Latest News

5ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வா? : 'குழந்தைகள் பொம்மைகள் அல்ல' - ஒரு பள்ளி ஆசிரியரின் உருக்கமான பதிவு!

5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதற்கு பல்வேறு தரப்பினரிடையே கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. கல்வியாளர்களும், சமூக சிந்தனையாளர்களும் தங்கள் எதிர்ப்பை இணையத்தில் பதிவு செய்து வருகின்றன.

அந்தவகையில், பள்ளி ஆசிரியரும், முற்போக்கு எழுத்தாளருமான அழகிய பெரியவன் தனது முகநூல் பக்கத்தில், 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்து பதிவிட்டுள்ளது இணையவெளியில் வைரலாகி வருகிறது.
எழுத்தாளர் அழகிய பெரியவன் முகநூலில் எழுதியிருப்பதாவது :
"நேற்று ஆறாம் வகுப்பு அறிவியல் பாடவேளையில், காலையில் எத்தனை மணிக்கு எழுகிறீர்கள் என்று மாணவர்களைக் கேட்டேன். ஒரு மாணவி சொன்னார், "அம்மா,காலணி தொழிற்சாலையில் வேலை செய்கிறார். காலை ஆறுமணி வேலைக்கு வீட்டிலிருந்து ஐந்து மணிக்கு அவர் புறப்பட வேண்டும். அதனால் சமையல் வேலைகளிலும் வீட்டு வேலைகளிலும் உதவ 2 அல்லது 3 மணிக்கு எழுந்துகொள்கிறேன்" பெண் குழந்தை கொஞ்சம் வளர்ந்துவிட்டாலே இந்த நாட்டில் குழந்தை அல்ல, அது பெண்.

அந்தக் குழந்தை தன் குழந்தைமையை இழந்து விடுகிறது. சில தருணங்களில் பாலியல் சீண்டல்களாலும் வல்லுறவாலும் தன் இயல்பு வாழ்க்கையையும், உயிரையும் கூட இழந்து விடுகிறது.

நேற்றே இன்னொரு காட்சி. மூன்றாவது படிக்கும் மாணவன் ஒருவன் ஓயாமல் அழுதுகொண்டே இருந்தான். கேட்டபோது தான் தெரிந்தது, வீட்டில் படுத்திருக்கும் தன் அப்பாவை நினைத்து அழுகிறான் என்று. விபத்தில் சிக்கி உள்ளங்கை கிழிபட்டு 13 தையலோடு அவர் படுக்கையில் இருக்கிறாராம்.
ஒன்று முதல் எட்டு வரை படிப்பவர்கள் குழந்தைகள். அந்தக் குழந்தைகளிலும் கிராமத்தில் இருப்பவர்கள் முற்றிலும் வேறு வேறு வாழ்கைச் சூழல்களைக் கொண்டவர்கள். ஒழுகும் மூக்கை துடைக்கவோ, கழிவறை பயன்பாட்டை உணரவோ தெரியாதவர்கள். உழைக்கும் மக்களின் குழந்தைகள் என்பதால் குறைந்த அளவே பெற்றோரின் அரவணைப்பைப் பெறுவர். இந்த வயதில் அவர்கள் பெறும் கல்வி ஆதார அடிப்படை கல்விதானே ஒழிய தகுதியாக்கும் கல்வி அல்ல.
குழந்தைகள் பொம்மைகள் அல்ல. உயிரும் உணர்வும் உளவியலும் கொண்டவர்கள். இந்த உண்மையை அளவுகோலாகக் கொண்டு தான் அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி முறையை வடிவமைக்க வேண்டும். பெரிய மனித எண்ணங்களோடும், அடிப்படைவாத சிந்தனைகளோடும் அவர்களுக்கான கல்வியை வடிவமைக்கக் கூடாது.

புதிய கல்விக் கொள்கை 3ஆம் வகுப்புக்கே பொதுத்தேர்வை பரிந்துரை செய்துள்ளது. நிலவும் புறச்சூழ்நிலையைப் பொறுத்து அடுத்த ஆண்டுகளில் அதுவும் அமல்படுத்தப்படலாம் என்றே தெரிகிறது. 

இந்தப் பொதுத்தேர்வுகள் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி. நவீன கல்வி முறையைப் பின்னுக்கு இழுக்கும் முயற்சி. கல்வி பரவலாக்கத்தை தடுக்கும் சதி."
இவ்வாறு எழுத்தாளர் அழகிய பெரியவன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.