
தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்தியாவில்
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் வரை
இந்தியாவின் பெரும் பகுதி அமைப்புசாரா, இந்தியப் பொருளாதார
கணிப்புகளுக்குள் இல்லாமல் இருந்தது. இப்போதும் வராமல் இருக்கின்றன.
இந்த இரண்டு மிகப் பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின் தான் அதிக அளவிலான
நிறுவன விவரங்கள் அரசின் கவனத்துக்கே வந்திருக்கின்றன. ஆக இத்தனை நாள் ஒரு
மிகப் பெரிய eண்ணிக்கையிலான இந்திய மக்களை, உழைக்கும் வர்கத்தை இந்திய
வணிக வியாபாரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாமல் ஒதுக்கி
வைத்துவிட்டோம்.
இப்போது தான் அவர்கள் பொருளாதார கணக்கீடுகளுக்குள் வருகிறார்கள். அதனால்
தான் திடீரென வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாகத் தெரிகிறது" என
விளக்கமளித்திருக்கிறார் இந்தியாவின் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி
சுப்ரமணியன். மேலும் அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய போது பல
சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பட்டும் படாமல் ஒரு முழு அரசு அதிகாரியாக,
பொறுப்பாக பதில் சொல்லி இருக்கிறார். கொஞ்சம் படித்துத் தான்
பாருங்களேன்..!
பணமதிப்பிழப்பு & ஜிஎஸ்டி
"பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி குறித்து மிக குறைந்த அளவிலேயே
ஆராய்ந்திருக்கிறார்கள். இன்னும் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் என்ன
மாதிரியான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள
நீண்ட நெடிய ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. அதுவரை பொருளாதாரத்தில் ஏற்ற
இறக்கங்கள் சர்வ சாதாரனமாக இருக்கும். எற்ற இறக்கங்களை ஒரு போதும் தவறாக
கருத முடியாது, கருதவும் கூடாது என்பதே என் கருத்து.

இத்தனை ஆழமான ஆராய்ச்சிகள் ஏன்..?
உலக சந்தைகளில், ஒவ்வொரு நேரமும் ஒரு விதமான மாறுபட்ட பொருளாதார காரணிகளின்
(Factor) பார்வையில் இருந்து பொருளாதாரம் பார்க்கப்படுகிறது. உதாரணமாக
இந்தியாவின் டெலிகாம் துறைகளை எடுத்துக் கொள்வோம். 2010-ம் ஆண்டு வரை
இந்திய டெலிகாம் துறையில் எந்த நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை
வைத்திருக்கிறார்களோ அவர்கள் தான் இந்திய டெலிகாமின் தாதாவாக
கருதப்பட்டார்கள். 2010 வாக்கில் ஏர்டெல் அதிக வாடிக்கையாளர்களோடு
அரியணையில் இருந்தது. ஆனால் இன்று Value Addition என்பதை வைத்துத் தான்
நம்பர் 1 யார் எனப் பார்க்கிறோம்.

வேல்யூ அடிஷன் என்றால்..?
ஒரு வாடிக்கையாளர், தன் இணைப்பை எவ்வளவு பயன்படுத்தி, அந்த நிறுவனத்துக்கு
கட்டணம் செலுத்துகிறார் என்பது தான் வேல்யூ அடிஷன். உதாரணமாக ஏர்டெல்லிடம்
100 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் ஏர்டெல்லுக்கு 100
ரூபாய் வருகிறது. அதே போல் ஜியோவுக்கு 80 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் மூலம் ஜியோவுக்கு 110 ரூபாய் வருமானம் வருகிறது என்றால்
வேல்யூ அடிஷன் அடிப்படையில் ஜியோவுக்குத் தான் முதலிடம். வாடிக்கையாளர்கள்
தங்களுக்கு கொடுத்திருக்கும் இணைப்பை எந்த அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி
பொருளாதார மதிப்பை கூட்டுகிறார்கள் என்பதைத் தான் இங்கு கவனிக்க வேண்டும்.

