Latest News

  

மீனவர் கிராமத்தில் கலவரம்: ஒருவர் கொலை, படகுகள், மீன்பிடி வலைகளுக்கு தீ வைப்பு

கடலூர் மாவட்டம் தாழங்குடா மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கலவரம் தீவிரமடைந்து, ஒருவர் கொல்லப்பட்டார். மீன் பிடி வலைகள், படகுகள் தீக்கிரை ஆயின.

குண்டு உப்பலவாடி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே இருந்து வந்த பகைமை, உள்ளாட்சித் தேர்தலில் தீவிரமடைந்ததன் பின்விளைவாகவே இது நடந்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணியின் தம்பி மதிவாணன்(வயது 36) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 25க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனை மாசிலாமணி தரப்பினர் செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் மோதல் அதிகரிக்கவே, அங்கிருந்த வீடுகள் சூறையாடப்பட்டு, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் உடைக்கப்பட்டன.

இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தைக் குறைக்க, உடனடியாக நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கிடையில், தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் சரக காவல்துறை துணைத்தலைவர் எழிலரசன், கொலை மற்றும் கலவரம் குறித்து விசாரணை நடத்தினார்.

இச்சம்பவம் தொடர்பாக, கடலூர் தேவனம்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. கொலை மற்றும் கலவரம் தொடர்பாக 40க்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி கூறுகையில், "சம்பவத்தில் தொடர்புடைய மாசிலாமணி மற்றும் மதியழகன் இந்த இரு தரப்பினரும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இரு தரப்பிலும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தலா 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மதியழகன் தரப்பினர் மாசிலாமணி தம்பியைக் கொலை செய்துள்ளனர்.

இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய 7 நபர்களில், 5 பேர்‌ கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரைத் தனிப்படை அமைத்துத் தேடி வருகிறோம். மேலும், கலவரத்தின் போது படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளுக்குத் தீ வைத்தது, வீடு மற்றும் வாகனங்களைச் சேதப்படுத்தியது தொடர்பாக 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூழ்நிலை முழுவதும் கட்டுக்குள் உள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி 500க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்," என்று தெரிவித்தார் சாந்தி.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.