Latest News

சமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக தேர்வான டி.ராஜாவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2012 முதல் இந்திய கம்யூ. பொதுச்செயலாளராக இருந்த எஸ்.சுதாகர்ரெட்டி உடல்நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்த நிலையில், டெல்லியில் நடந்த கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டி.ராஜாவுக்கு, முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அவருக்கு, அரசியல் கட்சியினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாட்டை சேர்ந்த டி.ராஜாவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரரான டி.ராஜாவை மனதார வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏழை எளிய மக்களின் உரிமைகளை காக்க துணிச்சலான போராட்ட குணத்திற்கு சொந்தக்காரரான அவர் அரசியல் சட்டத்தின் அம்சங்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நேரத்தில் பொதுச் செயலாளரானது வரவேற்கத்தக்கது.

ஜனநாயகத்தின் அடித்தளத்தை யாரும் அசைத்திட முடியாதவாறு பாதுகாக்கும் பணியில் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தில் பிறந்தவர். மாநிலங்களவை எம்.பி.யான இவர் கட்சியின் தேசிய செயற்குழுவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்தார். இவரது மனைவி ஆனி கேரளத்தை சேர்ந்தவர். அவர் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். இவர்களுக்கு அபரஜிதா என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
source: oneindia.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.