ஜிடிபி தரவுகளை மாற்றியது குறித்து..?
என்னைப் பொறுத்த வரை பணமதிப்பிழப்போ அல்லது சரக்கு மற்றும் சேவை வரியோ
கொண்டு வரவில்லை என்றால் ஜிடிபி தரவுகளை எத்தனை பின்னோக்கிச் சென்று
கணக்கிட்டாலும் பெரிய மாற்றங்கள் வந்திருக்காது. ஏற்கனவே சொன்னது போல இந்த
இரண்டைக் குறித்தும் மிக நீண்ட நெடிய ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.
ஆராய்ச்சி முடிவுகள் ஒவ்வொன்றாக வெளி வரும் போது தான், ஏன் முந்தைய
ஆண்டுகளின் ஜிடிபி தரவுகளை, இன்றைய காரணிகளை வைத்து கணக்கிட்ட போது அதிக
வேறுபாட்டோடு மாறியது என்கிற வினாக்களுக்கு விடையளிக்க முடியும்.

வேலைவாய்ப்பு தரவுகள் குறித்து..?
Employees' Provident Fund Organization அமைப்பிடம் 10 தொழிலாளர்கள் அல்லது
ஊழியர்களுக்கு கீழ் வேலை பார்க்கும் நிறுவனங்கள், கடைகள், வியாபார
அமைப்புகளின் தரவுகள் கிடையாது. அதனால் தான் இந்த முறை வேலையில்லா
திண்டாட்டம் குறித்து வெளியான தரவுகள் பயமுறுத்துவதாக இருக்கிறது. இதற்கு
அப்படியே நேர்மாறான ஒரு சம்பவத்தையும் நாம் இந்த சம்பவத்தோடு இணைத்துப்
பார்க்க வேண்டும். பாஜகவின் ஆட்சிக் காலத்தில் தான் 15 மாத காலத்தில் 73
லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. அதற்குக்
காரணம் முன்பு Employees' Provident Fund Organization அமைப்பு 15
ஊழியர்களுக்கு மேல் வேலை செய்யும் வணிக நிறுவனங்களைத் தான் தனக்குள்
வைத்திருந்தது. அதை 10 ஊழியர்கள் என குறைத்த உடனேயே இந்த 73 லட்சம் வேலை
வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டதாக கணக்கில் ஏறுகிறது.

இந்த வேலையில்லா திண்டாடத்துக்கான தீர்வு என்ன..?
என்னைப் பொறுத்த வரை வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிக்க, வெறும் வேலை
வாய்ப்புகளை உருவாக்கினால் போதாது. தரமான, பொருளாதார ரீதியில்
ஊழியருக்கும், நிறுவனத்துக்கும், இந்திய பொருளாதாரத்துக்கும் பயன்படக்
கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நாம் விவாதிக்க வேண்டியது இந்த
தரமான வேலை வாய்ப்புகளைப் பற்றித் தான்.

இந்திய பொருளாதார வேலைவாய்ப்புகளில் ஒரு சமமற்ற தன்மை இருக்கிறதா..?
ஆம். இந்தியாவில் பெரும்பாலான வேலை வாய்ப்புகள் அமைப்புசாரா நிறுவனங்கள்
மூலமாகத் தான் உருவாக்கப்படுகிறது. இதை முறையாக இந்திய பொருளாதார
கணக்கீடுகளில் கொண்டு வர முடியவில்லை. எப்போதுமே இந்தியப் பொருளாதாரத்தில்
வேலை வாய்ப்புகள் நிரம்ப இருக்கிறதா..? என ஒரு பக்கம் மட்டுமே
கேட்கப்படுகிறது. அதை மாற்றி வேலைவாய்ப்பின் மறு பக்கத்தையும் கேட்க வேண்டி
இருக்கிறது.

வேலைவாய்ப்பின் மறுபக்கம் என்றால்..?
பொருளாதாரம் தேவை (Demand) மற்றும் சப்ளை (Supply) அடிப்படையில் தான்
பெரும்பாலும் இயங்கும். சமீபத்தில் வெளியான வேலையில்லா திண்டாட்டத் தரவுகள்
என்ன சொல்கிறது..? இந்தியாவில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லை, அதாவது
இதற்கு முந்தைய ஆண்டுகளில் 100 வேலை வாய்ப்புகள் இருந்தால், இந்த 2018-ம்
ஆண்டில் வெறும் 94 வேலை வாய்ப்புகள் தான் இருக்கின்றன. இது தான் புகார்.
ஆனால் நம் இந்திய பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பு என்கிற தேவைக்கு (Demand)
தகுதியான, திறமையான ஆட்கள் (Supply) இருக்கிறார்களா..? சப்ளை
செய்யப்படுகிறார்களா என கேட்க வேண்டும்.

