
ஜம்மு காஷ்மீரில் குண்டு பாய்ந்து மரணமடைந்த மன்னார்குடியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் திருமூர்த்தி உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே புள்ளவராயன் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. கடந்த 31 ஆண்டுகளாக எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வரும் இவர், ஜம்மு காஷ்மீரில் பணியில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 26ம் தேதி இரவு துப்பாக்கி குண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி 31ந் தேதி மாலை உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக அரசு சார்பில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருமூர்த்தியின் உடல் இன்று காலை 5 மணிக்கு அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது. திருமூர்த்தியின் உடலுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, உறவினர்கள், கிராம மக்கள் அஞ்சலிக்கு பின்னர், அலங்கரித்த வாகனத்தில் முத்துபாடி குளக்கரையில் அருகில் உள்ள மயானத்திற்கு கொண்டு வரப்பட்ட திருமூர்த்தி உடல், அரசு மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment