
புதுடெல்லி
வரும் நவம்பர் 4-ல் காங்கிரஸ்
நடத்தும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அதன் தலைவர்களுக்கு சோனியா காந்தி
அழைப்பு விடுத்துள்ளார். இதன் ஆலோசனைக்குப் பின் மத்திய அரசிற்கு எதிரா
தேசிய அளவில் 10 நாட்கள் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களவையில்
தொடர்ந்து இரண்டாம் முறையாக காங்கிரஸ் தோல்வி அடைந்தது. எனினும், இதற்கு
சமீபத்தில் நடைபெற்ற ஹரியணா, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்களில் கிடைத்த
கூடுதல் தொகுதிகள் உற்சாகத்தை அளித்துள்ளன.
இதனால்,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் நவம்பர் 4 ஆம் தேதி நாடு
முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இவர்களுடன் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அரசை
எதிர்த்து தேசிய அளவில் 10 நாட்களுக்குப் போராட்டம் நடத்தத்
திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், பொருளாதார மந்தநிலை, விவசாயிகள்
பிரச்சினை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை முன்னிறுத்தப்பட உள்ளன.
இந்தப் போராட்டம் அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் டெல்லி சட்டப்பேரவை
தேர்தலையும், நவம்பர் 30-ல் தொடங்கும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத்
தேர்தலையும் மனதில் வைத்து நடத்தப்படுவதாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு
மாநிலத்திலும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் பிரம்மாண்டமான
பொதுக்கூட்டங்களுடன் இந்தப் போராட்டம் முடிவுபெற உள்ளது. தேசிய அளவில்
டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சோனியாவும் ஒரு மாபெரும்
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
நவம்பர் 18 முதல்
தொடங்க உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் இடையே பல்வேறு
விவகாரங்களில் ஒத்த கருத்தை வளர்க்கவும் இந்தப் போராட்டம் பயன்படுத்தப்பட
உள்ளது. இப்போராட்டத்தின் மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா, தேசிய அளவில் ஒரு
வலுவான எதிர்க்கட்சித் தலைவராக தன்னை முன்னிலைப்படுத்த உள்ளார்.
No comments:
Post a Comment