இப்போது ஏன் பணியாளர்களின் தகுதியைப் பற்றிப் பேசுகிறீர்கள்..?
இந்தியாவில் உலக தரத்தில் தகுதியானவர்கள் இருந்தால், வேலை வாய்ப்புகளும்
தானாக உருவாகும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும், நிறுவனங்களே
இந்தியாவுக்கு இறங்கி வந்து ஆட்களை அள்ளிக் கொண்டு போகும் அல்லது
இந்தியாவில் தன் நிறுவனத்தைத் தொடங்கும். இதற்கு சிறந்த உதாரணம்
இந்தியாவின் ஐடி துறை. இந்தியர்களின் ஐடி திறனுக்காகத் தான் இன்று அமெரிக்க
அரசே தன் பல்வேறு குடியுரிமைச் சட்டங்களை மாற்றிக் கொண்டு இந்தியர்களை
வேலைக்கு வைத்துக் கொள்கிறது. அமெரிக்க ஐடி நிறுவனங்கள், அமெரிக்க அரசின்
குடியுரிமைச் சட்டங்கள் தங்கள் ஊழியர்களை (இந்திய ஊழியர்களை) பாதிக்காத
வண்ணம் இருப்பதை வலுக்கட்டாயமாக உறுதி செய்கின்றன. இப்படி எல்லா
துறைகளிலும் திறன் படைத்த தொழிலாளர்கள் இருந்தால், நமக்கான வேலைகள் நம்மைத்
தேடி வரத் தானே செய்யும். ஆகவே இனி வேலைவாய்ப்பு (Demand) இல்லை என்று
பேசும் போது பணியாளர்கள் திறன் மேம்பாடு (Supply) குறித்தும் பேச வேண்டும்.

இந்தியாவில் பணியாளர் திறன் மேம்பாடு இல்லாமல் பொருளாதாரம்
வளர்ந்திருக்கிறதா..?
ஆம், வளர்ந்திருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் நல்ல
வளர்ச்சி கண்டிருக்கின்ற போதிலும், அதே அளவுக்கான வேலைவாய்ப்பு வளர்ச்சி
பெறவில்லை. காரணம் பணியாளர் திறன் இல்லாமை. அதனால் தான் பல்வேறு
நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து ஆட்களை இறக்கிக் கொள்கிறது அல்லது சின்ன
சின்ன வேலைகளை மட்டுமே இந்தியாவுக்குக் கொடுக்கிறது. இப்படி இந்தியாவில்
மட்டும் இல்லை, பல்வேறு உலக நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கிறது.

அது எப்படி..?
பொருளாதார வளர்ச்சிக்கு Land, Labour, Capital, Organisation என நான்கு
முக்கிய விஷயங்கள் தேவை. இதில் ஏதாவது ஒன்றை மட்டுமே வைத்து கூட நம் நாடு
பணக்கார நாடு ஆகலாம். உதாரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை
எடுத்துக் கொள்வோம். இது ஒரு இந்திய நிறுவனம். இந்த நிறுவனத்தின் லாபங்கள்
எல்லாமே இந்தியாவின் கணக்கில் தான் சேர்க்கப்படும். இந்த நிறுவனம்
வெளிநாட்டில் இயங்கி, வெளிநாட்டவர்களை மட்டுமே வேலைக்கு வைத்து, வெளிநாட்டு
முதலீடுகளையும் பெற்று வளர்கிறது என்றால் கூட இந்திய பொருளாதாரம்
வளர்ந்ததாகவே கருதப்படும். ஆனால் உண்மையில் இந்தியாவில் வேலைவாய்ப்புகள்
பெருகி இருக்காது. இது போலத் தான் பல்வேறு நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை
வளர்க்கிறதே ஒழிய, தங்கள் மக்களை வளர்ப்பதில்லை. இந்தியா அப்படி ஒரு
சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது" என எச்சரித்து முடிக்கிறார்
இந்தியாவின் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்.
No comments:
Post a Comment