
"இந்திய அரசியல் சாசனத்தை ஏற்று
தேர்தலில் நிற்கும் எந்தவொரு கட்சியும் யோக்கியமான கட்சி இல்லை".. இவை
திருமுருகன் காந்தி தாம்பரம் பொதுகூட்டத்தில் பேசிய விஷயங்களின் ஒரு வரி.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினி, கமல், காங்கிரஸ், பா.ஜ.க முதல்
அரசியல் சாசன சட்டத்தைக்கூட விட்டுவைக்காமல் விமர்சனங்களை முன்வைத்தார் மே
17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.
மே 17 இயக்கம்
சார்பில் நடத்தப்பட்ட காவிரி உரிமை மீட்புக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய
அவர், " நமக்கான உரிமை 378 டி.எம்.சி, 177.25 அல்ல. நமக்கு கொடுக்க வேண்டிய
தண்ணீரைவிட அதிக நீரை நாம் கேட்கவில்லை.
நமக்கான நீரைத்தான் கேட்கிறோம், அதற்கே போராட வேண்டுமென்றால் இது ஜனநாயக
நாடா? இதெப்படி தமிழனுக்கான அரசாக இருக்க முடியும். 1892-ம் ஆண்டு சென்னை
மாகாணமும் மைசூர் சமஸ்தானமும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தார்கள்.
'கர்நாடகாவில் எந்த அணை கட்டினாலும் அதற்கு சென்னை மாகாணத்தின் ஒப்புதல்
தேவை, கர்நாடகம் நீர் பாசன பயிர்ப்பை அதிகரித்தால் அதற்கு தமிழ்நாட்டின்
ஒப்புதல் தேவை' என்கிறது பிரிட்டிஷ் காலத்தில் போடப்பட்ட அந்த ஒப்பந்தம்.
1924-ம்
ஆண்டு கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டும்போது ஒரு ஒப்பந்தம் போடுகிறார்கள்.
'கர்நாடகத்துக்குத் தேவைப்படுகிற தண்ணீர், தமிழ்நாட்டுக்குத் தேவைப்படுகிற
தண்ணீர்' என்று பிரிக்கிறார்கள். அப்போது கர்நாடகத்துக்கு ஒதுக்கப்பட்ட
தண்ணீரின் அளவு 177 டி.எம்.சி. 50 ஆண்டுகள் போடப்பட்ட அந்த ஒப்பந்தம் மூலம்
1970 வரை நமக்குக் கிடைத்த தண்ணீரின் அளவு என்பது சராசரியாக 370
டி.எம்.சி. ஒப்பந்தம் போடப்பட்டபோது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்
விவரங்கள், தமிழகத்தின் பாசனப் பரப்பளவு 14.5 லட்சம் ஏக்கர், கர்நாடகத்தின்
காவிரி பாசனப் பரப்பளவு 1.1 லட்சம் ஏக்கர். 70 ஆண்டுகள் கழித்து
தமிழகத்தின் பாசனப் பரப்பளவு 29 லட்சம் ஏக்கராக மாறியிருக்கிறது, அதாவது
இரண்டு மடங்கு. ஆனால், கர்நாடகாவின் பாசனப் பரப்பளவு 24 லட்சம் ஏக்கராக
மாறியிருக்கிறது, கிட்டத்தட்ட 22 மடங்கு. யார் பாசனப் பரப்பை அதிகரித்தது?
