காங்கிரஸ் அரசு இத்தனை முறை ஆட்சியிலிருந்தும்
ஏழைகளுக்காக எதுவும் செய்யவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்
மாயாவதி குற்றம்சாட்டினார்.
உத்தரப்பிரதேசத்தில் பகுஜன்
சமாஜ், சமாஜவாதி மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசாரம்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது மாயாவதி பேசியதாவது:
வாக்காளர்களை
கவர மட்டுமே காங்கிரஸ் கட்சி ரூ.6 ஆயிரம் திட்டத்தை அறிவித்துள்ளது.
ஆனால், அந்த திட்டத்தால் ஏழைகளுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.
மேலும் காங்கிரஸ் கட்சி இத்தனை முறை ஆட்சியிலிருந்தும் ஏழைகளின் நலனுக்காக
எதையும் செய்தது கிடையாது.
மத்தியில் பகுஜன் சமாஜ், சமாஜவாதி கூட்டணி ஆட்சி அமைந்தால், நாங்கள் ரூ.6 ஆயிரம் தரமாட்டோம்.
ஆனால், ஏழைகளுக்கு நிச்சயம் அரசு அல்லது தனியார்
துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவோம். அனைவருக்கும் வேலைவாய்ப்பு
கிடைத்தால் தான் வறுமையும், ஏழ்மையும் ஒழியும்.
உத்தரப்பிரதேசத்தில்
காங்கிரஸ் கட்சியால் முஸ்லிம்களின் நலனுக்காக போராட முடியாது. எனவே
சிந்தித்து செயல்படுமாறு முஸ்லிம்களிடம் நான் மீண்டும் ஒருமுறை
எச்சரிக்கிறேன்.
உ.பி.யில் எங்கள் கூட்டணி ஆட்சிக்கு
வரக்கூடாது என காங்கிரஸ் மற்றும் பாஜக நினைக்கிறது. எங்களது ஆதரவு இல்லாமல்
காங்கிரஸ் கட்சியால் பாஜக-வை எதிர்க்க முடியாது என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment