
பஞ்சாபை சேர்ந்த மணமக்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தங்களது திருமண ஊர்வலத்தை நடத்தினர்.
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்து, அங்கு திருமணம் செய்துகொண்டதாகவும் மணமக்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவாசாயிகள் தில்லி நோக்கி பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் ஆதரவு தெரிவித்து தில்லி நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். நாளை (திங்கள்கிழமை) பஞ்சாபிலிருந்து விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி நடத்தவுள்ளனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் புதுமணத் தம்பதியினர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு திருமண ஊர்வலத்தை நடத்தினர்.
இது குறித்து பேசிய மணமகன், திருமணம் செய்துகொள்வதற்காக தில்லி சென்றேன். விவசாயிகளையும் சந்தித்து எனது ஆதரவை தெரிவித்தேன். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டி போராட்டத்தில் கலந்துகொண்டு வலியுறுத்தினேன் என்று கூறினார்.
No comments:
Post a Comment