தில்லி முஸ்லிம்கள் மாநாடு
(1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா - பாகிஸ்தான் பிரிவிணைக்குப் பின் தில்லி ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்ற தில்லி முஸ்லிம்கள் மாநாட்டில் மாவுலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் ஆற்றிய எழுச்சி உரை)
தமிழில் : ஃபைஸ் காதிரி
என் சொந்தங்களே! என்னை இங்கு அழைத்து வந்தது எது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஷாஜஹானின் இந்தப் பள்ளிவாசலில் இந்த மாநாடு நடைபெறுவது எனக்கு புதிய ஒன்றல்ல. இரவு பகலின் பல சுழற்சிகளைக் கடந்துவிட்ட அந்தக் காலத்திலும் இங்கிருந்துதான் நான் உங்களிடம் உரையாற்றினேன்.
(1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா - பாகிஸ்தான் பிரிவிணைக்குப் பின் தில்லி ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்ற தில்லி முஸ்லிம்கள் மாநாட்டில் மாவுலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் ஆற்றிய எழுச்சி உரை)
தமிழில் : ஃபைஸ் காதிரி
என் சொந்தங்களே! என்னை இங்கு அழைத்து வந்தது எது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஷாஜஹானின் இந்தப் பள்ளிவாசலில் இந்த மாநாடு நடைபெறுவது எனக்கு புதிய ஒன்றல்ல. இரவு பகலின் பல சுழற்சிகளைக் கடந்துவிட்ட அந்தக் காலத்திலும் இங்கிருந்துதான் நான் உங்களிடம் உரையாற்றினேன்.
அப்போது உங்களின் முகங்களில் நிம்மதியின்மைக்கு பதிலாக அமைதி இருந்தது. உங்கள் இல்லங்களில் ஐயத்திற்குப் பதிலாக நம்பிக்கை இருந்தது.
இன்று உங்கள் முகங்களில் நிம்மதியின்மையையும் உள்ளங்களில் வெறுமையையும் பார்க்கும் போது மறந்து போன கடந்த சில ஆண்டுகளின் கதைகள் எனக்குத் தாமாகாவே நினைவுக்கு வந்து விடுகின்றன.
உங்களுக்கு நினைவிருக்கும் நான் உங்களை அழைத்தேன் நீங்கள் என் நாவைத் துண்டித்தீர்கள்! நான் நடக்க விரும்பினேன்; நீங்கள் என் கால்களை வெட்டி விட்டீர்கள்! நான் புரண்டு படுக்க விரும்பினேன்; நீங்கள் என் இடுப்பை ஒடித்தீர்கள். எதுவரை என்றால் இன்று பிரிவுத் துயரை உங்களுக்கு அளித்துச் சென்றுவிட்ட கடந்த ஏழாண்டுகளில் கசப்பான அரசியலை அதுதான் இளமைக் காலத்தில் இருந்தபோதும் கூட நான் ஆபத்தின் நெடுஞ்சாலையில் நின்று உங்களைப் பிடித்தசைத்தேன். ஆனால் நீங்கள் என் குரலைத் தவிர்த்தது மட்டுமின்றி அலட்சியத்திற்கும் மறுப்புக்குமான அனைத்துவித வழிமுறைகளையும் உயிர்ப்பித்தீர்கள். இதன் விளைவை அறிவோம்!
எதற்கான அச்சம் உங்களை நேரான பாதையிலிருந்து விலகிச் சென்றதோ அந்த ஆபத்துகளே உங்களைச் சூழ்ந்து கொண்டன. உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் நான் உறைந்து போன ஒன்றாகவோ, தன் சொந்த நாட்டிலேயே அந்நிய நாட்டில் வாழும் ஒருவனின் மிகத் தொலைவில் ஒலிக்கும் குரலாகவோ இருக்கிறேன்.
இதனால் தொடக்கத்திலேயே நான் எனக்காகத் தேர்வு செய்து வைத்திருந்த இடத்தில் என் சிறகுகள் முறிக்கப்பட்டுவிட்டன என்றோ கூடு கட்ட எனக்கு அங்கே இடமில்லை என்றோ அர்த்தமில்லை. மாறாக நான் சொல்ல விரும்புவதெல்லாம் என் யாசக மடிக்கு உங்கள் கைகளின் கொடுமைகள் மீது முறையீடு உண்டு. என் உணர்வு காயம்பட்டிருக்கிறது; என் இதயம் துயரமடைந்து இருக்கிறது. நீங்கள் ஏற்றுக்கொண்ட பாதை எது? எங்கு சென்றீர்கள்? இப்பொழுது நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்? என்பதையெல்லாம் சிந்தித்துப் பாருங்கள்! இது அச்சத்திற்குரிய வாழ்க்கை இல்லையா? உங்களுடைய புலன்களில் உணர்வின்மை வந்து விடவில்லையா? இந்த அச்சம் நீங்களாகவே வரவழைத்துக் கொண்டது. இது உங்களுடைய சொந்த செயல்களுக்கு கிடைத்த பலன்.
சிலநாட்களுக்கு முன்தான் நான் கூறினேன் “இரு சமூகக் கொள்கை” உண்மையான வாழ்க்கைக்கு மனநோயாக இருக்கிறது அதை விட்டுவிடுங்கள். நீங்கள் நம்பியிருக்கும் இந்த தூண்கள் மிக வேகமாக உடைந்துகொண்டிருக்கின்றன. ஆனால், நீங்கள் கேள்விப்பட்டதையும் கேள்விப்படாததையும் சமமாக்கி விட்டீர்கள்.
நேரமும் அதன் வேகமும் உங்களுக்காகத் தம்முடைய விதிமுறைகளை மாற்றிக்கொள்ளாது என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவில்லை. நேரத்தின் வேகம் நின்றுவிடவில்லை. எந்த ஆதரவுகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்ததோ அவை உங்களை அனாதை என எண்ணி விதியிடம் ஒப்படைத்து விட்டன. அந்த விதி என்பது உங்களுடைய “மனநிலை அகராதியின்” நோக்கத்திலிருந்து மாற்றமான பொருளைக் கொண்டது. அதாவது அவர்களிடம் துணிவின் பற்றாக்குறைக்குப் பெயர்தான் விதி என்பது.
ஆங்கிலேயர்களின் அதிகாரம் உங்களுடைய விருப்பத்திற்கு எதிராக கவிழ்க்கப்பட்டுவிட்டது. நீங்களாகவே வார்த்துக்கொண்ட வழிகாட்டல்களின் அந்தச் சிலைகளும் உங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டன. ஆனால், அந்த அதிகாரம் நிரந்தரமானது என்றும் அந்தச் சிலைகளை வணங்குவதில்தான் வாழ்க்கை உண்டு என்றும் நீங்கள் கருதியிருந்தீர்கள். நான் உங்களுடைய காயங்களைக் கிளற விரும்பவில்லை. உங்களுடைய உங்களுடைய நிம்மதியின்மையை அதிகரிக்கச் செய்வது என் ஆசையுமல்ல. ஆனால், கொஞ்சம் கடந்த காலத்தின் பக்கம் நீங்கள் திரும்பிப் பார்த்தால் உங்களுக்கான பல முடிச்சுகள் அவிழ்ந்துவிடலாம். ஒரு காலம் இருந்தது அதில் நான் இந்தியநாட்டின் விடுதலையைப் பெற உணர்வூட்டும் வண்ணமாக உங்களுக்கு குரல் கொடுத்து இவ்வாறு கூறினேன்.maulana-abul-kalam-lead-maulana
“நிகழவிருப்பதை எந்த ஒரு சமூகமும் தன்னுடைய தீய பண்புகளால் தடுத்துவிடமுடியாது. இந்தியாவின் விதியில் அரசியல் புரட்சி எழுதப்பட்டுவிட்டது அதன் அடிமைச் சங்கிலிகள் இருபதாம் நூற்றாண்டின் விடுதலைக் காற்றால் கழன்று விழப்போகின்றன. நீங்கள் காலத்தின் தோளோடு தோள் சேர்த்து காலடியை எடுத்து வைக்காமல் முடங்கிப் போன தற்போதைய வாழ்கையையே வழக்கமாகக் கொண்டிருந்தால், ‘ஏழு கோடி மனிதர்களின் தொகுதியாக இருந்த உங்கள் கூட்டம் சுதந்திரம் தொடர்பாக ஏற்றுக்கொண்டிருக்கும் போக்கு என்பது பூமியிலிருந்து சமூகங்கள் ஏற்ற வழிமுறை’ என்று எதிர்கால வரலாற்று அறிஞன் எழுதுவான். இன்று இந்திய தேசியக் கொடி எண்ணற்ற முறையீடுகளோடு காற்றில் அசைந்துகொண்டிருக்கிறது. எந்தக் கொடியின் உச்சத்தைக் கண்டு அதிகாரச் செருக்கு கொண்டவர்களின் காயப்படுத்தும் வெடிச் சிரிப்பு எள்ளி நகையாடிக் கொண்டிருந்ததோ அந்தக் கொடிதான் இது!”
காலம் உங்களுடைய ஆசைக்கிணங்க வளைந்து கொடுக்கவில்லை என்பது உண்மைதான். மாறாக அது ஒரு சமூகத்தின் பிறப்புரிமையை கண்ணியப்படுத்துவதற்காக திசை திரும்பி இருக்கிறது. திசைமாறி உங்களைப் பெருமளவில் அச்சமூட்டிவிட்ட அந்தப் புரட்சி இதுதான். உங்களிடமிருந்து ஒரு நல்ல பொருள் பறிக்கப்பட்டு விட்டதென்றும் அந்த இடத்தில் ஒரு தீய பொருள் வந்து விட்டதென்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். ஆமாம், நீங்கள் நிம்மதியற்று இருப்பதெல்லாம் உங்களை நீங்கள் நல்ல பொருளுக்காகத் தயார்படுத்திக் கொள்ளாமல் தீய பொருளையே தன் புகலிடமாகக் கருதிக் கொண்டதன் விளைவே! அதாவது நான் சொல்ல வருவது அந்நிய நாட்டின் அடிமைத்தனத்தை! அதன் கரங்களில் அதிகாரம் பேராசையின் விளையாட்டுப் பொருளாக நீங்கள் பல ஆண்டுகள் வாழ்க்கையைக் கழித்திருக்கிறீர்கள்! ஒருகாலம் இருந்தது அதில் சமூகத்தின் பாதங்கள் ஒரு போரின் தொடக்கத்தை நோக்கியவையாக இருந்தன. ஆனால், இன்றோ நீங்கள் அந்தப் போரின் விளைவைக் கண்டு நிம்மதியிழந்து நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய இந்த அவசரகதியைப் பற்றி நான் என்ன சொல்வேன்? பயணத் தேடலே இங்கு முடிவடையாத நிலையில் அங்கு வழிபிறழ்வுக்கான ஆபத்து எதிரே வந்து நிற்கிறது.
என் சகோதரர்களே! நான் அரசியலை எப்பொழுதும் ஆளுமைகளை விட்டு விலக்கி வைக்கவே முயன்றிருக்கிறேன். நான் முட்கள் நிறைந்த அந்தப் பள்ளத்தாக்கில் கால்பதித்ததில்லை. அதனால்தான் என்னுடைய பல பேச்சுகள் மறைமுகச் சுட்டுதலைக் கொண்டிருக்கின்றன. ஆனால், இன்று நான் சொல்ல வேண்டியதை எவ்விதத் தடையுமின்றி சொல்ல விரும்புகிறேன். ஒன்றுபட்ட இந்தியாவின் பிரிவினை அடிப்படையிலேயே தவறாக இருந்தது. மார்க்கக் கருத்துவேறுபாடுகள் தூண்டப்பட்ட முறையின் தவிர்க்க இயலாத விளைவுதான் நாம் கண்ணால் கண்ட பாதிப்புகளும் காட்சிகளும். துரதிஷ்டவசமாக நாம் வேறுபகுதிகளில் இன்றும்கூட இதைக் கண்டு வருகிறோம்.
