Latest News

பல்பு எரிகிறதா என்று பாருங்கள்


பங்காளிப் பகைவர்களை மிஞ்சிக் காட்ட வேண்டுமென்ற உத்வேகத்தில் ஏகப்பட்ட விளக்குகளைப் போட்டுக்கொண்டு ஊர்வலம் விடுவது நம்ம ஊர்ப் பண்ணையார்கள் மட்டுமல்ல, பணக்கார உலகத்துக்கே பொதுவான குணம் இது என்கிறார், லீ பில்லிங்ஸ் (ஸீட் மாகசீன்).
நூற்றுக் கணக்கான கிலோமீட்டர் உயரத்திலிருந்து செயற்கைக் கோளின் விழி வழியே நம்மை நாமே பார்க்கும்போது, மனித நாகரீகத்தின் உன்னதமான சில தருணங்கள் தென்படுகின்றன : சீனப் பெருஞ் சுவர், எகிப்தின் பிரமிடுகள். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மைலாப்பூர் ரயில் நிலையம். பச்சை- பழுப்பு செஸ் கட்டம் போல் வயல்கள்; அவற்றின் நடுவே நேராக ஓடும் நெடுஞ்சாலைகள்… இதனுடன் கூடவே பல மனித அநாகரீகங்களும் தென்படுகின்றன. புகை கக்கும் தொழிற்சாலை சிம்னிகள், ராட்சச வாய் கடித்த சமூசா போல் கல் குவாரி காண்ட்ராக்டர்களால் சேதப்பட்ட குன்றுகள் என்று பலவற்றை கூகிள் எர்த்தில் பார்க்க முடிகிறது.
தென்கொரியாவும், வடகொரியாவும்
அரை புத்திசாலி, அரை முட்டாள் இனம் ஒன்று இந்த கிரகத்தில் வாழ்வதற்கான அடையாளங்கள் அனைத்தும் சாட்டிலைட்டிலிருந்து தெரிகின்றன. ஆனால் அந்த செயற்கைக் கோள் அரை சுற்று சுற்றி இரவின் கருமைக்குள் போய்விட்டால், நம் நாகரீகத்துக்கு அடையாளமாக ஒன்றே ஒன்றுதான் கண்ணுக்குத் தெரிகிறது: மின்சார விளக்குகள்.
1962-ல் விண்வெளிக்குப் போன (சே !) முதல் அமெரிக்கர் ஜான் க்ளென். அவர் ஆஸ்திரேலியாவிற்கு மேலாகப் பறந்தபோது, பெர்த் நகரின் மக்கள் ஒரு பரிசோதனை செய்தார்கள். தங்கள் ஊரில் எல்லோரிடமும் சொல்லி வைத்து, எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விளக்குகளை ஆன் பண்ணி வைத்தார்கள். ஜான் இதை மேலிருந்து கவனித்து, வெளிச்சத் தீவு ஒன்று தெரிவதை உறுதிப்படுத்தினார்.
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை அளவிடுவதற்கு, அவர்கள் இரவில் எரிக்கும் மின்சார லைட்களின் எண்ணிக்கை ஒரு முக்கியமான அளவுகோல். உதாரணமாக, தென் கொரியாவில் டூப்ளிகேட் எலெக்ட்ரானிக் பொருட்களை விற்றுச் செல்வ வளம் கொழிக்கிறது. இரவு நேரத்தில் சாட்டிலைட்டிலிருந்து பார்த்தால் ஜோதி மயமான முந்திரிப் பருப்பு மாதிரி இருக்கிறது. ஆனால் பாவம், கம்யூனிஸ்ட் பிடியில் சிக்கிய வட கொரியாவோ இருளடைந்து கிடக்கிறது. அதிகாரிகள் வசிக்கும் வீடுகளில் மட்டும்தான் விளக்கு எரிகிறது.
இது ஃபோட்டோ; அன்றைய பொருளாதார நிலவரம். பல வருடங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்கள் கிடைத்தால் ஒரு நாடு முன்னேறியிருக்கிறதா, பின்னேறியிருக்கிறதா என்பதை ஊகிக்க முடியும். சோவியத் யூனியனின் சோசலிச ஏழ்மை நீங்கி, ரஷ்யா படிப்படியாக சுபிட்சம் பெற்ற வரலாறே சாட்டிலைட் படங்களில் தெளிவாகப் பதிவாகியிருக்கிறது. ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற முன்னேற, இரவு நேர வெளிச்சங்களும் அதிகரிக்கின்றன.
இத்தனைக்கும் இந்தப் படங்கள் அமெரிக்க விமானப் படையின் வயசான சாட்டிலைட்கள் எடுத்தவை. ஒரு சதுர கிலோமீட்டருக்குக் குறைவான பொருட்கள் அதன் கண்ணுக்குத் தெரியாது !
