Latest News

தாய்லாந்து: குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு - LIVE

தாய்லாந்து குகையில் சிக்குண்டுள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரை மீட்கும் பணிகள் குறித்த தகவலை இந்த நேரலை பக்கம் மூலம் உடனுக்குடன் வழங்குகிறோம்.
7:10 PM: மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் அனுமதிக்கப்பட்டுள்ள சியாங் ராய் மருத்துவமனையின் முன்பு கூடியுள்ள மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள எஞ்சிய ஐந்து பேரை மீட்கும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 10.08க்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, குகையில் சிக்கி இருக்கும் எஞ்சியுள்ள சிறுவர்களும், பயிற்சியாளரும் இன்றே மீட்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக மீட்பு பணிகளின் தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக, நான்கு சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமையும், மேலும் நான்கு சிறுவர்கள் திங்கள்கிழமையும் மீட்கப்பட்டனர்.
இதுவரை நடந்தது என்ன?
தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
வெள்ளம் சூழ்ந்த, ஆழமான, சிக்கலான பாதைகளை உடைய அந்தக் குகையில் சிக்கிக்கொண்ட கால்பந்து அணியைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது.
இந்த விவகாரம் சர்வதேசக் கவனத்தைப் பெற்றது. பிரிட்டிஷ் குகை மீட்பு வல்லுநர்கள் உள்பட, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பு வீரர்களும், குகை மீட்பு வீரர்களும் தாய்லாந்தில் குவிந்தனர்.
9 நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டுபிடித்தனர்.
தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் அவருக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் தேதி உயிரிழந்தார்.
இது மீட்புக் குழுவை அதிர்ச்சி அடைய வைத்ததோடு, இது எவ்வளவு ஆபத்தான பணி என்பதையும் காட்டியது. அத்துடன், முன்னரே திட்டமிட்டபடி சில மாதங்கள் காத்திருப்பதில் ஒரு சிக்கலும் ஏற்பட்டது. தாய்லாந்தில் சில நாட்களில் கடும் மழை எதிர்பார்க்கப்பட்டதால், இந்தக் குகை மேலும் வெள்ளமயமாகும் அபாயம் என்று மீட்புக் குழு அஞ்சியது. இதனால், ஆபத்தான வழி என்றாலும், சிறுவர்களை போதிய பாதுகாப்பு உடையோடு முக்குளிக்க வைத்து, மீட்பது என்று முடிவெடுத்தனர்.
இந்நிலையில் ஒவ்வொரு சிறுவரோடும் இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் உடன் வரும்வகையில் மீட்பு திட்டமிடப்பட்டது. மீட்பு வீரர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஏற்கெனவே மீட்புப் பாதை நெடுக ஒரு கயிறு போடப்பட்டுள்ளது. அதன் வழியாக இரண்டு மீட்பு வீரர்களும் ஒரு சிறுவரும் நீந்திக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.
சிறுவனின் காற்றுக் குடுவையை ஒரு மீட்பு வீரர் சுமந்து வருவார். ஒரு வீரரோடு, மீட்கப்படும் ஒரு சிறுவன் கயிற்றால் இணைக்கப்பட்டிருப்பான். மீட்கப்படும் சிறுவர்களின் முழு முகத்தையும் மூடும் வகையில் மூச்சுக் கவசம் பொருத்தப்படும். இது போதிய பயிற்சி இல்லாத சிறுவர்கள் முக்குளித்து நீந்த உதவியாக இருக்கும்.
மேற்கண்ட திட்டத்தின்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நான்கு சிறுவர்களும், திங்கட்கிழமை நான்கு சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.