கடந்த ஏழாண்டுகளின் அறிக்கையை மீண்டும் ஒப்புவிப்பதில் எந்தப்பயணமில்லை. அதனால் எந்த நல்ல விளைவும் ஏற்படப் போவதில்லை. இருப்பினும் இந்திய முஸ்லிம்களின் மீது வந்துநிற்கும் பெருவெள்ளம் என்பது சந்தேகமின்றி (பாகிஸ்தானிய) முஸ்லிம் லீக்கின் தவறான தலைமையின் வெளிப்படையான பிழைகளின் விளைவே! ஆனால் எனக்கு இது புதிதானது ஒன்றுமில்லை. நாள் கடந்த காலத்திலேயே இந்த விளைவுகளை அறிந்திருந்தேன்.
தற்பொழுது இந்திய அரசியலின் திசை மாறிவிட்டது.
(பாகிஸ்தானிய) முஸ்லிம் லீக்கிற்கு இங்கு எந்த இடமும் இல்லை.
நாம் சிறந்த முறையில் சிந்திக்கத் தகுந்தவர்களா என்பதெல்லாம் இப்பொழுது நம்முடைய சொந்த மூளையை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, நான் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்திய முஸ்லிம் தலைவர்களை தில்லி அழைக்க எண்ணியுள்ளேன். அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுவிட்டன. அச்சத்தின் பருவம் தற்காலிமானது. நம்மைத் தவிர யாரும் நம்மை வீழ்த்திவிட முடியாது என்பதை நான் உங்களுக்கு உறுதிபடத் தெரிவிக்கிறேன். நான் அன்றும் சொன்னேன் இன்று மீண்டும் சொல்கிறேன். இந்தத் தடுமாற்றப் பாதையை விட்டுவிடுங்கள்! சந்தேகத்தை கைவிடுங்கள்! தீய செயல்பாடுகளை விட்டுவிடுங்கள்!
நாடு துறத்தல் எனும் புனிதப் பெயரைக் கொண்டு நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தப்பிப் பிழைத்தலைக் கூர்ந்து கவனியுங்கள்! உங்களுடைய இதயங்களை உறுதிபடச் செய்யுங்கள்! மூளைக்குச் சிந்திக்கக் கற்றுக் கொடுங்கள்! உங்களுடைய இந்த முடிவுகள் எத்தனை கொடூரமானவை என்பதைப் பிறகு பாருங்கள்! நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்? எதற்காக சென்று கொண்டு இருக்கிறீர்கள்?
இதோ பாருங்கள்! இந்தப் பள்ளிவாசலின் உயர்ந்த மினாராக்கள் தாவி வந்து உங்களிடம் “உங்களுடைய வரலாற்றுப் பக்கங்களை எங்கே தொலைத்து விட்டீர்கள்?” என்று கேட்கின்றன. யமுனை நதிக்கரையில் உங்களுடைய பயணக் கூட்டம் ‘ஒளு’ செய்து அதிகக் காலம் கடந்து விடவில்லை. அவ்வாறிருக்க நீங்களோ இன்று இங்கு தங்குவதற்கே அச்சம் கொள்பவர்களாக இருக்கிறீர்கள். ஆனால் தில்லியில் உங்கள் ரத்தம் பாய்ச்சப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
என் சொந்தங்களே! உங்களுக்குள் அடிப்படையானதொரு மாற்றத்தை உருவாக்குங்கள். சில காலத்திற்கு முந்தைய உங்கள் ஆர்வமும் விருவிருப்பும் தவறாக இருந்ததைப் போலவே உங்களுடைய இன்றைய அச்சமும் தவறானதே!
முஸ்லிம்களும் கோழைத்தனமும், முஸ்லிம்களும் வன்முறையும் ஓரிடத்தில் ஒன்று சேராதவை. முஸ்லிம்களைப் பேராசையால் அசைக்கவும் முடியாது எந்தவொரு அச்சத்தாலும் அச்சுறுத்தி விடவும் முடியாது. சில முகங்கள் காணாமல் போய்விட்டதால் அச்சம் கொள்ளாதீர்.
