

ஆந்திர மாநிலம், கடப்பா-தாடிபத்திரி சாலையில், கோட்டூருக்கும் தோல்லகன்னேபள்ளிக்கும் இடையே நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் செம்மரக்கட்டைகளை ஏற்றி வந்த 2 கார்கள் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.
இதில் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் நிலைதடுமாறிய 2 கார்களும் அந்த வழியாக சென்ற டிப்பர் லாரியின் டீசல் டேங்கர் மீது அடுத்தடுத்து மோதின. இதில் டீசல் கசிந்து தீப்பிடித்து, லாரி மற்றும் 2 கார்களும் கொழுந்துவிட்டு எரிந்தது.
இதையடுத்து போலீசார், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்கு முன், தீ வேகமாக பரவி, 2 கார்களில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
லாரி தீப்பிடித்தவுடன் அதன் டிரைவர் கீழே குதித்ததால் காயமின்றி உயிர் தப்பினார். படுகாயம் அடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
மற்றொருவர் லேசான தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடி விட்டார். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரும் சேலம் மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதில் 4 பேரின் பெயர், விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:-
1) ராஜூ (வயது 32)- சேலம் மாவட்டம் கருமந்துறை, ராக்கோடு.
2) மகேந்திரன் (25) – கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கீழாத்து குழி,
3) ராமச்சந்திரன் (25) – கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈச்சங்காடு.
4) சந்திரன்- கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை, தேவனூர் பகுதி.
இவர்களுடைய உடல்கள் கரிக்கட்டையாகி கிடப்பதால் முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருபவர் சேலம் மாவட்டம் கருமந்துறை தேக்கம்பட்டு பகுதியை சேர்ந்த மணி (23) என்பதும், தப்பி ஓடியவர் சதீஷ் என்பதும் தெரியவந்துள்ளது.
ஆஸ்பத்திரியில் இறந்த மற்றொருவர் யார்? என அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment