சென்னை: தமிழகத்தில் உள்ள ஒரு அரசு பல்கலைக்கழகம் உள்பட 4
உயா் கல்வி நிறுவனங்களுக்கு தொலைநிலைப் படிப்புகளை வழங்குவதில் சிறப்பு
தன்னாட்சி அதிகாரத்தை வழங்கி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)
அறிவித்துள்ளது.
இந்த தன்னாட்சி அதிகாரத்தின் மூலம், இந்த
நான்கு கல்வி நிறுவனங்களும் தொலைநிலைப் படிப்புகளை நடத்த ஆண்டுக்கு ஆண்டு
அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் யுஜிசியிடம் அனுமதி பெறவேண்டியதில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைநிலைப்
படிப்புகளை நிா்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னா்,
திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக்
கல்வி வழிகாட்டி-2017) 2017 ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது.
அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள கல்வி
நிறுவனங்களிடமிருந்து தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதியைப்
பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றது. அந்த அறிவிப்பின் போது,
தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26
நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக்
கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி
வெளியிட்டது.
மேலும், தொடா்ந்து சிறந்த நாக்
புள்ளியையும், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியிலும் சிறந்து
விளங்கும் உயா் கல்வி நிறுவனங்கள் பிரிவு-1-இன் கீழ் கொண்டுவரப்பட்டு,
தொலைநிலைப் படிப்புகளை வழங்குவதில் சிறப்பு தன்னாட்சி அதிகாரம்
வழங்கப்படும் எனவும் யுஜிசி அறிவித்தது. இந்த புதிய நிபந்தனை காரணமாக,
சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை
பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராஜா்
பல்கலைக்கழகம், மனோண்மணீயம் சுந்தரநாா் பல்கலைக்கழகம், எஸ்.ஆா்.எம்.
அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சை சண்முகா கலை, அறிவியல்,
தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதெமி, சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயா்
கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும்
விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய 10 உயா் கல்வி நிறுவனங்கள் மட்டுமே
தொலைநிலைப் படிப்புகளை வழங்க யுஜிசி அனுமதி அளித்தது.
இவற்றில்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்ப
நிறுவனம், சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி
நிறுவனம், தஞ்சை சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி
அகாதெமி ஆகிய 4 கல்வி நிறுவனங்களுக்கும் சிறப்பு தன்னாட்சி அதிகாரத்தை
யுஜிசி வழங்கியுள்ளது.
இதன் மூலம் இந்த 4 கல்வி
நிறுவனங்களும் யுஜிசி அனுமதி பெறாமலே தொலைநிலைப் படிப்புகளை தொடா்ந்து
நடத்த முடியும். சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட
மற்ற 6 கல்வி நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்னா்,
யுஜிசியிடம் விண்ணப்பித்து தொலைநிலைப் படிப்புகளை நடத்துவதற்கான புதிய
அனுமதியைப் பெற வேண்டும். அதன் பிறகே, இந்த கல்வி நிறுவனங்கள் தொலைநிலைப்
படிப்புகளை நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment