியங்களில் நடத்துவதற்கும் மாநில அரசு (TN Government) தடை விதித்தது. சினிமா அரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

- இறுதிச் சடங்குகள் மற்றும் தொடர்புடைய சடங்குகளில் பங்கேற்க 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. முன்னதாக, இதுபோன்ற நிகழ்வுகளில் 25 நபர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

- நகராட்சிகளில், நகர்ப்புறங்களில் உள்ள முடிதிருத்தும் மையங்கள், ஸ்பாக்கள் ஆகியவற்றின் இயக்கத்திற்கு ஏற்கனவே தடை இருந்தது. தற்போது அரசாங்கம் இந்த தடையை கிராமப்புறங்களில் உள்ள சலூன்கள் மற்றும் ஸ்பாக்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.

- மேலும் உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு (Night Curfew) மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை அரசாங்கம் நீட்டித்துள்ளது.

- தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, இந்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக அரசாங்கம் கூறியது.

- இன்று முதல் மே 20ஆம் தேதி வரை சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி இல்லை. மேலும், மாநில, மத்திய அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்றம் மற்றும் ஊடகத்துறையினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

- மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் இன்று முதல் மே 20 வரை பணிக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த மாதம் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு தினமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஞாயிறு முமு ஊரடங்கும் அமலில் உள்ளது. இரவு 10 மணிக்கு பிறகு அவசர தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றுவோரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலனுக்காக விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு மக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.