Latest News

முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு.! ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் நிறைவு

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசிக்க, துணை முதல்வர் ஓ,பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் நிறைவடைந்தது.

இந்த அனைத்து கட்சிகூட்டத்தில் பங்கேற்க 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், பாஜக, பாமக, தேமுதிக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட 21 கட்சிகளுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் அமமுகவின் ஒரே சட்டமன்ற உறுப்பினரான டிடிவி தினகரனுக்கு, அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை.

அரசின் அழைப்பை அடுத்து அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் கட்சி தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் தவிர திருமாவளவன், ரவிக்குமார் எம்பி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பாஜக தலைவர் தமிழிசை, நாம் தமிழர் கட்சிதலைவர் சீமான் பங்கேற்றனர்.

மேலும் மதிமுக சார்பில் மல்லை சத்யா, காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட், திராவிடர் கழகம், பாமக, தேமுதிக, முஸ்லீம் லீக் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர்.

முன்னதாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தை பொருத்த வரை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 69% இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.

எனவே மத்திய அரசின் ஆலோசனையை தமிழக அரசு ஏற்கவில்லை. இதனிடையே மருத்துவக் கல்லூரிகளில் முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டு திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தினால் மருத்துவப் படிப்பில் கூடுதலாக 25 சதவீத இடங்களை தமிழகத்திற்கு ஒதுக்கி தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனினும் மத்திய அரசின் ஆசை வார்த்தைகளை நம்பி தமிழக அரசு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். மத்திய அரசு கூறியபடி முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்தால், பின்தங்கியவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்படும் என எச்சரித்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்த வலியுறுத்தினார் ஸ்டாலின். எதிர்கட்சி தலைவரின் கோரிக்கையை ஏற்று இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்தது.

இதனையடுத்து மாலை சென்னை தலைமைச்செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், துவங்கிய அனைத்து கட்சி கூட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது.
source: oneindia.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.