
கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்றிரவு விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழக்க காரணமான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கேரள மாநிலம் கோழிக்கோடில் துபாயில் இருந்து 190 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரு விமானிகள் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.
நேற்றிரவு முதல் இன்று காலை அதிகாலை வரை நடந்த மீட்புப் பணிகளை அடுத்து தற்போது சம்பவம் நடந்த இடத்தில் விபத்துக்கான காரணம் குறித்து விமான விபத்து விசாரணை பணியகம், விமானப் போக்குவரத்து ஆணையகம், விமானப் பாதுகாப்புத் துறை உள்ளிட்டவற்றை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விமான விபத்து விசாரணை பணியகத்தை சேர்ந்த அதிகாரிகள் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்புப் பெட்டி என்றழைக்கப்படும் டிஜிட்டல் பிளைட் ரெக்கார்டரை பத்திரமாக மீட்டுள்ளதாகவும் அது டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட்டு மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
"22 பேரின் நிலைமை கவலைக்கிடம்"
"விபத்துக்குள்ளான விமானத்தில் 180 பயணிகளும், ஆறு விமானப் பணியாளர்களும் இருந்தனர். அவர்களில் 149 பேர் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 22 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 22 பேர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்" என்று மலப்புரம் மாவட்டத்தின் ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விபத்திலிருந்து உயிர் பிழைத்தவர்களுக்கு மற்றுமொரு ஆபத்து?
நேற்று விபத்து ஏற்பட்ட விமான நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள மலப்புரம் மாவட்டத்திலுள்ள கொண்டொட்டி பகுதி மக்கள் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றியுள்ளனர்.
இந்த கிராமம் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைபடுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு இருப்பதால், விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
எனவே, மீட்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் தீவிர மருத்துவ கண்காணிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைகிறார் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர்
விபத்து நடந்துள்ள கோழிக்கோடு விமான நிலையத்துக்கு நேரில் செல்ல உள்ளதாக இந்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
"வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபையிலிருந்து 190 பயணிகளுடன் கோழிக்கோடு வந்த இந்த விமானத்தை விமானி தரையிறக்க முயற்சிக்கும்போது அங்கிருந்த மழைக்கால சூழ்நிலையின் காரணமாக சறுக்கிவிட்டது" என்று அவர் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
"விமானத்தில் தீப்பிடித்திருந்தால் மீட்புப்பணிகள் இன்னும் கடினமானதாக இருந்திருக்கும். நான் சம்பவம் நடந்த கோழிக்கோடு விமான நிலையத்திற்கு செல்கிறேன்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என்ன சொல்கிறது ஏர் இந்தியா நிர்வாகம்?
ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் தலைமை செயலதிகாரி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பலரும் ஏற்கனவே சம்பவம் நிகழ்ந்த கோழிக்கோடு விமான நிலையத்தை சென்றடைந்துவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பயணிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்காக டெல்லி மற்றும் மும்பையிலிருந்து மொத்தம் மூன்று சிறப்பு நிவாரண விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"கோழிக்கோடு, மும்பை, டெல்லி மற்றும் துபாய் உள்ளிட்ட இடங்களிலுள்ள துறைசார் அதிகாரிகளுடன் அவசரகால பணிக்குழுவின் இயக்குநர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக விமான விபத்து விசாரணை பணியகம், விமானப் போக்குவரத்து ஆணையகரம், விமானப் பாதுகாப்புத் துறை உள்ளிட்டவற்றை சேர்ந்த அதிகாரிகள் ஏற்கனவே சம்பவ இடத்தை சென்றடைந்துவிட்டனர்."
source: bbc.com/tamil
No comments:
Post a Comment