எல்லா நேரங்களிலும் துன்பம் இழிவானதும் அன்று. எல்லாக் காலங்களிலும் துயரம் வெறுக்கத்தக்கதும் அன்று. சில சூழ்நிலைகளில் காயங்கள் நமக்கு நன்மை அளிக்கும்.
மனம் வலிக்கும் போதுதான் மனிதன் உருக்கமாகப் பிரார்த்திக்கிறான். கவலையேற்படும் போதுதான் இறைவனை உளப்பூர்வமாகத் துதிக்கிறான். படிக்கும் பருவத்தில் வலிகளைச் சகித்துக் கொள்ளும் மாணவன் சிறந்த அறிஞனாக உயர்வான். படிக்கும் காலத்தில் சோதனைகள் அவனைத் திணறடிக்கலாம். ஆனால் முடிவில் ஆற்றல்மிக்க அறிஞனாகப் பிரகாசிப்பான். கவிஞனின் வலி சிறந்த இலக்கியத்தைத் தரும். அவனது உள்ளத்திலும், இரத்த நாளத்திலும் கனன்று கொண்டிருக்கும் வேதனை அவனது உணர்வுகளைத் தட்டியெழுப்பும்.ஓர் எழுத்தாளனின் காயம் உயிரோட்டமான படைப்பை நமக்குத் தரும். அதில் அனுபவங்களும் நினைவுகளும் வாழும்.
காயங்களால் அவமானங்களால் சிரமங்களால் கழுவப்படாத மாணவன், மகிழ்ச்சியை மட்டுமே அனுபபித்து அழுக்குப்படாமல் உலா வரும் மாணவன் சோம்பேறியாகவே இருப்பான். அவனிடம் தளர்ச்சியும் பலவீனமும் மிகைத்திருக்கும்.
கசப்பான அனுபவங்களைச் சுவைக்காத, இன்னல்களை அசை போடாத, வலியறியாத கவிஞனின் கவிதைகள் மிகச் சாதாரணமாகவே இருக்கும். அவை வெறும் வார்த்தை நுரைகள். ஏனெனில், அந்த வரிகள் அவனது நாவிலிருந்து வெளிப்பட்டவை; உள்ளத்திலிருந்து புறப்பட்டவை அல்ல. அந்த வார்த்தைக் குவியலில் கவிஞனின் இதயத்தையோ, உணர்வுகளையோ காண முடியாது.
சில அறிஞர்கள் மிகச் சிறந்த புத்தகங்களை எழுதியுள்ளார்கள். அவர்கள் பட்ட வேதனைகள்தான் இதற்குக் கராணம். சாதனையாளர்கள் பலரும் வாழ்க்கையில் சந்திக்கின்ற தடைகளை, சோதனைகளைக் கண்டு பயந்து ஓடாதீர்கள். அவை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும்,ஆற்றலையும் நமக்குத் தரலாம். எரிந்து கொண்டிருக்கும் உள்ளத்தோடும் உணர்வோடும் வாழும் வாழ்க்கை, எந்த உணர்ச்சியும் இல்லாமல் செத்துப் போன இதயத்தோடு வாழும் வாழ்க்கையை விடச் சிறந்தது; தூய்மையானது.
சமூக பாதிப்புகளை பார்த்து வெந்துகொண்டிருக்கும் சொற்பொழிவாளனின் மனதிலிருந்து தெறிக்கும் வார்த்தைகள் கேட்பவரது இதயத்தின் ஆழம் வரை ஊடுருவிச் செல்லும். உயிரின் வேர் வரை பாயும். எனெனில் அந்தச் சொற்பொழிவாளன் காயங்களின் மேல் வாழ்கிறான்.
நாம் அனுபவத்தில் பல கவிஞர்களின் கவிதைகளைப் படித்திருப்போம். சில கவிதைகளில் உயிர் இல்லாமல் இருந்ததை கவனித்து இருக்கிறீர்களா? ஏனெனில், அவை வேதனையால் எழுதப்பட்டவையல்ல. அவற்றில் சூடும் இல்லை. ஐஸ் கட்டியைப் போல குளிர்ச்சியாகவும், மண்ணாகட்டியைப் போல உணர்ச்சியற்றவையாகவும் அவை இருக்கும்.
மேலும் சில சொற்பொழிவாளர்களது நூல்களையும் படிக்கும் போது அவை வாசகர்களது உள்ளத்தில் அணுவளவு பாதிப்பைக் கூட ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்காது. இதற்குக் காரணம் அந்தப் பேச்சாளர்கள் எந்த வலியையும் வேதனையையும் அனுபவித்து இருக்க மாட்டார்கள். எனவேதான், அவர்களது வார்த்தைகளில் உயிரோட்டத்தைப் பார்க்க முடிவதில்லை.
ஆகவே உங்களின் எழுத்தின் மூலம், கவிதையின் மூலம் மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என விரும்பினால், முதலில் நீங்கள் சமூக அக்கறையோடு காயப்பட்ட விடயங்களை எழுதுங்கள். அல்லது காயப்படுங்கள் தோல்விகளையும் துயரங்களையும் அனுபவிங்கள். அதன் பிறகு உங்களது உள்ளத்திலிருந்து புறப்படும் வார்த்தைகள் பிறரது உள்ளங்களில் ஊடுருவும்; நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் பல விடங்களில் காயப்பட்டு வாழ்ந்துக் கொண்டிருக்கும் என் அனுபவத்தில் சொல்கிறேன்.
நன்றி : வலையுகம்
No comments:
Post a Comment