
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவி
ஆபாச வீடியோ எடுத்த விவகாரத்தில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருப்பதாக
கூறப்படுவதில் உண்மையில்லை என்று அதிமுக எம்பி மகேந்திரன்
தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் மூலம் பழக்கமான சபரிராஜன் மற்றும் அவரது நண்பர்களுடன் காரில்
சென்ற 19 வயது இளம்பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ததாக கூறப்படுகிறது. இதனை
காரில் இருந்த சபரிராஜனின் நண்பர்கள் மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர்.
அந்த வீடியோவை காட்டி, கல்லூரி மாணவியிடம் தொடர்ந்து மிரட்டி பணம்
பெற்றதோடு, இச்சைக்கு இணங்குமாறு அழைத்து வந்துள்ளனர்.
போலீசில் புகார்
ஒரு கட்டத்தில் தொல்லை எல்லை மீறிப் போகவே கல்லூரி மாணவி நடந்த சம்பவங்களை
பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, இளம் பெண்ணின் சகோதரர்
பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.
3 பேர் கைது
புகாரின் அடிப்படையில் சபரி ராஜனின் நண்பர்களான மாக்கினாம்பட்டியை சேர்ந்த
திருநாவுக்கரசு, சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த சதீஸ், பக்கோதிபாளையத்தை
சேர்ந்த வசந்தகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது
செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சபரி ராஜனை
போலீசார் தேடி வருகின்றனர்.
பல பெண்கள் ஏமாற்றம்
இதற்கிடையே, நடத்தப்பட்ட விசாரணையில் பல பெண்களை ஏமாற்றி அவர்களுடன்
உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
ஆனால் இதுவரை எந்த ஒரு பெண்ணும் புகார் அளிக்காததால் அது குறித்து வழக்கு
பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார்
அளித்த கல்லூரி மாணவியின் சகோதரர் மீது 4 பேர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
அவர்களையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்பி மகேந்திரன் விளக்கம்
இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த விவகாரத்தில் ஆளும் கட்சியினரின் தலையீடு
இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
அலுவலகத்திற்கு வந்த அதிமுக எம்பி மகேந்திரன் மனு ஒன்றை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்லூரி மாணவியை ஆபாசமாக படம்
எடுத்து மிரட்டிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆளும் கட்சியினர் செயல்படவில்லை
என விளக்கம் அளித்தார். குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தூக்கு
தண்டனை பெற்றுத்தர அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment