Latest News

கமலின் ‘ஆபரேஷன் 500’ சக்சஸ் ஆகுமா?


kamal haasan
kamal haasan
நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகள் வாங்கிய கட்சி, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக இருக்க வேண்டும் என்ற முடிவுடன் இந்தத் திட்டத்தை கையில் எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்!

மக்கள் நீதி மய்யம், கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ‘தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரையும் கட்சியின் பொறுப்பாளர்கள் சந்திக்கும்வண்ணம், புதிய பொறுப்புகள் அறிவிக்கப்படவுள்ளன. அதன் அடிப்படையில், ஆறு பொதுச்செயலாளர்கள் அடங்கிய பட்டியல் முதலில் வெளியிடப்படுகிறது’ என்று அந்தப் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் குழு, மக்கள் நீதி மய்யத்துக்கு ஆலோசனை வழங்கி வந்தது. அதன் அடிப்படையிலேயே மேற்கண்ட செயல்பாடுகள் தொடங்கியிருக்கின்றன.
உமாதேவி
உமாதேவி
இதுகுறித்து அந்தக் கட்சி நிர்வாகிகளிடம் பேசியபோது, “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் நாங்கள் தனித்து களமிறங்கினோம். நகர்ப்புறங்களில் 12 முதல் 25 சதவிகிதம் வரை வாக்குகள் வாங்கினோம். கிராமப்புறங்களில் சில இடங்களில் வாக்குகளே விழவில்லை. எதனால் இப்படியானது என்று கிஷோர் டீம் ஆராய்ந்தது.
அப்போது கீழ்மட்ட அளவில் கட்சியின் கட்டமைப்பு இல்லாததும், கீழ்மட்ட நிர்வாகிகள் வேலைசெய்யாததுமே காரணம் என்பது புரிந்தது. அதற்குப் பிறகுதான் கட்சியின் கட்டமைப்பை மாற்ற முடிவுசெய்யப்பட்டது. கட்சியின் மாவட்டங்கள், எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்போது ஆறு பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் எந்தக் கட்சியும் செய்யாத ஒரு புதிய உத்தியை நாங்கள் கையில் எடுத்துள்ளோம். அதாவது, தேர்தலுக்கென்று பிரத்யேகமாக மாநில அளவில் ஒரு பொதுச்செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், மாவட்டம் தோறும் ஒரு தேர்தல் செயலாளர் நியமிக்கப்பட உள்ளார். இவர்களின் பணி, அடுத்து வரவிருக்கும் தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்துவது, பூத் கமிட்டி அமைப்பது, அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் பிரதான பிரச்னைகளைத் தலைமையின் கவனத்துக்குக் கொண்டுவருவது. இவர்கள், தமிழகம் முழுவதும் தனி அமைப்பாகச் செயல்படுவார்கள்.
கமலின் ‘ஆபரேஷன் 500’ சக்சஸ் ஆகுமா?
மேலும், தலைமையிடத்துக்கு எனத் தனிப் பொதுச்செயலாளர் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியில் இருப்பவர்கள், மீடியா, ஐ.டி பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைப்பார்கள். மாவட்டவாரியாக ஐ.டி மற்றும் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் பதவியும் அறிவிக்கப்படவுள்ளது. ஒரு மாவட்டத்துக்கு ஒரு தலைவர், மூன்று பொதுச் செயலாளர்கள், ஆறு இணைச் செயலாளர்கள், ஆறு துணைச் செயலாளர்கள், பத்து கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன் நோக்கமே, கட்சியின் பெரும்பாலானவர்கள் பொறுப்பில் இருக்க வேண்டும்; அந்தப் பொறுப்பைவைத்து அவர்கள் மக்களிடம் கட்சியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான். ஒவ்வொரு மாவட்டத்தில் தனிப்பட்ட நபரின் கையில் கட்சி இருக்காது என்பதும் இதன் முக்கிய அம்சம். இதனால், பலருடைய கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும்.

இப்போது மாவட்டவாரியாக ஆய்வுப் பணிகளை ஆரம்பித்துள்ளோம். மண்டல வாரியாகக் கூட்டங்களை நடத்திவருகிறோம். எங்களின் இலக்கே, அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் இருக்க வேண்டும் என்பதுதான். இந்த ஒட்டுமொத்த திட்டத்தையும் 500 நாள்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று தலைமை உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு ‘ஆபரேஷன் 500’ என்று பெயர் சூட்டியுள்ளார்கள். இப்போது, கிஷோர் டீம் மாவட்டவாரியாகக் களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டுவருகிறது. இனி எங்கள் கட்சியில் நடக்கப்போகும் மாற்றங்களைப் பொறுத்திருந்து பாருங்கள்” என்கிறார்கள்.
ஏற்கெனவே மக்கள் நீதி மய்யத்தில் பொறுப்பில் இருந்த ஸ்ரீபிரியா மற்றும் கோவை சரளா ஆகியோரின் செயல்பாடுகள், கமலுக்கு திருப்தியளிக்கவில்லை என்கிறார்கள். இதனால் இந்த முறை அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பிரபல குடும்பத்தைச் சேர்ந்த உமாதேவி என்பவரை, பொதுச்செயலாளராக அறிவித் துள்ளார் கமல்.

“என்னுடைய தொழிற்சாலையில் ஏராளமான பெண்கள் வேலை செய்கிறார்கள். இதனால், பெண்களின் நிலையை நன்கு அறிவேன். அதைப் பற்றி தலைமைக்குச் சில கருத்துகளை அனுப்பியிருந்தேன். அதன் அடிப்படையில் எனக்கு இந்தப் பதவியைக் கொடுத்திருக்கலாம்” என்கிறார் உமாதேவி.

அதேபோல், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மெளரியா, ஐ.ஏ.எஸ் அதிகாரி பஷீர் அகமது உள்ளிட்டோருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது. கமலுக்கு நெருக்கமான டாக்டர் மகேந்திரன், துணைத் தலைவராகவே தொடர உள்ளார். இன்னும் சில நாள்களில் வேறு சில அறிவிப்புகளும் வரவுள்ளன.
`ஆபரேஷன் 500’ வெற்றிபெறுமா என்பதை, வரும் தேர்தலில் மக்கள் முடிவுசெய்துவிடுவார்கள்!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.