அவர்கள் உங்களை அழைத்துச் செல்ல ஒன்று திரட்டினார்கள். இன்று அவர்கள் உங்கள் கைகளின் மீதிருந்த தம் கைகளை எடுத்துக் கொண்டார்களெனில் இதில் அவமானத்திற்கு ஒன்றுமில்லை. இதோ பாருங்கள்! உங்கள் இதயம் அவர்களோடு சென்றுவிடவில்லை. உங்கள் இதயங்கள் உங்களோடுதான் இருக்கின்றதென்றால் அதை இறைவனுக்குரிய இடமாக்குங்கள்! அந்த இறைவன் பதிமூன்று நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்படிக்கத் தெரியாத ஒரு(நபிய)வரைப் பற்றி இவ்வாறு கூறுகிறான் “நிச்சயமாக எவர்கள் ‘எங்கள் இறைவன் அல்லாஹ்வே’ என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்க.” (உலகப் பொதுமறை குர்ஆன் 46:13)
காற்று வரும் சென்று விடும். இது புயலாகவே இருக்கட்டும். ஆனால் இதற்கு அதிகமான வயதொன்றும் இல்லை. கண்களுக்கு எதிரே நிற்கும் இன்னல்களின் இந்தப் பருவம் கடக்கப் போகிறது. முன்னர் எப்பொழுதும் இந்நிலையில் இருந்ததே இல்லை என்பது போல நீங்கள் மாறி விடுங்கள்.
உரையில் கூறியது கூறல் என் வழக்கமல்ல. ஆனால், உங்களுடைய அலட்சியப் போக்கில் காரணமாக மூன்றாவது சக்தி தன் தலைக்கனத்தின் சுமையை எடுத்துச் சென்றுவிட்டது என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. நடக்க வேண்டியது நடந்து முடிந்தது. அரசியல் மனநிலை தன் பழைய வார்ப்படத்தை உடைத்து விட்டது. இப்பொழுது புதிய வார்ப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது உங்களுடைய உள்ளத்தின் நிலை மாறவில்லையெனில், உங்களுடைய மனங்களின் நெருடல்கள் தீரவில்லையெனில் நிலைமை வேறு. ஆனால் உண்மையாகவே உங்களுக்குள் மாற்றத்தின் ஆசை பிறந்துவிட்டது எனில் வரலாறு தன்னை மாற்றிக் கொண்டதைப்போல மாறிவிடுங்கள். ஒரு புரட்சிக் காலத்தை நிறைவு செய்திருக்கும் இன்றைய காலகட்டத்திலும் கூட, நமது நாட்டின் வரலாற்றில் சில பக்கங்கள் காலியாக உள்ளன. அந்தப் பக்கங்களின் தலைப்புகளாக நம்மால் அழகு சேர்க்க இயலும். ஆனால் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே விதியாக இருக்கிறது.
என் சொந்தங்களே! மாற்றங்களோடு பயணம் செய்வீர்களாக! மாற்றங்கள் குறித்து நாங்கள் தயாராக இருக்கவில்லை என்று கூறாதீர்கள். மாறாக இப்பொழுது தயாராக இருக்கவில்லை என்று கூறாதீர்கள். மாறாக இப்பொழுது தயாராகி விடுங்கள். நட்சத்திரங்கள் உதிர்ந்து விட்டன. ஆனால், சூரியன் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. அதனிடம் கிரணங்களைப் பெற்று வெளிச்சத்தை வேண்டும் இந்த இருள் சூழ்ந்த பாதைகளில் பரப்பி விடுங்கள்.
“அதிகார அரசின் கல்லூரியிலிருந்து விசுவாசத்தின் சான்றிதழைப் பெற்று அந்நிய நாட்டு ஆட்சியாளர்களின் காலத்தில் உங்கள் வழக்கமாக இருந்த பிச்சைப் பாத்திரம் ஏந்திய வாழ்க்கையை நீங்கள் கடைபிடியுங்கள்” என்று நான் உங்களிடம் கூறவில்லை.
