
நாளை(ஜூலை 22) மாலை 5 மணிக்குள் கர்நாடக அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறு அம்மாநில சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் இருவர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ.,க்கள் 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏ.,க்களும் வாபஸ் பெற்றுள்ளனர்.அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமா மீது சபாநாயகர் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. இந்தநிலையில், கடந்த வெள்ளியன்று சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் குமாரசாமி. ஆனால், ஓட்டெடுப்பு நடத்தாமல், நாளை காலை 11 மணி வரையில் அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் ரமேஷ்குமார். இதனை கண்டித்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தநிலையில், இன்று(ஜூலை 21) மாலை சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக மாநில சுயேட்சை எம்.எல்.ஏ.,க்களான நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மறுப்பதாகவும், எனவே அந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது நாளை மாலை 5 மணிக்குள் அவையில் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.இது கர்நாடக மாநில அரசியலில் மேலும் ஒரு உச்சபட்ச பரபரப்பை கூட்டியுள்ளது.

No comments:
Post a Comment