பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் தேவகௌடாவின் மதசார்பற்ற ஜனதா தளம்
கட்சி கிங் மேக்கராக உருவெடுக்கும் என்று கருத்து கணிப்பு முடிவுகள்
கூறுகின்றன.
கர்நாடகத்தில் வரும் 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல்
நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் ஆகிய கட்சிகள்
போட்டியிடுகின்றன. மூன்று கட்சிகளும் ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி
வருகின்றன.
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் வெளியான கருத்து கணிப்பு
முடிவுகளில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று
முடிவுகள் வந்துள்ளன. இதெல்லாம் கருத்து கணிப்புகள் அல்ல, கருத்து
திணிப்புகள் என்று பாஜக கூறிவந்தது.
மேலும் தேவகௌடாவின் மதசார்பற்ற
ஜனதா தளம் கிங் மேக்கராக உருவெடுத்து இந்த தேர்தலில் பாஜகவுக்கோ அல்லது
காங்கிரஸுக்கோ ஆதரவை அளித்து ஆட்சி அமைக்க வழிகோலும் என்றும்
கணிக்கப்பட்டன.
இதற்கு தேவகௌடாவின் மகன் குமாரசாமியோ இந்த தேர்தலில் காங்கிரஸ்,
பாஜக வெல்லாது, நாங்கள்தான்வெற்றி பெறுவோம். கிங் மேக்கராக இல்லாமல்
கிங்காக இருந்து ஆட்சியை பிடிப்போம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்
ஏபிபி செய்தி நிறுவனம் இன்று தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிட்டது.
அதில் காங்கிரஸ் கட்சி தனிபெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றும் தொங்கு
சட்டசபை உருவாக்கும் என்பதால் தேவகௌடாவின் கட்சி கிங் மேக்கராக மாறும்
என்றும் கூறியுள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment