
ஹரியானா மாநிலம் குர்கானில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாகக் கூறி இளைஞர் ஒருவர், பசு காவலர்களின் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த
வெள்ளிக் கிழமை காலை 9 மணி அளவில் லுக்வான் என்னும் இளைஞர், அவருடைய
வாகனத்தில் கடைகளுக்கு இறைச்சி சப்ளை செய்வதற்காக சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு கும்பல், மாட்டிறைச்சி தான் கொண்டு செல்கிறார் எனக்கூறி அவரை
இருசக்கர வாகனத்தில் பின்பற்றி சென்றுள்ளனர். சுமார் 8 கிலோ மீட்டர் தூரம்
துரத்தி சென்று, கூர்கானில் உள்ள மசூதிக்கு அருகே இளைஞரை மடக்கிப் பிடித்த
கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கு இருந்த காவலர்
ஒருவர் அவர்களை தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளார், மேலும் அங்கிருந்த
மக்களில் ஒருசிலர் அவர்களை தடுக்க முயன்றபோது அந்த பசுக் காவலர்கள் அடங்கிய
கும்பல் அவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
அந்த கும்பல் இளைஞரை தாக்கியதை சிலர் வீடியோவாக
எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து கூறிய காவல் அதிகாரி ஒருவர், இளைஞர் லுக்வான் கொண்டு சென்ற இறைச்சியை சோதனை செய்வதற்காக பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அந்த கும்பல் காவலர்களின் வாகனத்தையும் சேதப்படுத்தியதாகவும், வீடியோவில் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் பிரதீப் என்னும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இறைச்சி கொண்டு சென்ற இளைஞரை தாக்கியதற்கான காரணம் தெரியவில்லை என்றும் கூறினார்.
இறைச்சி கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் கூறும்போது, வாகனத்தில் இருந்தது எருமை மாட்டு இறைச்சி என்றும், இந்த தொழிலை கடந்த 50 ஆண்டுகள் செய்து வருவதாகவும், ஆனால் இதுபோன்ற பிரச்சனை இதுவரை வந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மஸ்ஜித் மார்க்கெட்டின் தலைவர் தாஹீர் இது குறித்து கூறும்போது, அந்த மர்ம கும்பல் இளைஞரை தாக்க தொடங்கும்போதே போலீசாருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததாகவும், ஆனால அவர்கள் சரியான முறையில் பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 5 முறை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட பின்பும் காலதாமதமாகவே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பசுக்காவல் கும்பலால் தாக்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
No comments:
Post a Comment