Latest News

இன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி

புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து தெரிவித்ததற்கு மதிமுக பொதுசெயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டினுடைய பன்முகத் தன்மையைச் சிதைத்து, சமூக நீதிக்குக் கொள்ளி வைத்து, ஏழை எளிய, தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை சூன்ய மயமாக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு கலை உலகின் ஒளிவிடும் நட்சத்திரமான சூர்யா தனது நியாயமான எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

நாட்டின் எதிர்காலத்துக்கே ஆபத்தான கூடாரத்திலிருந்து அதற்கு எதிர்ப்பு ஓங்காரக் குரல் எழுந்தது.சமூக நீதியிலும், மாநில சுயாட்சியிலும் மாறாத பற்று கொண்டவர்கள் நடிகர் சூர்யாவை ஆதரித்து குரல் தந்தபோது நான் மகிழ்ந்தேன். ஸ்டெர்லைட் மற்றும் தேசத் துரோக வழக்குகளின் பணிச் சுமையால் நடிகர் சூர்யாவை ஆதரித்து உடனே அறிக்கை தரும் கடமையில் தவறிவிட்டது என் மனதைக் காயப்படுத்துகிறது.

வியந்தேன், திகைத்தேன்.
நடிகர் சூர்யாவின் விளக்கத்தைப் பத்திரிகைகளில் படித்தபோது, அவரது மனிதாபிமானப் பண்பை எண்ணி வியந்தேன், திகைத்தேன். கலை உலகில் வெள்ளித் திரையில் ஒளிவிடும் நட்சத்திரம், அன்னை தெரசா போன்றவர்கள் செய்த தியாகப் பணியின் சாயல் சூர்யாவின் 'அகரம் பவுண்டேசனி'ல் திகழ்வதை எண்ணி மிகவும் பரவசம் அடைந்தேன்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள்
தமிழ் எழுத்துக்களில் முதல் உயிர் எழுத்தைக் கொண்டுதான் "அகர முதல" என திருக்குறள் தொடங்குகிறது. திருவள்ளுவர் சொன்ன மனிதநேயக் கண்ணோட்டம் 'அகரம் பவுண்டேசனி'ல் பிரகாசிக்கிறது. அதில் மூன்றாயிரம் மாணவர்கள் உயர் கல்வி பெற்றுள்ளனர். பொறியியல், கலை அறிவியல், மருத்துவத் துறைகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அகரத்தின் மூலமாக ஏற்றம் பெற்றனர்.

90 விழுக்காடு மாணவர்கள்
90 விழுக்காடு முதல் தலைமுறைப் பட்டதாரிகள். கிராமங்களுக்கு தேடிச் சென்று அகரம் நிறுவனம் இந்த உன்னதத் தொண்டைச் செய்கிறது. பெற்றோரை இழந்த ஒரு மாணவியை மருத்துவராக்கி, கல் உடைக்கும் தொழிலாளியின் மகனை, ஆடு மேய்க்கும் பெற்றோரின் மகனை மருத்துவர்களாக்கி இருக்கிறது அகரம் நிறுவனம். 'நீட்' தேர்வு இருந்திருந்தால் இவர்கள் மருத்துவர்கள் ஆகியிருக்க முடியாது.

தனி மனித ஒழுக்கம்
தியாக சீலர் காமராசர் தமிழ்நாட்டில் கல்விக் கண்களைத் திறந்தார்.புதிய கல்விக் கொள்கை ஏழை எளிய மாணவர்களின் கண்களில் மண்ணை வீசுகிறது. நடிகர் சூர்யாவின் தந்தை குணச்சித்திர நடிகரான சிவக்குமார் கலைத் துறையில் ஒழுக்கமானவர். நிகரற்ற இலக்கியச் சொற்பொழிவாளர். அவரது புதல்வர்கள் சூர்யாவும், கார்த்திக்கும் தந்தையைப் போலவே தனி மனித ஒழுக்கம் கொண்டவர்கள். அகந்தையும், ஆணவமும் அறவே இல்லாதவர்கள்.

எல்லையற்ற மகிழ்ச்சி
நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது நன்மையாக முடிந்தது. "இன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்" என்ற சேக்ஸ்பியரின் வாசகம்தான் சூர்யா பிரச்சனையில் நடந்துள்ளது. அகரம் நிறுவனம் மூலம் செய்த பணிகளை அவர் விளம்பரப்படுத்திக்கொண்டது இல்லை. பிறர் அறியமாட்டார்கள். அந்த உயர்ந்த சேவையை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன். போற்றுதலுக்குரிய சூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ்ச் சமூகத்திற்கு தோள் கொடுத்து உயர்த்துவார்கள் என பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.