
அதிமுக நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர்
உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட 3 அதிமுக மாவட்ட செயலாளர்களின் பதவிகள்
பறிக்கப்பட்டுள்ளன.
இதேபோல தூத்துக்குடியை கட்சி நிர்வாக ரீதியில் 2 மாவட்டமாக பிரித்து
உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும்
கட்சியின், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர்
வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்:
நீலகிரி, திருப்பூர் புறநகரம்
நீலகிரி மாவட்ட செயலாளர் கே.ஆர்.அர்ஜூனன் எம்பி, அப்பொறுப்பில் இருந்து
விடுவிக்கப்படுகிறார். நீலகிரி மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர்
புத்திசந்திரன் நியமிக்கப்படுகிறார். திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர்
உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு,
திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராக சட்டசபை துணைத் தலைவர் பொள்ளாச்சி
வி.ஜெயராமன் நியமிக்கப்படுகிறார்.
இரு மாவட்டங்களாக பிரிப்பு
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் அப்பொறுப்பில் இருந்து
விடுவிக்கப்படுகிறார். மேலும், அதிமுக நிர்வாக வசதிக்காக, தூத்துக்குடி
மாவட்ட கட்சி அமைப்பு ரீதியாக தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு
மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. தூத்துக்குடி வடக்கு
மாவட்டத்தில் விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி சட்டமன்ற
தொகுதிகளும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் தூத்துக்குடி,
திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளும் உள்ளடங்கும்.
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை
அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள்
அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட
அளவில் திருத்தி அமைக்கப்பட்ட கட்சி மற்றும் சார்பு அமைப்புகளுக்கான
நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள்
சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு உள்பட நிர்வாக பொறுப்புகளில் தொடர்ந்து
செயலாற்றுவார்கள்.
அமைப்பு செயலாளர்களாக நியமனம்
அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ,
புத்திசந்திரன் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து
விடுவிக்கப்படுகிறார்கள். அதிமுக அமைப்பு செயலாளராக கால்நடை
பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கே.ஆர்.அர்ஜூனன் எம்பி
(நீலகிரி மாவட்டம்), முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர்
நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

காரணம் என்ன?
திருப்பூர், தூத்துக்குடி மற்றும் நீலகிரி ஆகிய லோக்சபா தொகுதிகளில்
போட்டியிட அதிமுக கூட்டணி கட்சியான, பாஜக விருப்பம் தெரிவித்துள்ளது.
அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளில், இம்மூன்றும் உள்ளடங்கி
இருக்கப்போகிறது என்ற தகவல்கள் கசிகின்றன. எனவே, பாஜகவிற்கு ஒத்துழைக்க
கூடியவர்களாக அந்த மாவட்ட செயலாளர்களாக அதிமுக தலைமை நியமித்துள்ளதாக
கூறப்படுகிறது. இந்த தொகுதிகளில் அதிமுகவின் சிட்டிங் எம்பிக்கள் உள்ளனர்.
அவர்கள் மீண்டும் சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜகவிற்கு எதிராக
உள்குத்து வேலைகளில் இறங்கிவிட கூடாது. எனவே தக்க மாவட்ட செயலாளரகளை
நியமிக்க வேண்டும் என்பதே இந்த அதிரடி மூவ் பின்னணி என்று கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தை ஏற்கனவே நிர்வாக வசதிக்காக திமுக இரண்டாக
பிரித்துள்ளது. எனவே அதை சமாளிக்க அதிமுகவும் அதே பாணியை பின்பற்றியுள்ளதாக
கூறப்படுகிறது.
No comments:
Post a Comment