உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் அமைந்துள்ள புகழ்வாய்ந்த தாஜ்மகால்
சுற்றுப்புறச்சூழல் மாசுபாடு காரணமாக சமீப காலமாக பொலிவிழந்து வருகிறது.
தாஜ்மகாலை
சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து பாதுகாக்கக்கோரி, எம்.சி.மேத்தா என்ற
சுற்றுச்சூழல் ஆர்வலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இம்மனு
ஒன்றாம் தேதி நீதிபதிகள் எம்.பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய
அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தாஜ்மகாலின் சமீபத்திய
புகைப்படங்களை மனுதாரர் தாக்கல் செய்தார். அவற்றை பார்த்த நீதிபதிகள்,
மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்கர்னியை பார்த்து
கூறியதாவது:– தாஜ்மகால் நிறம் ஏன் மாறிவிட்டது? முன்பு மஞ்சளாக இருந்தது.
இப்போது, பழுப்பும், பச்சையுமாக இருக்கிறது. இந்த பாதிப்பை ஆய்வு செய்ய
உங்களிடம் நிபுணர்கள் இருக்கிறார்களா? வெளிநாட்டில் இருந்தாவது நிபுணர்களை
வரவழைத்து, தாஜ்மகாலை பொலிவுற செய்யுங்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அடுத்தகட்ட விசாரணையை 9–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இன்று
அதன்படி வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய
அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பூச்சிகளால் அரிக்கப்பட்டு
தாஜ்மகால் சேதமடைந்து வருவதை அறிந்து நீதிபதிகள் ஆழ்ந்த கவலை வெளியிட்டனர்.
மேலும் இந்த மாசுகளில் இருந்து தாஜ்மகாலை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள்
எடுக்க தவறிய தொல்லியல் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தொல்லியல்
துறை தங்கள் பணிகளை செய்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. தங்கள்
தவறை நியாயப்படுத்தும் தொல்லியல் துறையின் நடவடிக்கை எங்களுக்கு
ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. தாஜ்மகாலை பராமரிப்பதற்கு தொல்லியல் துறை
தேவைதானா? என்பது குறித்து மத்திய அரசு தயவுகூர்ந்து பரிசீலிக்க வேண்டும்
என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. தொல்லியல் துறையின் அறிக்கையின்படி
அவர்களுடைய பார்வை என்னவென்று தெரிகிறது. அவர்கள் பிரச்சனையை ஏற்றுக்கொள்ள
தயாராகவில்லை என்பதையே காட்டுகிறது என சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
தொல்லியல் துறையே சிறப்பான பணியை மேற்கொள்ளவில்லை என்று கூறிவிட்டது,
அவர்களை நீங்கள் நீங்க வேண்டும் என்றது சுப்ரீம் கோர்ட்டு.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேக்தா பேசுகையில், “பிரச்சனை உள்ளது
என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். பிரச்சனையை தீர்க்க தீர்வை காணவேண்டும்,
உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இவ்விவகாரம் கொண்டு செல்லப்படும். நம்முடைய
வரலாற்றை நாம் பாதுகாக்க வேண்டும். வரலாற்றுக்கு கடன்பட்டிருக்கிறோம்,”
என்றார்.
தாஜ்மகாலை பாதுகாக்க சர்வதேச
நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின்
பரிந்துரையை சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிசீலித்து வருவதாக மத்திய அரசு
தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment