Latest News

  

அறிவுப் பசி தீர்க்கும் நூலகம்


மனித இனத்துக்கென வழங்கப்பட்ட ஒரு தனித்துவமான அருட்கொடை, “வாசித்தல்”. இது ஒருவரது சிந்தனையை செழுமைப்படுத்தி செயல்களை வீரியப்படுத்தும். வாசிப்பின் மீதுள்ள தொடர் ஆர்வம், தான் சார்ந்திருக்கும் சமூகத்தின் மீது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு பல சான்றுகளை வரலாறு பகிர்ந்தாலும், சமகால வரலாறாய் நம்கண் முன்னே நிமிர்ந்து நிற்கிறது, ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் அமைந்துள்ள “பைய்னடா (Baynada) அரபி நூலகம்”.

கற்றவர்கள் அதிகமிருக்கும் ஜெர்மனியில் ஒரு நூலகம் உருவாவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? எனத் தோன்றலாம். இந்த நூலகம் யாருக்காக? யாரால்? எப்படி உருவானது? அது என்ன செய்து கொண்டிருக்கிறது? என்பதில்தான் இதன் தனிச் சிறப்பு அடங்கியுள்ளது. இந்த நூலகத்தை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர், 2013-இல் சிரியாவிலிருந்து ஜெர்மனிக்கு தஞ்சமடைந்த ”முஹன்னத்” என்கின்ற ஒரு அகதி. 

பல ஆண்டுகளாக அரபு மொழி பேசக்கூடிய மக்களுக்கு, ஜெர்மனி தாய்வீடாக இருந்த போதிலும், கடந்த சில வருடங்களாக சிரியாவிலும் ஈராகிலும் நடந்த போர்களால், அங்கிருந்து ஜெர்மனிக்கு தஞ்சமடைந்தவர்கள் எண்ணிக்கையில் அதிகமாகவிட்டனர். சொந்த மண்ணை விட்டு வந்தவர்களுக்கு இடமும், உடையும், உணவும் தருவதற்கு ஜெர்மனி அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முன்வந்தபோதிலும், அம்மக்களால் இதை கொண்டு நிறைவடைய முடியவில்லை.

அறிவுப்பசிக்கு அதிக முக்கியத்துவம் தரும் இவர்களை, “தன் சொந்த மொழியான அரபியில் புத்தகங்களை வாசிக்க முடியவில்லையே” என்கின்ற ஏக்கம் அதிகமாகவே ஆட்கொண்டது. அதிலும் முஹன்னத் அவர்களுக்கு இந்த ஏக்கம் அனலாய் பற்றியெறிந்தது. இவர் இலக்கியமும் மொழிப்பெயர்ப்பு கலையும் பயின்றவர், கூடவே சிரியாவில் ஏற்கனவே சொந்தமாக நூலகம் ஒன்றையும் வைத்திருந்தவர். போரின் காரணமாக அனைத்து புத்தகங்களையும் இவர் பிரியவேண்டியதாயிற்று.

தனது வாசிப்பு ஏக்கத்தை தணிக்க, முஹன்னத் அவர்கள், பத்திரிக்கையாளர் ”கேப்பர்ட்”- இன் உதவியை நாடினார். ஆனால் ஒட்டுமொத்த ஜெர்மனியிலும் அரபி நூலகமோ அல்லது அரபிப் புத்தகமோ ஒன்றுகூட இல்லை என்பதை அறிந்து மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார். தன் மனவேதனையை தான் சந்திக்கும் அரபி மொழி பேசும் மக்கள் அனைவரிடமும் முறையிட்டார். அதில் ஒருவர்தான் இசைக்கலைஞரான ”அலி ஹசன்”. இந்த பகிர்தல்தான் அரபி நூலகம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இவர்களுக்குள் உருவாக்கியது. 

பதிப்பகத்தார் முதல் பொதுமக்கள் வரை அனைவரிடமிருந்தும் புத்தகங்களை சேகரிக்கும் பணி முஹன்னத் மூலம் படுவேகமாக நடைப்பெற்றது. சமூக வளைத்தளத்தின் பயன்பாட்டால், பல நாடுகளில் இருந்து புத்தகங்கள் வந்து குவிந்தது. மறைந்துபோனவர்களின் நினைவாக பாதுகாத்து வைத்திருந்த புத்தகங்களும் அதில் அடங்கும். 

நூலகத்திற்கான இடத்தை தேர்வு செய்வதை கேப்பர்ட் -ம், உள் கட்டமைப்பு மற்றும் இதர பொருள்கள் வசதியை ”தன்னா ஹேடாத்” என்கின்ற கட்டிடக்கலை மாணவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இப்படி 2016-இல் உருவான பைய்னடா அரபி நூலகம், நன்கொடையால் மட்டுமே நடத்தப்பட்டுவருகிறது.

வெறும் 700 புத்தகங்களோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த நூலகத்தில், இன்றுள்ள தலைப்புகள் மட்டும் 7500 ஆகும். கலை, இலக்கியம், விஞ்ஞானம், வரலாறு என எண்ணற்ற தலைப்புகளால் நிரம்பும் இந்நூலகத்திற்கு, புத்தகங்கள் இன்னும் வந்துக்கொண்டே இருக்கின்றது. இது அனைத்து வயதினருக்கும், கற்றலுக்கான வாசலை திறந்துவிட்டிருப்பதால், அரபு மொழி பேசக்கூடிய மக்களுக்கு மிகச்சிறந்த ஒரு நல்வரவாகவும், மாபெரும் மனஆறுதலாகவும் அமைந்திருக்கிறது.

இத்தோடு நிற்காமல், அகதியானதால் கல்வி தடைப்பட்ட மாணவர்களுக்கு தாய்மொழிக் கல்வி வழங்குவதல், புத்தக வாசிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வமூட்டுவதல் என தன் அடுத்த தலைமுறையை வளர்த்தெடுப்பதிலும் தனிப்பட்ட முறையில் இந்நூலகத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.

பைய்னடாவின் மிகமுக்கியமான குறிக்கோள், இந்நூலகம் அரபு மொழி மக்களுக்கு மட்டுமானது என்றில்லாமல் ஜெர்மனியின் அனைவருக்குமானது என்ற நிலையை எய்திட வேண்டும் என்பதுதான். அதற்காக அரபுமொழியின் நூல்களை ஆங்கிலத்திலும், ஜெர்மனிலும் மொழிப் பெயர்த்தார்கள். இது அரபு, ஆங்கிலம், ஜெர்மன் என அனைத்து மொழி மக்களையும் ஒன்றிணைத்து, தங்களது கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பரிமாறிக்கொள்ளவதில் பெரும்பங்கு வகிக்கிறது. 

ஐரோப்பாவில் பரவிவரும் அவநம்பிக்கையும், சகிப்பின்மையும் வேரறுக்கப்பட, உங்களுக்கும் எங்களுக்கும் இடையேயான பொதுதளத்தில் பயணிப்போம் என்கின்றது பைய்னடா நூலகம். இதனால் உண்டாகியுள்ள சமூகமாற்றம் காட்டற்று வெள்ளமாய் பரிணமித்துக்கொண்டிருக்கிறது.

வாசித்தல் என்ற ஒரேயொரு வார்த்தை மீதுள்ள தளாராத பற்று, சமூகத்தை பற்றிப்பிடித்திருக்கும் பல இன்னல்களை தளரவைத்துவிடும் என்பதற்கு பைய்னடா அரபி நூலகம் ஒரு அத்தாட்சி.

V R அப்துர்ரஹ்மான், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்

நன்றி : சமூகநீதி அறக்கட்டளை

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.