Latest News

'பஞ்சமி நிலமும், காவிகளின் கபட நாடகமும்' : பா.ஜ.க-வில் தலித் தலைவர்கள் பட்டபாடு - ஆதாரம் இதோ !

முரசொலி பத்திரிகை அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பா.ம.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வந்ததையடுத்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர் அதற்கு ஆதாரத்தோடு மறுப்பு தெரிவித்ததோடு, எதிர்க்கட்சியினரிடம் ஆதாரம் கேட்டு சவால் விடுத்தனர்.

இதற்கிடையே, பா.ஜ.க பிரமுகர் சீனிவாசன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம்தான் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகாரளித்தார். இந்த விவகாரத்தில் உடனடியாக செயலில் இறங்கிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், தலைமை செயலாளரையும், முரசொலி நிர்வாகத்தையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

கடந்த நவம்பர் 19ம் தேதியன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் முன்பு ஆதாரங்களோடு முரசொலி அறங்காவலரும், தி.மு.க அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி எம்.பி., ஆஜரான நிலையில், புகார்தாரரும், தலைமை செயலாளரும் வாய்தா வாங்கினர்.
தி.மு.க மீது பழி சுமத்துவதில் ஆர்வம் காட்டும் பா.ஜ.க, மண் குதிரைகளை நம்பி ஆதாரம் இல்லாமல் ஆற்றில் இறங்கி, பஞ்சமி நிலம் குறித்துப் புகார் வாசித்து அம்பலப்பட்டு, பொதுமக்களிடம் அவப்பெயரை வாங்கிக்கட்டிக்கொண்டது.

இந்நிலையில், இன்றைய முரசொலி நாளிதழில் 'பதுங்கிய பஞ்சமி 'போலி'கள்!' எனும் தலைப்பில் வெளிவந்த கட்டுரையில், 'பஞ்சமி நில விவகாரத்தில் பா.ஜ.க துடிப்பதைப் பார்த்தால், முன்னாள் பா.ஜ.க தலைவர் கிருபாநிதியே உயிர்பெற்று வந்துவிடுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் இந்த கிருபாநிதி?
(2009ம் ஆண்டு டிசம்பரில் வெளியான 'விடுதலை' வெளியான கட்டுரையின் ஒருபகுதியில் இடம்பெற்ற டாக்டர் கிருபாநிதியின் பேட்டியை இங்கே பார்க்கலாம். இந்தப் பேட்டி "தமிழா தமிழா'' ஏப்ரல் 2003 இதழில் வெளிவந்தது. இந்தத் தகவல்களை பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைமைக்கும் டாக்டர் கிருபாநிதி எழுதியிருப்பதாக இதே பேட்டியில் வெளியாகியுள்ளது.)

தமிழ்நாட்டு மண்ணில் தந்தை பெரியார் ஊன்றியிருக்கும் உணர்வின் அலைகளிலிருந்து தப்பிக்க, பா.ஜக. என்ன செய்தது? ஒரு தாழ்த்தப்பட்டவரைத் தமிழகத் தலைவராக நியமித்தது. அவர்தான் டாக்டர் கிருபாநிதி.
பா.ஜ.க-வில் காலங்காலமாக நிலவும் தீண்டாமைக் கொடுமை குறித்த பா.ஜ.க முன்னாள் தலைவரான டாக்டர். கிருபாநிதியின் கண்ணீர்ப் பேட்டி இதோ :
"தேசிய கவுன்சில் கூட்டம் இந்தூரில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன். இல.கணேசனும் வந்திருந்தார். கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, நான் தங்கியிருந்த தாஜ் ரெசிடென்சியல் ஹோட்டலுக்குக் கிளம்ப வேண்டும். காருக்காக போர்டிகோ அருகில் காத்திருந்தேன்.

அப்போது அங்கு இல. கணேசன் அவசரமாக வந்தார். 'நீ என்ன பெரிய ஆளா? உன்னை ஒழிச்சுடுவேன்' என்றெல்லாம் பேசியவர் ஜாதி ரீதியாகவும் என்னை இழிவாகப் பேசினார். நான் அவர்கிட்ட பொறுமையா பேசுங்கன்னு சொன்னேன். ஆனா அவர் எதையும் கேட்கிற நிலையில் இல்லை. நிதானம் இழந்து காணப்பட்டார். யார்கிட்டப் பேசறோம், என்ன பேசறோம்னு உணருகிற நிலை-மையில் இல்லை. ஒரு கட்டத்துல என் கையைப் பிடிச்சு முறுக்கி அடிச்சுட்டார்.