ப்ரௌன் பல்கலைக் கழகத்தின் பொருளாதார வல்லுனர்கள் ஹெண்டர்ஸன், வேய்ல் என்பவர்கள், தங்கள் மாணவர்களை மாடு மாதிரி வேலை வாங்கி, கடந்த பல வருட செயற்கைக் கோள் படங்களை ஆராய்ந்து அறிவித்திருக்கிறார்கள் : ஒரு நாட்டின் GDP என்னும் மொத்த உற்பத்தியும் மின்சார விளக்கு எரிப்பதும் நேரடியாகத் தொடர்பு உடையவை.
இதில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு உபயோகமான புள்ளி விவரம் இருக்கிறது. ஏழை நாடுகளில் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படாத இண்டஸ்ட்ரியில்தான் நடக்கின்றன; பில் போடாமல் டாக்ஸ் கட்டாமல் சந்துக்கு சந்து நடத்தப்படுகிற  கம்பெனிகள்தான் பெரும்பாலானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்றன. அரசாங்கப் புள்ளி விவரங்கள் எல்லாம் இருநூறு சதவீதம் தள்ளித்தான் காட்டும்! எனவே செயற்கைக்கோள் படங்களிலிருந்து கிடைக்கும் பொருளாதார அளவீடுகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
ஐரோப்பாவும், ஆப்பிரிக்காவும்
1992 முதல் 2003 வரை உள்ள தகவல்களைப் பார்த்தால், காங்கோ ஜனநாயகக் குடியரசின் அரசாங்க அறிக்கைகள் யாவும் அழுது வடிந்தன; நாட்டின் ஜி.டி.பி சுருங்கிக் கொண்டே வருவதாகத் தெரிவித்தன. ஆனால் இரவு நேர சாட்டிலைட் படங்கள் சொல்லும் கதையே வேறு; காங்கோவின் பொருளாதாரம் உண்மையில் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அத்தனையும் வரி கட்டாத நிழல் பொருளாதாரம் ! இதற்கு நேர் மாறாக, மியான்மர் சர்வாதிகாரிகளைக் கேட்டால், ‘இந்த சூ-சியைப் பிடித்து ஜெயிலில் போட்ட அன்றிலிருந்தே நாட்டின் பொருளாதாரம் அமோகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது’ என்றுதான் சொல்வார்கள். ஆனால் செயற்கைக் கோள் படங்களைப் பார்த்தால் நாளுக்கு நாள் நாடு இருளடைந்து வருவது தெரிகிறது.
கிராமப்புறத்து வயல்களில் விளைச்சல் நன்றாக இருக்கும் வருடங்களில், அருகிலுள்ள நகரங்களில் விளக்குகளின் பிரகாசமும் அதிகரிக்கிறது. விவசாயிகள் உபரி வருவாயில் ட்ராக்டர் முதல் டி.வி வரை வாங்குகிறார்கள். நைட் க்ளப்களிலும் மதுக் கடைகளிலும் விடிய விடியக் கூட்டம் இருக்கிறது. மாறாக, வான் பொய்த்து விவசாயி வாடினால் சிட்டியில் விளக்கணைந்து விடுகிறது !
பழங்கால மிலிட்டரி செயற்கைக் கோள்களை அவ்வளவாக நம்ப முடியாதுதான். மேகம் மறைப்பது, நிலா வெளிச்சம், மின்னல் என்று பலவிதத் தொந்தரவுகளால் சாட்டிலைட் படங்கள் மாசடைகின்றன. இருந்தும், புள்ளி விவரங்களே இல்லாமல் இருப்பதற்குப் பதிலாக, பொருளாதாரத்தை அளவிட ஏதோ ஒரு ஆதாரம் இருப்பது நல்லதுதானே? இதனால் நாஸாவிடம் கேட்டு இரவு நேர விளக்குகளை இன்னும் தெளிவாகப் படம் எடுப்பதற்காகவே ‘நைட்சாட்’ என்று ஒரு செயற்கைக் கோள் விடுமாறு விஞ்ஞானிகள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நைட்சாட் வந்துவிட்டால், ஐந்து வருடத்துக்கு ஒரு முறை நம் ஊரின் கரண்ட் இல்லாமல் விளக்குகள் எப்படி ஒளிர்ந்து மங்குகின்றன என்று கவனிப்பது சுவாரசியமான பொழுது போக்காக இருக்கும்.
(Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்)

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.