
அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களின் குற்ற வரலாற்றையும் அவர்களை களம் இறக்குவதற்கான காரணத்தையும் விளம்பரப்படுத்துமாறு உச்சநீதிமன்றம் கட்டாயம் என்று உத்தரவிட்டிருந்தாலும், அவர்கள் தேர்தல் அரசியலை சுத்தம் செய்ய எதையும் செய்யவில்லை என்பதும் பீகார் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உறுதிமொழி பிரமாணப் பத்திரங்களின் பகுப்பாய்வு காட்டுகிறது.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்), பீகார் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,066 வேட்பாளர்களில் 1,064 பேர் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரங்களை ஆராய்ந்தது. அதில், அவர்களில் கிட்டத்தட்ட கால் பகுதி வேட்பாளர்கள் (23%) கொலை, கொலை முயற்சி மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.
பீகாரின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான ஆர்.ஜே.டி கடுமையான கிரிமினல் வழக்குகளைக் கொண்ட அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களை (22) நிறுத்தியுள்ளது. தொடர்ந்து எல்.ஜே.பி (20) வேட்பாளர்களையும் பா.ஜ.க (13) வேட்பாளர்களையும் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு) (10) வேட்பாளர்களையும், காங்கிரஸ் (9) வேட்பாளர்களையும் நிறுத்தி உள்ளன.
அரசியலில் குற்றவாளிகள் மயமாவதை தடுப்பதற்காக, வேட்பாளர்கள் தங்கள் குற்ற வழக்குகளை வேட்புமனு தாக்கல் பிரமானப்பத்திரத்தில் தெரிவிப்பதோடு, பொதுமக்களிடையே ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியுள்ளது.
கடந்த மாதம், வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகளை தேர்தலின்போது மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியது. முதலில் வேட்புமனு வாபஸ் பெறுவதற்கு கடைசி தேதிக்கு நான்கு நாட்களுக்குள் விளம்பரப்படுத்த வேண்டும். பின்னர், வேட்புமனு திரும்பப் பெறப்படுவதற்கு கடைசி தேதிக்கு, 5 மற்றும் 8வது நாட்களுக்குள் விளம்பரப்படுத்த வேண்டும். இறுதியாக, தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து தேர்தல் பிரசாரம் கடைசி நாள் வரை விளம்பரப் படுத்த வேண்டும்.
குற்ற பின்னணியைக் கொண்ட வேட்பாளர்களை நிறுத்துவதற்கு அரசியல் கட்சியினர் நியாயமான காரணத்தை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏ.டி.ஆர் கருத்துப்படி, அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்ற உத்தரவை சரியான வகையில் பின்பற்றவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
'பிப்ரவரி 13, 2020 தேதியிட்ட உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்ற குற்ற பின்னணிகொண்ட வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான காரணங்களைத் தெரிவிக்கும்படி குறிப்பாக அறிவுறுத்தியுள்ளது. குற்றப் பின்னணி இல்லாத பிற நபர்களை ஏன் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்க முடியவில்லை.
இந்த கட்டாய வழிகாட்டுதல்களின்படி, அத்தகைய குற்ற பின்னணி கொண்டவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்வதற்கான காரணங்கள், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் தகுதிகள், சாதனைகள் மற்றும் தகுதி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். எனவே, அந்த நபரின் புகழ், நல்ல சமூகப் பணி செய்தவர், குற்ற வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை போன்ற அரசியல் கட்சிகளால் வழங்கப்படும் இத்தகைய ஆதாரமற்ற காரணங்கள் வலிமையானவை அல்ல. இந்த காரணங்கள் குற்றப் பின்னணியைக் கொண்ட வேட்பாளர்களை நிறுத்துவதற்கான கூர்மையான காரணங்கள் அல்ல. தேர்தல் முறையை சீர்திருத்துவதில் அரசியல் கட்சிகளுக்கு அக்கறை இல்லை என்பதையும், சட்டமியற்றுபவர்களாக மாறும் சட்டத்தை மீறுபவர்களின் கைகளால் நமது ஜனநாயகம் தொடர்ந்து பாதிக்கப்படும் என்பதையும் இந்தத் தரவு தெளிவாகக் காட்டுகிறது' என்று ஏ.டி.ஆர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
உதாரணமாக, 38 குற்ற வழக்குகளை எதிர்கொண்டு புகழ் மற்றும் வெற்றியின் அடிப்படையில் மொகாமா தொகுதியில் இருந்து கட்சி சீட்டில் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனந்த் சிங்கைத் தேர்ந்தெடுத்ததை ஆர்.ஜே.டி நியாயப்படுத்தியுள்ளது.
'அவர் இப்பகுதியில் உள்ள மற்ற வேட்பாளர்களை விட மிகவும் பிரபலமானவர். சமுதாயத்தின் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை உயர்த்த அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். அப்பகுதியின் ஏழை மக்களுக்கு உதவ அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். அதனால்தான் அவருக்கு எதிராக பல கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன' என்று சிங் பற்றி ஆர்.ஜே.டி. கட்சி தனது இணையதளத்தில் கூறியுள்ளது.
No comments:
Post a Comment