
மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி இன்று வெளியிட்டார். மேற்கு வங்காளம் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதேநேரம் பாஜகவும் தனது வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், மோடிக்கு எதிராக அனல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி இன்று தனது கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் 41 சதவீதம் தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.


வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜார்கண்ட் மாநிலத்தில் 5 தொகுதிகளிலும், அசாம் மாநிலத்தில் 6 தொகுதிகளிலும், பீகார் மாநிலத்தில் 2 தொகுதிகளிலும், அந்தமானில் உள்ள ஒரு தொகுதியிலும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றார்.
மேலும், ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் 10
தொகுதிகளில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்தார். உத்தரப்பிரதேசம்,
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபில் மாநில கட்சிகளுக்கு ஆதரவு
தருவோம் எனவும், மத்தியில் ஆளும் பாஜக மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டி
பிளவுப்படுத்த பார்க்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.
இந்த தேர்தலில் விவிஐபிக்கள் வரும் ஹெலிகாப்டர் மூலம் ஏராளமான பணத்தை
கொண்டுவந்து வாக்களர்களுக்கு வினியோகிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.

No comments:
Post a Comment