கடந்த 1912-ம் ஆண்டு பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய ஆர்.எம்.எஸ். டைட்டானிக் சொகுசுக் கப்பல், கடலில் உள்ள உப்பு மற்றும் உலோகங்களை உண்ணும் பாக்டீரியாக்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து நியூயார்க்கிற்கு ஏப்ரல் 10, 1912-ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. இந்தப் பயணத்தின்போது எதிர்பாராதவிதமாக டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி அட்லாண்டிக் கடலில் சுமார் 2,224 பயணிகளுடன் மூழ்கியது. இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தக் கோரச் சம்பவம் உலக வரலாற்றில் நீங்கா துயரத்தை ஏற்படுத்தியது.

ஆழ்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் இருக்கும் இடத்தை கடலியலாளரான ராபர்ட் பல்லார்ட் மற்றும் அவரது குழுவினர் 1985-ல் கண்டுபிடித்தனர். பின்னர் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ``ட்ரைடன் சப்மரைன்ஸ் ஆப் செபாஸ்டியன்" என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஆழ்கடல் டைவர் குழு, 2004-ல் டைட்டானிக் இருக்கும் இடத்தில் சில ஆய்வுகளை மேற்கொண்டு பல்வேறு படங்களையும் வெளியிட்டது.
தற்போது அதே நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர், மீண்டும் கடந்த மாதம் டைட்டானிக் கப்பலைச் சோதிக்கச் சென்றனர். அட்லாண்டிக் கடலில் 12,500 அடி ஆழத்தில் இருக்கும் இந்த டைட்டானிக் கப்பலை, இந்தக் குழு ஆகஸ்ட் மாதம் மட்டும் ஐந்து முறை சோதனை செய்துள்ளது. இந்தச் சோதனையின்போது டைட்டானிக் கப்பல் வெகு வேகமாக உப்பினாலும், உலோகம் உண்ணும் பாக்டீரியாக்களாலும் கடலின் அழுத்தத்தினாலும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது.
``டைட்டானிக் கப்பலில் அழிந்துவரும் இடங்களில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது, கப்பலின் கேப்டன் அறைதான். இதற்கு முன்பு வலைதளங்களில் வெளியிடப்பட்ட கேப்டனின் பாத் டப் தற்பொழுது காணாமலே போய்விட்டது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் இத்தனை ஆண்டுகளில் உலோகம் உண்ணும் பாக்டீரியாக்கள் அதைத் தின்று அழித்துவிட்டது. இந்த உலோகம் உண்ணும் பாக்டீரியாக்கள் இயற்கையானதுதான். ஆனால், டைட்டானிக் கப்பல் வெகு வேகமாக அழிந்து வருவதற்கு இந்தப் பாக்டீரியாக்கள் மொத்தமாக ஒரு குழுவாகச் செயல்படுவதே முக்கியக் காரணம்” என்று ஆய்வுசெய்த விஞ்ஞானி லோரி ஜான் கூறினார். மேலும், விபத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் விதமாக மலரஞ்சலி செலுத்தப்பட்டதென்று ஆய்வுக்குழு தெரிவித்தது.
இதன் மூலம் ஆழ்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் இன்னும் சில வருடங்களில் இல்லாமலே போய்விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நம் நெஞ்சங்களில் டைட்டானிக் கப்பல் மற்றும் அதைச் சுற்றிய கதைகள் என்றும் மூழ்காமல் நிலைத்திருக்கும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.


No comments:
Post a Comment