ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மதிஹுல்லா ஆர்யா என்ற மாணவர் கோவா
பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்து வந்தார். பல்கலைக்கழக வளாகத்துக்கு
அருகில் உள்ள டோனா பவுலா என்ற இடத்தில் மதிஹூல்லா மீது மர்ம நபர்கள்
தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர் தீவிர சிகிச்சைப்
பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். இச்சம்பவம்
மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக மாணவர்கள் சங்கங்கள்
கொதிக்கின்றன.

இந்திய
தேசிய மாணவர் சங்கத்தின் கோவா மாநிலத் தலைவர் அஹ்ராஜ் முல்லா, கோவாவின்
ஆளுநர் சத்ய பால் மாலிக்குக்கு இதுதொடர்பாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ``சமீபத்தில், கோவா பல்கலைக்கழகத்தில் பயின்று
வந்த ஆப்கானிஸ்தான் மாணவர் மீதான தாக்குதல் குறித்து உங்களுக்குத்
தெரிவிப்பதற்காக இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு
கோவாவில் சீர்குலைந்துள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்
ஏற்பட்டிருக்கும் சூழலைப்போல இங்கும் ஒரு சூழல் உருவாகிவிடுமோ என்று
மாணவர்கள் அச்சப்படுகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
அந்தக் கடிதத்தில், ``ஆப்கானிஸ்தான் மாணவர் மீதான தாக்குதல், மற்ற
நாடுகளிலிருந்து இங்கு வந்து படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த
கேள்வியையும் எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவம், நம்முடைய நாட்டின் சட்டம்
மற்றும் ஒழுங்கைப் பற்றிய தவறான புரிதல்களை உலகம் முழுவதும் உள்ள
நாடுகளுக்கு ஏற்படுத்தும். ஜாமியா மிலியா மற்றும் ஜே.என்.யூ போன்ற
பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்பட்டுள்ள சூழ்நிலையைப்போல இங்கு அசாதாரண
சூழல் ஏற்படுவதைத் தடுக்க அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும்.
கோவா
பல்கலைக்கழகத்தின் நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் செயல்படும்
குற்றவாளிகளுக்கு எதிராக வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் சதீஷ்
நில்காந்தே என்பவரைக் கைது செய்துள்ளனர். ``நான்கு பேர் இந்தத் தாக்குதல்
ஈடுபட்டுள்ளனர். அதில், ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளோம். மற்ற மூன்று
பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. கொலைக்கான சரியான காரணம் இதுவரை
தெரியவில்லை. கைது செய்த நபரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்"
என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதியிலுள்ள
பல்கலைக்கழகங்களிலும் படிக்கும் மாணவர்கள் மீது தொடர்ந்து மர்ம நபர்கள்
தாக்குதல் நடத்தி வருவது மாணவர்களிடையே பெரும் அச்சத்தையும்
அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment