
கொரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதும், மாணவர்கள் கல்வி கற்பதும் பெரும் பாதிப்பில் உள்ளது.
சவால்கள் பல இருந்த போதும், பெரும்பாலான தனியார் பள்ளிகள் 'ஆன்லைன் வகுப்புகள்' மூலம் வீட்டில் இருக்கும் மாணவர்களுக்குப் பாடம் நடத்த துவங்கிவிட்டனர். ஆனால், கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு, ஆன்லைன் கல்விமுறை சாத்தியமேயில்லை என்கின்றனர் கல்வி ஆலோசகர்கள்.
"பழங்குடியின மக்களின் குழந்தைகள் முதல் தலைமுறை கல்வி கற்பவர்களாக உள்ளனர். கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் சமதளப் பகுதியில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி சாத்தியப்படாத நிலை உள்ளது. பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மின்சார வசதி என்பது இல்லாத பகுதிகள் நிறைய உண்டு. சில தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளில் இரவில் மட்டுமே மின்சாரம் வழங்கப்படும். இந்த சூழலில் ஆன்லைன் வகுப்புகளில் பழங்குடியின மாணவர்களைப் பங்கெடுத்துக் கொள்ள நிர்ப்பந்திப்பது, அந்த குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கும் நிகழ்வாகத்தான் இருக்கும்" என்கிறார் கல்வி ஆலோசகர் வி.பக்தவச்சலம்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார் அணை அருகே அமைந்துள்ள ஆனைமலை மற்றும் சின்னார்பதி கிராமங்களில் மலசர் மற்றும் எரவள்ளர் எனும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
இன்றுவரை இப்பகுதிகளில் மின்சார வசதியும், இணைய வசதியும் கிடையாது. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் கைப்பேசிகள் பயன்படுத்துவதில்லை. கொரோனா பொது முடக்கத்தால் பொருளாதார நெருக்கடியில் இப்பகுதி மக்கள் சிக்கித்தவிப்பதோடு, பள்ளிகள் மூடப்பட்டுள்ளதையடுத்து ஏராளமான மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது.
ஆழியார் அன்பு நகர் பகுதியில் வசிக்கும் தங்கவேலு, தனது மகனின் கல்வி எதிர்காலம் குறித்து கவலையில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.
"எங்கள் பகுதியில் 21 குடும்பங்கள் உள்ளன. சுமார் 20 மாணவர்கள் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கு இந்தாண்டு செல்கின்றனர். நான் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்கிறேன். இங்கு வசிக்கும் அனைவரும் தினக்கூலிகள்தான். எங்கள் பிள்ளைகளின் கல்வி ஒன்றுதான் அவர்களை காப்பாற்றும் என நம்புகிறோம். எனது மகன் இந்தாண்டு பத்தாம் வகுப்பு செல்கிறான். அனைத்து பாடங்களிலும் இதுவரை நல்ல மதிப்பெண்கள் எடுத்து வந்துள்ளான். ''
''கொரோனா காரணத்தினால் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நகர் பகுதிகளில் இருப்பவர்கள் அனுபவிக்கும் வசதிகள் எதுவும் எங்கள் பகுதியில் இல்லை. என் மகனுக்கென தனியாக ஒரு ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுக்கும் அளவிற்கு எனது வருமானமும் இல்லை. நிலைமை இப்படி இருக்க 'பத்தாம் வகுப்பு தேர்வை என் மகன் எப்படி எழுதப்போகிறான்?' என்று கவலையாக இருக்கிறது. நகரில் படித்து வரும் மாணவர்களோடு போட்டியிடும் அளவிற்கு பொருளாதாரத்திலும், வசதிகளிலும் பின்தங்கிய எங்களது மாணவர்கள் வளரமுடியுமா என்பதே சந்தேகம்தான்" என வேதனையுடன் பேசினார் தங்கவேலு.
கொரோனாவிற்கு பிந்தைய சூழலில் மலைவாழ் மக்களுக்கும், கல்விக்கும் இடையிலான தூரம் மேலும் அதிகரிக்கும் என்கிறார் ஆசிரியர் கலாவதி.
"கடந்த 30 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு மலைப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளேன். தோடர், இருளர், குறும்பர் என ஏராளமான பழங்குடியின மாணவர்களுக்கு கற்பித்து வருகிறேன். அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி தேர்ச்சி பெறும் மாணவர்களின் திறமைகள் அனைத்தும், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல், முதல் தலைமுறையாக கல்வி கற்கும் பழங்குடியின மாணவர்களுக்கும் இருக்கிறது என்பதை நேரடியாக நான் உணர்ந்துள்ளேன். ''
''நான் கற்பித்த பெரும்பாலான பழங்குடியின மாணவர்கள் மிக அழகாக ஓவியம் வரைவார்கள். அவர்களின் கையெழுத்துக்கள் முத்துக்கள் போல் இருக்கும். அவ்வளவு திறமைமிக்க மாணவர்களின் கல்விக்கு பெரும் தடையாக இந்த கொரோனா பொதுமுடக்கம் மாறியுள்ளது" என கூறுகிறார் ஆசிரியர் கலாவதி.
கலாவதி, கூடலூர் தாலுகாவில் உள்ள கார்குடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக தற்போது பணிபுரிந்து வருகிறார்.
"பழங்குடியின மக்கள் எளிதில் வெளி ஆட்களை நம்ப மாட்டார்கள். அவர்களோடு மிக நீண்ட காலம் பழகி, அவர்களின் நம்பிக்கையை பெற்ற பின்னர்தான் அவர்களது குழந்தைகளை எங்களோடு பள்ளிக்கு அனுப்புவார்கள். பலநாட்கள் நான் அவர்கள் இடத்திலேயே தங்கி, குழந்தைகள் தூங்கி எழுந்த உடனே பள்ளிக்கு கூட்டிச்சென்று பாடம் நடத்தியுள்ளேன். பழங்குடியின மக்களுக்கும் கல்விக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க அர்ப்பனிப்போடு பல ஆசிரியர்கள் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். அப்படி ஒரு முயற்சியாக, எங்கள் பகுதியின் ஆசிரியர்கள் அனைவரும் வாட்ஸ் ஆப் குழு ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை அனுப்பி வருகிறோம். ஆனால், பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்களிடம் கைப்பேசி இல்லை. கொரோனாவிற்கு பிந்தைய கல்வி சூழலில் மலைகளில் வசிக்கும் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவருவதில் கூடுதல் சிரமங்கள் இருக்கும்" என தெரிவிக்கிறார் இவர்.
பொதுத்தேர்வுகள் எழுதவுள்ள பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் வகுப்புகளை நடத்திட அரசு நடவடிக்கை வேண்டும் என்கிறார் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த வி.எஸ்.பரமசிவம்.
"தற்போது தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஆன்லைன் கல்வி முறை எண்ணற்ற பழங்குடியின மாணவர்களுக்கு சென்றடைய வாய்ப்பில்லை. காரணம், அவர்கள் வாழுகிற பகுதிகளில் மின்சார வசதி, நவீன தொழில்நுட்ப வசதி, தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன் என எதுவுமே இல்லாத நிலை உள்ளது. இதனால், பழங்குடியின மாணவர்கள் தங்களுக்கான கல்வியை பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு நேரடி கற்பித்தல் மட்டுமே சாத்தியமுள்ள வாய்ப்பாக உள்ளது. குறிப்பாக, பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பழங்குடியினர் மாணவர்களுக்கு, வனச்சரகம் வாரியாக அவர்களின் குடியிருப்புகளின் அருகாமையில் உள்ள அரசுப் பள்ளிகளிலேயே, ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்திட வேண்டும். இம்மாணவர்களுக்கு காலை மற்றும் மதியம் என சத்துணவு வழங்கிடவும், சிறப்பு வகுப்புக்கு அழைத்து வர வாகன வசதிகளும் செய்து தர வேண்டும்" என கோரிக்கை வைக்கிறார் பரமசிவம்.
ஆன்லைன் கற்பித்தல் குறித்து கல்வி செயற்பாட்டாளர் மற்றும் பொதுக் கல்விக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசியபோது, 'ஆன்லைன் கல்விமுறை என்பது பாகுபாட்டின் குறியீடு' என்ற கருத்தை முன்வைக்கிறார்.
"ஆன்லைன் கல்விமுறையை பரிந்துரைப்பதற்கு முன்னர், நெட்வொர்க் வசதியைக் கொண்ட மொத்த பரப்பளவு என்ன என்பதை அறிந்திட வேண்டும். அப்பகுதிகளில் எந்த அளவிற்கு நெட்வொர்க் சேவை இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இணைய வசதியை பெறுவதற்கான விலை மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களின் விலையை கருத்தில் கொள்ளவேண்டும். இவை அனைத்துமே, பழங்குடியினர், வனகிராமங்கள் மற்றும் மலைகளில் வசிப்பவர்களுக்கு பொருந்தாத வகையில் உள்ளது. ஆதனால்தான் ஆன்லைன் கல்விமுறையே ஒரு பாகுபாடு என்கிறோம்."
"மேலும், ஆன்லைன் வகுப்பின்போது மாணவர்களை பெற்றோர்கள் வழிநடத்த வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைக்கிறது. நவீன தொழில்நுட்பங்கள் குறித்து தெரியாத, முதல் தலைமுறையாக குழந்தைகளை படிக்கவைக்கும் பெற்றோர்களால் எப்படி ஆன்லைன் வகுப்புகளை வழிநடத்த முடியும். எனவே, நேரடி கல்விமுறைக்கு மாற்று வேறு எதுவுமில்லை. திறந்தவெளிப்பகுதியிலோ, மரத்தின் அடியிலோ, தனிமனித இடைவெளியுடன் அமரவைத்து தினமும் 2 அல்லது 3 மணி நேரமாவது பழங்குடியின மாணவர்களுக்கு பாடம் நடத்திட வேண்டும். அப்போது தான் மனதளவில் அவர்கள் சந்தித்து வரும் தாக்கம், அவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றை ஆசிரியர்கள் தெரிந்துகொண்டு கற்பிக்க முடியும்" என கூறுகிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
No comments:
Post a Comment