Latest News

செல்ஃபியால் நேர்ந்த சோகம் - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் 12 நாள்கள் கழித்து மீட்பு


Nilgiris
Nilgiris
நீலகிரி மாவட்டத்தில், இந்த மாத தொடக்கத்தில் பெய்த பெருமழை, கடந்த 100 ஆண்டுகளில் கண்டிராத பெருவெள்ளத்தை ஏற்படுத்தியது. 48 மணி நேரத்தில், சுமார் 2 ஆயிரம் மி.மீ மழை பெய்தது. மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டும், மண் சரிவில் சிக்கியும் 4 பெண்கள், இரண்டு ஆண்கள் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், 155 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
Rescue operation in Nilgiris
Rescue operation in Nilgiris
பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மலைக் காய்கறிகள், பயிர்கள் நீரில் மூழ்கின. சுமார் 150 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். அவலாஞ்சி,எமரால்டு,கூடலூர்,பந்தலூர் பகுதிகளில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுவருகிறது.
மழை வெள்ளத்துக்கு 6 பேர் உயிரிழந்ததாக அறிவித்து நிவாரணம் வழங்கப்பட்டது. கடந்த 8-ம் தேதி, கூடலூர் ஓவேலி எல்லமலைப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிக்குச் சென்ற 43 வயதான சைனுதின் என்பவரைக் காணவில்லை.
zainuddin
மண் சரிவில் புதைந்திருக்கலாம் என 8 -ம் தேதி மாலை முதல் தீ அணைப்புத் துறையினர், ராணுவம், போலீஸார், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் பொக்லைன் இயந்திரம் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் 12 நாள்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். எவ்வளவு தேடியும் சைனுதின் உடலை கண்டறிய முடியவில்லை.
இந்த நிலையில், சைனுதின் காணாமல்போன இடத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள கண்டம்புழா ஆற்றுப் பகுதியில், சிதைந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக அந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த காவலர்கள், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இது, சைனுதின் உடல்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
rain fall in Nilgiris
rain fall in Nilgiris
இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், “ கடந்த 8-ம் தேதி மதியம், எல்லமலை பகுதியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து காட்டாறு போல் ஓடியது. இதைப் பார்க்க, நண்பர்கள் மூன்று பேருடன் சைனுதின் சென்றார். திடீரென அந்தப் பகுதியில் மண் சரிவு ஏற்பட, மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஆனால், சைனுதின் மாட்டிக்கொண்டார்” என்றனர்.
உடலைத் தேடும் பணியில் ஈடுபட்ட தீ அணைப்பு வீரர் ஒருவர் கூறுகையில், “ பொக்லைன் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் பலரும் இணைந்து 12 நாள்களும் இடைவிடாது உடலைத் தேடினோம். எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. மிகுந்த சவால் நிறைந்த பணியாக இருந்தது .ஒருகட்டத்தில், தேடுதல் பணியை நிறுத்திவிடலாம் எனத் தோன்றியது. கிட்டத்தட்ட தேடுதல் பணியை நிறுத்தும் முடிவுக்கு அனைவரும் வந்துவிட்டனர். உறவினர்களும் நம்பிக்கை இழந்துவிட்டனர். கடைசியில், நாங்கள் தேடிய இடத்துக்கு 5 கி.மீ தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது என்றார்.
Rescue operation in Nilgiris
Rescue operation in Nilgiris
இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''சைனுதின் இறப்பு தொடர்பாக விசாரித்ததில், இவர் காட்டாற்று வெள்ளத்தின் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இறந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் செல்ஃபி எடுக்கச் சென்ற காரணத்தால் இறந்துள்ளதால், சைனுதின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்குவதுகுறித்து ஆலோசனை நடத்திவருகிறோம்“ என்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.