1924
மற்றும் 1892-ம் ஆண்டு ஒப்பந்தத்தில், 'சென்னை மாகாணத்துக்குப் பாதிப்பு
இல்லாத வகையில் கர்நாடகாவில் அணை கட்ட வேண்டும்' என்று
குறிப்பிடப்பட்டுள்ளதை மீறி தடுப்பணைகள் கட்டுகிறார்கள், அதனால்
தமிழகத்துக்கான நீர்வரத்து குறைகிறது. 1986-ல் நீர்வரத்து குறைந்ததால்,
தமிழக விவசாயிகள் சேர்ந்து வழக்கு தொடுக்கிறார்கள். 1991-ம் ஆண்டு இடைக்கால
தீர்ப்பாக 205 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில் 1924 முதல் 1970 வரை பெறப்பட்ட 378 டி.எம்.சி தண்ணீரை கணக்கில்
எடுத்துக்கொள்ளவில்லை. ஐந்து தடுப்பணைகள் சட்ட விரோதமாக கர்நாடகா கட்டிய
பின்பு, குறைந்த நீர்வரத்தை கணக்கில் எடுத்து அதன் சராசரியை தீர்ப்பாய்
வழங்கியது. அதன்பின் பல ஆண்டுகள் நடந்த வழக்கில் 2007-ல் கொடுத்த தீர்ப்பு
தமிழகத்துக்கு 192 டி.எம்.சி என்றாக்கினர். பின்னர் 11 ஆண்டுகள் நடந்த
வழக்கில் மேலும் 14.75 டி.எம்.சி தண்ணீரை பிடுங்கிக்கொண்டு வெறும் 177.25
டி.எம்.சி என்றது உச்ச நீதிமன்றம். நன்றாக கவனிக்க வேண்டும் இது 1924-ல்
கர்நாடகாவுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவு. இதற்கு அவர்கள் கூறும்
காரணம், 'தமிழகத்தின் நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக்கொண்டு 10 டி.எம்.சி
குறைத்திருக்கிறோம். கர்நாடகாவில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துவிட்டது
அதனால் 4.75 டி.எம்.சி குறைக்கிறோம்' என்கிறார்கள். ஏன் கர்நாடகாவில்
நிலத்தடி நீர் இல்லையா. அது ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
தமிழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லையா?
மேலும்,
இந்தத் தீர்ப்பு 15 ஆண்டுகள்தான் செல்லும் என்று உச்ச நீதிமன்றம்
கூறியிருக்கிறது. அப்போது காவிரியை முழுவதும் மறந்துவிட சொல்கிறதா.மீண்டும்
நாம் வழக்கு தொடுத்துக்கொண்டே இருக்க வேண்டுமா. நிலத்தடிநீரை கணக்கில்
கொண்டு பயன்படுத்தினால், கொஞ்ச காலத்தில் நிலத்தடி நீர் குறைந்துவிடும்.
பின்னர் இவர்கள் விருப்பப்படும் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷெல் வாயு
போன்றவற்றை சுலபமாக எடுக்கலாம் அல்லவா.. இதுதான் அதன் பின்னுள்ள அரசியல்.
தமிழ்நாட்டைவிட 4 மடங்கு அதிக நீர் பருவ மழை மூலம் கர்நாடகத்துக்குக்
கிடைக்கிறது. நம்மைவிட 3 மடங்கு நீரை தேக்கி வைக்கக் கூடிய அணைகள்
வைத்திருக்கிறார்கள். எதற்காக இவர்களுக்கு இன்னும் தண்ணீர் வேண்டுமென்றால்,
இந்தியாவிலேயே தண்ணீரை தனியார்மயப்படுத்திய மாநிலம் கர்நாடகம்தான்.
பெல்காம், தார்வாட், ஹூப்ளி முனிசிபாலிட்டிகளுக்கு தனியார் நிறுவனம் நீர்
விநியோகம் செய்கிறது.
இப்போது மைசூரில் தண்ணீர்
தனியார்மயமாக்கப்பட்டு டாடா நிறுவனத்திடம் விநியோக உரிமை
கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை பெங்களூருவிலும் செய்வதற்கு தான் இந்த 4.75
டி.எம்.சி ஒதுக்கப்பட்டிருக்கிறது கர்நாடகாவுக்கு.. இது தீர்ப்பா.
இந்தியாவில் பல்வேறு பண்பாடுகள், மொழிகள் எனப் பிரிந்து இருக்கின்றன. இதைப்
பொருட்படுத்தாமல் எல்லாருக்கும் பொதுவான சட்டம் என்று வைப்பதே ஒரு
துரோகம். வேறு சிலரின் நலனுக்குதான் இந்த அரசு ஆட்சி செய்கிறது. நாங்கள்
கட்டும் வரிப்பணம் , ஜி.எஸ்.டி அனைத்தும் எதற்கு. மல்லையா, நிரவ் மோடி
அள்ளிச்செல்வதற்காகவா. ஸ்டெர்லைட், கெயில் பைப்லைன், சாகர்மாலா,
ஹைட்ரோகார்பன், மீத்தேன் இன்னும் எத்தனை எத்தனை விஷயங்கள். இது காவிரிக்கான
போராட்டம் மட்டும் இல்லை. தமிழினத்துக்கான போராட்டம்." என்றார்.
No comments:
Post a Comment