கல்வி நிறுவனங்களை இந்தச் சூழலில் திறக்கக் கூடாது என்று அரசுக்கு அரசியல் கட்சியினர் அழுத்தம் கொடுக்கவேண்டியது அவசியம் என மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கரோனா பொது முடக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணையவழி மூலமாக மாணவர்கள் பாடம் பயின்றுவருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இத்தகைய அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில், " பள்ளிகள் திறப்பில் அவசர கோலமான அறிவிப்பு ஏன்? கரோனா குறித்த ஆராய்ச்சிகள், எச்சரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டனவா? பெற்றோர்- ஆசிரியர்- மருத்துவர்களுடன் ஆலோசனைகளைச் செய்தார்களா?
ஜனவரி 2021-ல் அப்போதைய சூழலை ஆய்ந்துதான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மூத்த பத்திரிக்கையாளர் விஜயசங்கர் ராமமூர்த்தி இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில், "கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று சந்தேகத்திற்குரிய புள்ளி விவரங்களை வெளியிட்டு வரும் தமிழக அரசு தற்போது பள்ளி, கல்லூரிகளை நவம்பர் 16 அன்று திறக்க முடிவு செய்திருக்கிறது.
பண்டிகை சீசனுக்குப் பிறகு குறிப்பாக நவம்பர் 14 அன்று வரும் தீபாவளிக்குப் பிறகு மீண்டும் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதே நேரத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது மிகவும் ஆபத்தான செயலாக இருக்கும். ஆயிரக்கணக்கில் கல்வி நிறுவனங்களுக்கு எப்படி வருவார்கள், வருபவர்களைத் தினமும் பரிசோதனை செய்வதற்கும், சமூக இடைவெளியைக் கடைப் பிடித்து அமர வைப்பதற்கும் தேவையான உள் கட்டுமானம் பெரும்பான்மையான நிறுவனங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அரசின் முடிவுக்குச் சரியாகவே கண்டனம் தெரிவித்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
பிற அரசியல் கட்சிகளும் கல்வி நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களை இந்தச் சூழலில் திறக்கக் கூடாது என்று அரசுக்கு அழுத்தம் கொடுப்பது அவசியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment