
சமீப நாட்களாக சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி விவாதங்கள் என பல தளங்களில் பேசுபொருளாகி உள்ளது சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020.
இதில் இடம்பெற்றுள்ள அம்சங்களால் வேலைவாய்ப்புகள் பெருகும், அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கும் என்று ஒரு தரப்பினர் கூறினாலும் இது முதலாளிகளுக்கு சாதகமானதாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிரானதாகவும், பொதுமக்களின் பங்கேற்பை குறைப்பதாகவும் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்..
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழகத்தில் நடக்கும் உரையாடல்களில் கவனிக்கத்தக்கவராக உருவெடுத்த சமூக ஊடகப் பிரபலம் பத்மபிரியாவிடம் பேசியது பிபிசி தமிழ்.
அழகுக்குறிப்பு பற்றி அதிகம் பேசிவந்த அவர் திடீரென சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 குறித்து பேச என்ன காரணம் என்று பரவலாக எழுப்பப்படும் கேள்வியை பத்ம பிரியாவிடம் கேட்டோம்.
அதற்கு அவர், ''எனக்கு தெரிந்த நல்ல விஷயங்களை பிறருடன் பகிர வேண்டும் என்பதற்காகவே அழகுக்குறிப்பு, உடல் நலம் சார்ந்த குறிப்புகளை பதிவிட்டு வந்தேன். நான் ஒன்றும் அழகுக்கலை நிபுணரல்ல. அதே நேரத்தில் தமிழ் மொழியின் சிறப்பு, பெண்களுக்கு எதிராக நடக்கும் அவலங்கள், இயற்கை பாதுகாப்பு குறித்தும் அவ்வப்போது பேசி வந்துள்ளேன்."
''முதல் காணொளி பகிர்வதற்கு சில நாட்கள் முன்னர் எனது நண்பர்கள் வட்டத்தில் இந்த வரைவு அறிவிக்கை குறித்து விவாதித்து வந்தனர். நானும் இதைப் பற்றி படித்த பிறகு அதிர்ந்து போனேன்'' என்று கூறும் பத்ம பிரியா, சுற்றுச்சூழல் விவகாரங்களை தொடர்ந்து கவனித்துவருவதாகவும் இது சமூகத்தின் மீது தனக்கு திடீரென வந்த அக்கறை அல்ல என்றும் அவர் கூறினார்.
''ட்ரெண்டாக நினைத்திருந்தால் வேறு தலைப்புகளில் பேசியிருப்பேன்''
சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 தொடர்பாக பத்ம பிரியா பேசிய முதல் காணொளி ஒரு கோடிக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வலதுசாரி கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட சிலரிடம் இருந்து அவருக்கு மிரட்டல்கள் வந்தன. ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் அவரை தொடர்புபடுத்தியும் வரைவு அறிவிக்கையை அவர் முழுமையாக படிக்கவில்லை என்பது போன்றும் எழுந்த விமர்சனங்களுக்குப் பிறகு அவர் அந்த காணொளியை தனது சமூக ஊடக பக்கங்களில் இருந்து நீக்கினார்.
சமூக நலன் சார்ந்து ஏற்கனவே பல காணொளிகளை பதிவிட்டதாக இவர் கூறும் நிலையில், அவற்றைக் காட்டிலும் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை பற்றி பேசிய காணொளி அதிகம் பேரால் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வந்தது. இந்த நிலையில், நீங்கள் ட்ரெண்ட் ஆகவேண்டும் என்பதாலேயே இந்த தலைப்பை எடுத்துக் கொண்டு உணர்ச்சி பொங்க பேசியதாக கூறப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டபோது, ''இந்த காணொளியைவிட அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் போல வேடமிட்டு பேசியபோது மிகவும் உணர்ச்சிபூர்வமாகவே பேசினேன். அதற்கு நல்ல ஆதரவு கிடைத்தாலும் அது சமீபத்திய காணொளி போன்று பெரிய அளவில் பகிரப்படவில்லை.''
''ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பது என் நோக்கமாக இருந்திருந்தால் பேசுவதற்கு நிறைய தலைப்புகள் இருக்கின்றன'' என்று கூறிய பத்ம பிரியா, தன்னை இன்ஸ்டாகிராம் செயலியில் எழுபதாயிரம் பேர் பின்தொடர்ந்த நிலையில் தனது காணொளி விவாதப்பொருளான பிறகு புதிதாக யாரையும் பின்தொடர அனுமதிக்கவில்லை என்கிறார்.
''கருத்துக் கேட்புக்கு காலக்கெடுவை நீட்டிக்காதது ஏன்?''
சமூக ஊடகங்கள் இல்லையென்றால் உங்கள் கருத்தை மக்களிடம் எப்படி கொண்டு சேர்த்திருப்பீர்கள்? சமூகப் பிரச்னை குறித்து குரல்கொடுப்பவர்கள் களப்பணி ஆற்றவேண்டியது முக்கியமா? என்று அவரிடம் கேட்டபோது, ''நமது கருத்தை பதிவு செய்ய சமூக ஊடகங்கள் சிறப்பான ஒரு தளம். எனக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. களப்பணி ஆற்றவேண்டியது முக்கியம் என்றாலும் என்னால் முடிந்ததை நான் செய்திருக்கிறேன்'' என்று கூறும் பத்மபிரியா, கொரோனா தொற்று காலகட்டத்தில் நிறைய விஷயங்களை ஒத்திவைக்கும் அரசு, ஏன் மக்கள் கருத்துக் கேட்புக்கு காலக்கெடுவை நீட்டிக்கவில்லை? என்று கேள்வியெழுப்புகிறார்.
தனக்கு பெற்றோரின் ஆதரவு இருப்பதாக கூறும் நுண்ணுயிரியியல் பட்டதாரியான பத்ம பிரியா, தன்மீது எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால் முதல் காணொளியில் பேசியதெல்லாம் தவறு என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்று எண்ணியதாலேயே அதற்கு விளக்கம் அளிப்பதற்காக இரண்டாவதாக ஒரு காணொளியை வெளியிட்டதாக கூறுகிறார்.
''மக்களுக்கு புரியும் மொழியில் வெளியிட்டிருக்க வேண்டும்''
பொதுவாக சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு தமிழக மக்களுக்கு அதிகம் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 குறித்து மக்கள் ஏன் அதிகம் பேசவில்லை என்று நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டோம். அதற்கு அவர், ''எனக்கு முன்பு நிறைய பேர் இதற்கு எதிராக குரல் எழுப்பியிருக்கிறார்கள். ஆனால் நான் பேசிய காணொளி சாமானிய மக்களையும் சென்றடைந்துவிட்டதால் என்னை மட்டுப்படுத்த வரைவு அறிவிக்கை பற்றி விவாதிக்காமல் என்னை பேசுபொருளாகிவிட்டார்கள்'' என்று கூறினார்.
மேலும் அவர், ''தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு அதிகம் என்பது உண்மை. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சொந்த பிரச்சனைகளே அதிகம் இருப்பதால் மக்களின் மனநிலை எப்படியிருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். முதலில் இந்த வரைவு அறிவிக்கை மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படாததன் காரணமாகவே பலராலும் இதை முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை என்று நான் நினைக்கிறன்'' என்கிறார் பத்ம பிரியா.
''தொடக்கத்திலேயே அடக்கிவிட்டால் தொடர்ந்து பேச தோன்றுமா?''
மிரட்டல்கள், கேலிகள் ஒரு பக்கம், விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக ஆதரிக்கும் மக்கள் ஒருபக்கம். விமர்சனங்களை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ''நான் நினைத்ததைவிட அதிகம் பேரை எனது காணொளி சென்றடைந்தது. மக்கள் ஆதரவு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடக்கத்தில் மிரட்டல்களை நினைத்து ஒரு பெண்ணாக பயந்தேன். ஜனநாயக நாட்டில் எனக்கிருக்கும் பேச்சுரிமையை பயன்படுத்தி மக்களிடம் எனது கருத்தை சேர்க்க நினைத்த நோக்கம் தவறில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனவே பிறர் போற்றுவதையும் தூற்றுவதையும் சமநிலையுடன் அணுக முயற்சித்து வருகிறேன்'' என்கிறார்.
சூழலியல் தொடர்பாக குரல்கொடுக்க ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலான பெண்களே முன்வருவதற்கான காரணம் என்ன என்று கேட்டபோது, ''ஒரு பெண் பொதுவெளியில் பேச முன்வந்தால் தொடக்கத்திலேயே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறாள். இதை பார்க்கும் மற்ற பெண்கள் எப்படி துணிச்சலாக பேச முன்வருவார்கள்? இந்த போக்கு மாறவேண்டும்'' என்கிறார் பத்மப்ரியா.
நீங்கள் சூழலியல் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுப்பீர்களா? உங்கள் அடுத்த கட்ட பயணம் என்ன என்று கேட்டபோது, ''நான் திட்டமிட்டு இதை செய்யவில்லை. இந்த வரைவு அறிவிக்கையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று நான் நினைத்ததால் அதுபற்றி பேசினேன். நாளைக்கே வேறு ஒரு விஷயம் எனக்கு தவறாகத் தோன்றினால் அது பற்றியும் பேசுவேன். அதற்கான உரிமை எனக்கு உள்ளது'' என்று கூறுகிறார்.
இந்த நிலையில், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்றும், வரைவு குறித்த பொதுமக்கள் கருத்துகளைப் பெறுவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31ஆம் தேதிவரை வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு போடப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 7ஆம் தேதி வரை வரைவு அறிவிக்கையின் இறுதி பதிப்பை வெளியிட வேண்டாம் என மத்திய அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் தமிழகத்தில் மீனவர் நல சங்கம் என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கக்கோரி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று பல்வேறு தரப்பினரும் இந்த வரைவு அறிவிக்கை தொடர்பாக நாடுமுழுவதும் நீதிமன்றங்களை நாடியுள்ளனர்.
source: bbc.com/tamil
No comments:
Post a Comment