நான் கூறுவதெல்லாம் இதுதான், இந்தியாவின் கடந்த காலச் சின்னங்களாக வெண்ணிற வேலைப்பாடுகள் தெரிகின்றனவே அவை உங்கள் பயணக் கூட்டத்தைச் சார்ந்தவையே.Prime Minister Jawaharlal Nehru with his cabinet including Dr Babasaheb Ambedkar the then law minister sitting down for a meal
அவற்றை மறக்காதீர்! அவற்றை விடாதீர்! அவற்றின் வாரிசுகளாக இங்கே இருங்கள். நாட்டைத் துறக்க நீங்கள் தயாராக இல்லையெனில் பிறகு எந்த சக்தியாலும் உங்களைத் துரத்திவிட முடியாது. வாருங்கள்! இந்த நாடு நம்முடையது. இதற்கான விதியின் அடிப்படை முடிவுகள் நம்முடைய குரலின்றி அரைகுறையானதே!
இன்று நீங்கள் பூகம்பத்திற்கு அச்சம் கொள்கிறீர்கள். ஒரு காலத்தில் நீங்களே பூகம்பமாக இருந்தீர்கள். இன்று இரவைக் கண்டு நடுங்குகிறீர்கள். உங்கள் சுயமே வெளிச்சமாக இருந்தது உங்களுக்கு நினைவில்லையா? மேகங்கள் அழுக்கு நீரைப் பொழிந்ததால் நனைந்து விடக்கூடும் என்ற அச்சத்தில் கீழாடையை உயர்த்திக் கொண்டவர்கள் நீங்கள். சமுத்திரத்தில் இறங்கியவர்களும் மலைகளின் நெஞ்சை மிதித்து நசுக்கியவர்களும் எதிரே வந்த மின்னல்களைப் பார்த்து புன்னகைத்தவர்களும் உங்களுடைய முன்னோர்கள்தாம். இடி இடித்தபோது சிரிப்பொலியால் பதிலளித்தவர்கள் அவர்கள். வெள்ளம் வந்த போது அதன் திசையை மாற்றியவர்கள் புயல்காற்று வீசியபோது அதனிடம் இது உன் பாதையல்ல என்று கூறியவர்கள்.
மன்னர்களின் எழுத்துச் சட்டைகளைப் பிடித்தசைத்தசைத்தவர்கள் தற்பொழுது சொந்த கழுத்துச் சட்டையோடு விளையாடிக் கொண்டிருப்பதென்பது விசுவாசத்தின் மரணத் தருவாயாக இருக்கிறது. மேலும், இறைநம்பிக்கையே இருந்ததில்லை என்று கூறும் அளவிற்கு இறைவனை அலட்சியப்படுத்தி விட்டோம்.
என் சொந்தங்களே! என்னிடம் உங்களுக்கான புதிய வழிமுறை ஏதும் இல்லை. பல ஆண்டுகள் பழமையான அதே வழிமுறைதான் என்னிடம் இருப்பது. அந்த வழிமுறையைக் கொண்டு வந்தவர் மனிதப் பிரபஞ்சத்தின் மிகப் பெரிய கொடையாளர் அந்த வழிமுறை திருக்குர்ஆனின் இந்தப் பிரகடனம்தான் : “எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள், கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள்தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.” (உலகப் பொதுமறை குர்ஆன் 3 :139)
இன்றைய சந்திப்பு முடிவுகிறது. சொல்ல வேண்டியவற்றை நான் சுருக்கமாகச் சொல்லி முடித்து விட்டேன். தொடர்ந்து மீண்டும் மீண்டும் சொல்கிறேன். உங்கள் புலன்களைக் கட்டுப்பாட்டில் வையுங்கள். உங்களைச் சுற்றி உங்கள் வாழ்க்கையை நீங்களே உருவாக்குங்கள். பெற்றுத்தர இது கடையில் கிடைக்கும் பொருளல்ல. இது உள்ளத்தின் கடையில் மட்டுமே நற்செயல்களில் ரொக்கத்தால் கிடைக்கப் பெறுவது!
வஸ்ஸலாமு அலைக்கும்
நன்றி : சமூகநீதி அறக்கட்டளை
No comments:
Post a Comment