Latest News

இந்தியா முழுவதும் சமத்துவபுரங்கள்: மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

இந்தியா முழுவதும் சமத்துவபுரம் அமைக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதியளித்தார்.

விழுப்புரத்தில் திமுக சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், விழுப்புரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மக்களவைத் தேர்தல் மூலம் மத்தியில் பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சியையும், தமிழகத்தில் மக்களுக்கு பயனில்லாத முதல்வர் பழனிசாமி ஆட்சியையும் அகற்றப் போகிறோம். "நம் கையில் மாநில ஆட்சி, நாம் கை காட்டுவதே மத்திய ஆட்சி' என்ற முழக்கத்தோடு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி, 30 தொகுதிகளில் முடித்திருக்கும் நிலையில், 40 மக்களைவைத் தொகுதிகள் மட்டுமன்றி, இடைத் தேர்தல் நடக்கும் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என்பது தெரிகிறது. இந்தியாவின் ஆட்சி மாற்றத்துக்கு விழுப்புரம் தொகுதி மக்களும் பங்குபெற வேண்டும். கடந்த 2003-இல் விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக மண்டல மாநாட்டில் முதன் முதலாக நான் தலைமை வகித்தேன். கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் கூட்டத்திலும் இங்குதான் பங்கேற்றேன்.

திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தில்தான் விரைவான நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் திட்டங்கள் கிடைத்தன. விழுப்புரத்தில் அரசு கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி போன்றவை கொண்டு வரப்பட்டன.

திண்டிவனம் கோபால் கவுண்டர், ஏ.கோவிந்தசாமி போன்றோர் வளர்த்த திமுகவை யாராலும் அழிக்க முடியாது. இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோனதுதான் வரலாறு. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கியதே திமுகதான். மேலும், நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதும், சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டதும் திமுக ஆட்சிக் காலத்தில்தான். ராமதாஸ் பாராட்ட வேண்டாம், அவரது சமுதாயம் பாராட்டினால் போதும்.

5 ஆண்டுகளில் 10 கோடிப் பேருக்கு வேலை தருவோம் என்றார் பிரதமர் மோடி. அப்படி யாருக்காவது வேலை வழங்கப்பட்டதா?. வெளிநாட்டு கருப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவேன் என்றார். அதுபோல வழங்கினாரா?.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு கோடிப் பேருக்கு சாலைப் பணியாளர்கள் வேலை, 50 லட்சம் மகளிருக்கு மக்கள் நலப் பணியாளர்கள் பணி, விவசாயக் கடன், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும். சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்க ஆளும் கட்சியினருக்குத் தகுதியில்லை.

இந்தியா முழுவதும் சமத்துவபுரங்கள், பட்டியல் இன மாணவர்களுக்கு அம்பேத்கர் இலவச கல்வித் திட்டம், பட்டியல் இன, பழங்குடியின மக்களுக்கு வீடுகள், மிகவும் பிற்பட்ட மக்களுக்கு மத்திய அரசுப் பணியிலும் இட ஒதுக்கீடு ஆகிய திட்டங்கள் கொண்டு வரப்படும். அரசுக் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். விழுப்புரம் - சென்னை இடையே கூடுதல் விரைவு ரயில்கள், விழுப்புரம் - மயிலாடுதுறை கூடுதல் அகல ரயில் பாதைத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

விசிக வேட்பாளர் ரவிக்குமார் மனித உரிமைக்காகவும், சமூக முன்னேற்றத்துக்காகவும் குரல் கொடுத்து வருபவர். அவரது குரல் மக்களவையிலும் ஒலிக்க வேண்டும் என்றார் அவர்.

கூட்டத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலர் க.பொன்முடி, தெற்கு மாவட்டச் செயலர் அங்கையற்கண்ணி, மாவட்டப் பொருளாளர் நா.புகழேந்தி, எம்எல்ஏக்கள் ராதாமணி, மஸ்தான், மாசிலாமணி, உதயசூரியன், கார்த்திகேயன், சீத்தாபதி சொக்கலிங்கம், வேட்பாளர் துரை.ரவிக்குமார் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

செஞ்சி: இதேபோல, ஆரணி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து, 

செஞ்சி கூட்டுச்சாலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். 

அவர் பேசியதாவது: அதிமுக தோழர்களுக்கு நான் பணிவோடு தெரிவிக்க விரும்புவது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்தின் மர்மம் கண்டுபிடிக்கப்படும். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தருவதுதான் முதல் வேலை. ஜெயலலிதா தனிப்பட்ட ஜெயலலிதா அல்ல. அவர் முதல்வராக இறந்துள்ளார் என்றார் அவர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.