கேள்வி: இல.கணேசன் உங்கள்மீது அவ்வளவு கோபமாவதற்கு என்ன காரணம்?
டாக்டர் கிருபாநிதி: என் பதவிக்காலம் முடியப் போகிறது. அதற்குமுன் கட்சி கணக்கு வழக்குகளை ஒப்படைக்கணும். அதனால் கணக்கு வழக்குகளை ஆராய்ந்தபோது பல இழுப்படிகள் நடந்திருப்பது புரிந்தது. மாநிலச் செயலாளராக இருந்த இல.கணேசன் தேசிய செயலாளராக ஆன பிறகும் மாநிலக் கட்சி நிதியைக் கையாண்டு கொண்டிருந்தார். இதை நான் தடுத்ததால்தான் ஆத்திரப்பட்டு என்னை அடிக்கும் அளவுக்குப் போய்விட்டார்.
கேள்வி: நீங்கள் தமிழகத் தலைவராகப் பதவியேற்றதிலிருந்தே பலவித அவமானங்களை சந்தித்து வந்தீர்கள் அல்லவா?
டாக்டர் கிருபாநிதி: ஆமாம் . தலைவர் என்கிற முறையில் கட்சிப் பணிகளைக் கவனிக்க எனக்கு அடிப்படை வசதிகள்கூட செஞ்சுத்தரலை. ஃபேக்ஸ் மிஷினை நானே சொந்தமா வாங்கினேன். டைப் அடிக்கணும் என்றால் வெளியில் கொடுத்து அடிச்சுக்கிட்டேன். இப்படிக் கட்சிப் பணிகளுக்கு சொந்த பணத்தைச் செலவழித்தேன். கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்திலேயே (கமலாலயம்) ரங்கநாதன் மற்றும் ராஜசிம்மன் ஆகிய இருவரும்தான் ஆட்டிப் படைக்கிறார்கள்.

இவர்களை இயக்கும் சூத்திரதாரி இல.கணேசன் தான். கமலாலயத்துக்கு வரும் கட்சிக்காரர்கள் தலைவர் இருக்கிறாரா என்று கேட்டால் சரியான பதில்கூட சொல்ல மாட்டார்கள். எவ்வளவோ அவமானங்கள்.

கேள்வி: உங்கள் கட்சியில் சாதிய உணர்வுகள் தலை விரித்து ஆடுகிறது என்று பலகாலமாக செய்திகள் வருகின்றன. நீங்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதால் தான் அவமானப்படுத்துகிறார்களா?
டாக்டர் கிருபாநிதி: (சற்று மவுனத்திற்குப்பிறகு) நடக்கிறதை எல்லாம் பார்க்கும்போது அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கு. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருத்தன் தலைமைப் பதவியில் இருக்கிறதை அவங்களால் ஜீரணிக்க முடியலை.
பா.ஜ.க-வில் பார்ப்பனரல்லாதோரின் நிலை எல்லா காலகட்டத்திலும் இப்படித்தான் இருந்திருக்கிறது. பா.ஜ.கவின் செயல் வீராங்கனையான உமாபாரதி, பார்ப்பனர்களின் ஆதிக்கம் குறித்துப் புழுங்கியிருக்கிறார். அதனாலேயே கட்சியின் உயர்பதவிகளில் இருந்து தள்ளி வைக்கப்பட்டிருக்கிறார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில் உத்தர பிரதேச முதல்வராக இருந்த கல்யாண் சிங், தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் என்பதால் தன்னை முதல்வர் பதவியிலிருந்து இறக்க, பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாக்கியது பா.ஜ.க எனக் குற்றம்சாட்டி இருக்கிறார்.
பா.ஜ.க-வின் இந்தப் பார்ப்பன பாரம்பரியம் இன்று நேற்றல்ல; தொன்று தொட்டுத் தொடர்வது தான். கட்சியின் மீதான விமர்சனங்களைக் களைய மட்டும் பிற்படுத்தப்பட்டோரையும், தாழ்த்தப்பட்டோரையும் பயன்படுத்திக் கொள்வதாக அக்கட்சியில் இருந்த பலருமே குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
பா.ஜ.க பார்ப்பனர்களின் தீண்டாமைக் கொள்கை நாடறிந்த விஷயமாக இருக்கும்போது, அதை மறைப்பதற்காக பஞ்சமி நிலம் காக்க களமிறங்கியிருப்பதாக நாடகமாடி, மாட்டிக்கொண்டு முழிப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.