உன் மனைவியைக் கொலை செய்து புதைத்துவிட்டேன்" என மலேசியாவில் உள்ள பெருமாளுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியுள்ளார்.
பொன்னமராவதி அருகே கள்ளக் காதலியைக் கொலை செய்து உடலைக் கண்மாயில் புதைத்துச் சென்ற அரசு ஊழியரை போலீஸார் கைதுசெய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கொன்னைப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் மலேசியாவில் வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி பாண்டிச்செல்வி (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், பாண்டிச்செல்வி தன் குழந்தைகளுடன் கொன்னைப்பட்டியில் வசித்துவந்தார்.
இந்த நிலையில்தான், பாண்டிச்செல்வி நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்பவர்களின் பொறுப்பாளராக இருந்துள்ளார். பணி நிமித்தமாக, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்று வரும்போது, அங்கு அலுவலக உதவியாளராக பணியாற்றிவந்த ரெங்கையா (35) என்பவருடன் நட்பாகி பழகியுள்ளார். நாளடைவில் இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர்.

பாண்டிச்செல்வி ரெங்கையாவிடம் நகை, பணம் எல்லாம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், சமீப காலங்களில் ரெங்கையாவிடம் கொடுத்த பணம், நகைகளைக் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும், இதற்கு ரெங்கையா மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பத்தன்று பாண்டிச்செல்வி, ரெங்கையா ஆகியோர் வாழைக்குறிச்சி ஊராட்சிப் பகுதியில் உள்ள ஒரு கண்மாய் பகுதியில் தனியாக சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது பாண்டிச்செல்வி தன்னுடைய நகை மற்றும் பணத்தைக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரெங்கையா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், பாண்டிச் செல்வியின் கழுத்து மற்றும் உடலில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த பாண்டிச்செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொலையை மறைப்பதற்காக பாண்டிச்செல்வியின் உடலை அங்கேயே குழி தோண்டி புதைத்துவிட்டுச் சென்றுவிட்டார். தன்னுடைய மகளைக் காணவில்லை என பாண்டிச் செல்வியின் தந்தை சோலைமுத்து பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், பாண்டிச்செல்வியைக் கொலை செய்த ரெங்கையா, ``உன் மனைவியைக் கொலை செய்து, புதைத்துவிட்டேன்" என மலேசியாவில் உள்ள பெருமாளுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பெருமாள் அளித்த தகவலின் பேரில், ரெங்கையாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீஸார் விசாரணையில், ``எங்கள் இருவருக்கும் நீண்ட நாள்களாக தொடர்பு இருந்தது. பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது. பாண்டிச்செல்வி பணம், நகையை திருப்பிக் கேட்டதால் கொலை செய்தேன்" என வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து, பொன்னமராவதி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், டிஎஸ்பி தமிழ்மாறன், இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் காவல்துறையினர், வருவாய்த்துறை அலுவலர்கள் வாழைக்குறிச்சி கண்மாய் பகுதிக்குச் சென்று பாண்டிச்செல்வியின் உடலை தொண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலை செய்த ரெங்கையா மாற்றுத்திறனாளி எனத் தெரியவந்தது. மேலும், பாண்டிச்செல்வியின் உடலை புதைப்பதற்கு பள்ளம் தோண்டி கொடுத்தாக வாழைக்குறிச்சியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரையும் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணம், நகை கேட்டு தொந்தரவு கொடுத்ததால் கள்ளக்காதலியை அரசு ஊழியர் கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


No comments:
Post a Comment