
"பிரதமர் மோடியின் செல்வாக்கு
மீது கொண்ட காழ்ப்புஉணர்ச்சியால் போராடும் திரைப்படத் துறையினர், கடந்த
காலங்களில் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு எத்தனைமுறை திரை
அரங்கங்களை மூடினார்கள்? எத்தனைமுறை திரைப்படக் காட்சிகளை நிறுத்தினார்கள்?
கறுப்புக் கொடி காட்டுவதிலும் ஒரு கண்ணியம், நாகரிகம், பண்பாடு இருக்க
வேண்டும். அதை மீறி எல்லைதாண்டி நடந்து கொள்ளும் தமிழர் விரோதிகளை தமிழ்
மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்'' என்று தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர்
தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை வந்த பிரதமர் மோடிக்கு
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்
என்பதை வலியுறுத்தி, கறுப்புக் கொடி காட்டி தமிழகத்தில் கடந்த 12-ம் தேதி,
எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டனப் போராட்டங்கள் நடந்தன.
கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தின் உச்சக்கட்டமாக
அமைந்தது கடந்த 12-ம் தேதி நடந்த போராட்டம். பிரதமர் மோடி, சென்னையில்
இருந்த 5 மணி நேரமும் சென்னையை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு போராட்டங்கள்
நடந்தன. 'கறுப்பு பலூன், கறுப்புக் கொடி, சாலை மறியல்' என்று சென்னையையே
திக்குமுக்காட வைத்து விட்டன எதிர்க்கட்சிகள்.
நியூட்ரினோ
திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ
நடைபயணம், மத்திய அரசுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்
வேல்முருகன் தலைமையில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியது, சென்னையில்
ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கத்தில் நடந்த
களேபரங்கள், போலீஸ் தடியடி, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மே 17
இயக்கத்தினர் நடத்திய போராட்டம்...என்று மத்திய அரசுக்கு எதிராக நடந்த
அடுத்தடுத்த போராட்டங்கள், தமிழக பி.ஜே.பி-யை கொந்தளிக்க வைத்துள்ளது. அதனை
வெளிக்காட்டும் வகையில், சென்னையில் ஏப்ரல் 13-ம் தேதி தனது பேட்டியில்
போராட்டக்காரர்களுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தார் தமிழக பி.ஜே.பி.
தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
''ராணுவக்
கண்காட்சிக்கு வந்த பிரதமரை கொச்சைப்படுத்தி சில கட்சிகள் நடந்து கொண்டது
கண்டிக்கத்தக்கது. இது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இங்கே நடக்கும்
போராட்டங்கள் காவிரியைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக அல்ல;
விவசாயிகளுக்காகவும் அல்ல; மோடி எதிர்ப்பு நிலைப்பாடு மட்டுமே அவர்களின்
போராட்டங்களில் பிரதானமாக இருந்தது. இந்தியாவில் ஒரு வலிமையான பிரதமர்
இருக்கிறார் என்றால், வருங்காலத்தில் தங்களால் அரசியலில் பிழைக்க முடியாது
என்று நினைக்கும் சக்திகளின் போராட்டம்தான் இது. தி.மு.க மற்றும் அதன்
ஆதரவுக் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும்
இலங்கை தமிழர்கள் மாண்டு மடியக் காரணமான காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்,
சோனியா காந்தி ஆகியோருக்கு எத்தனைமுறை கறுப்புக்கொடி காட்டினீர்கள்? எனவே,
இந்தப் போராட்டம் என்பது மோடி வெறுப்பின் வெளிப்பாடுதானே. எத்தனைமுறை
அவர்கள் நடைபயணம் போனார்கள்?
இப்போது
வைகோ கதறுகிறார். அநாகரிகத்தின் உச்சக்கட்டத்தில் அவர் இருக்கிறார். அவர்
சரியான மன நிலையில்தான் பேசுகிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. பிரதமரை
வா, போ என்று ஒருமையில் பேசுவதா? 22 மாநிலங்களை ஆட்சி செய்யும் ஒரு
கட்சியின் புகழ்பெற்ற தலைவர். அறுதிப்பெரும்பான்மையோடு இருக்கும் பிரதமரை
இப்படியா ஒருமையில் பேசுவது? இனிமேலாவது நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்
என்று வைகோவைக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அரசியல் வரலாறு எங்களுக்கு
தெரியாதா? ஜெயலலிதாவை எப்படி எதிர்த்தீர்கள்? அவரிடம் எப்படி
அடிபணிந்தீர்கள்? ஏற்கெனவே ஸ்டாலினை எப்படி எதிர்த்தீர்கள்? இப்போது
அவருக்கு கொடி பிடிக்கிறீர்கள். இன்று மோடியை எதிர்க்கிறீர்கள். நாளை
மோடியை ஆதரித்துக் கொடி காட்டுவீர்கள். எனவே, அண்ணன் வைகோ நாகரிகமாக பேச
கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
காவிரி
ஒப்பந்தத்தை புதுப்பிக்காதது யாருடைய தவறு? காவிரியில் கர்நாடகம் ஐந்து
அணைகளைக் கட்ட அனுமதித்தது தமிழகத்தில் எந்தக் கட்சி? இந்திரா காந்திக்கு
அடிபணிந்து காவிரி வழக்கை வாபஸ் வாங்கியது யார்? இதையெல்லாம் மறைத்துவிட்டு
இப்போது அரசியல் லாபத்துக்காக போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களின்
போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு இல்லை. மோடிக்கு எதிராக கிளம்பி
இருக்கும் இவர்கள் நாட்டு மக்களுக்கு எதிரானவர்கள். இவர்கள்,
களையெடுக்கப்பட வேண்டியவர்கள்.
கூட்டத்தில், தானே பிக்பாக்கெட்
அடித்து விட்டு மற்றவர்கள் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக 'திருடன்
திருடன்' என்று கத்திக்கொண்டே திருடனும் சேர்ந்து ஓடுவதுபோல் காவிரி நதி
நீர் உரிமையை தங்களின் சுய லாபத்திற்காக தொலைத்தவர்கள், அதை வைத்து மூன்று
தலைமுறையாக பதவி சுகம் கண்டவர்கள், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது செய்யத்
தவறியதை தற்போது உச்ச நீதிமன்றமே இறுதித் தீர்ப்பாக வழங்கி அது இன்னும் சில
வாரங்களில் மோடி அரசால் செயல் வடிவம் பெற இருக்கிறது. இந்தச் சூழலில், அதை
பொறுத்துக்கொள்ள முடியாமல் வேண்டுமென்றே தமிழகத்தை ஒரு அரசியல் போர்க்களம்
ஆக்கி கொதிநிலையில் வைத்து, பொது அமைதியை கெடுத்து அதில் குளிர்காய
நினைக்கும் கூட்டத்தை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
நாகரிகத்துக்கும்,
பொது அமைதிக்கும் இருப்பிடமாக தமிழகத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் எதிர்ப்பு
அநாகரித்தின் உச்சக்கட்டமாக காவிரியின் பெயரால் முன்னிறுத்தப்பட்டது.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நம் மாநிலத்திற்கு வெறும் 1,500 கோடி ரூபாய்
பொருள் இழப்பு மட்டுமல்ல; தமிழகத்தின் நற்பெயருக்கே பெரும் களங்கம்.
மோடிக்கு எதிராகப் போராடும் திரைப்படத் துறையினர் கடந்த காலங்களில்
தமிழகத்தில் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காக எத்தனைமுறை திரை அரங்கங்களை
மூடினார்கள்? எத்தனைமுறை திரைப்படங்களை நிறுத்தினார்கள்?
தமிழகத்திற்கு
எந்தவித வளர்ச்சித் திட்டங்களும் வந்து விடக்கூடாது என்ற குறுகிய
எண்ணத்துடன் செயல்படும் சில தமிழர் விரோத சக்திகளின் கைகளில்தான் இந்த
போராட்டங்கள் இயங்குகிறது. இவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு
அடக்காவிட்டால் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க முடியாது. விவசாயிகள்,
விவசாயம் என்று கூக்குரலிடும் இவர்கள் கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு
என்ன நன்மை செய்திருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
தமிழக விவசாயிகளுக்கு இந்தியாவிலேயே அதிக தொகையாக 2,700 கோடி ரூபாய் பயிர்
காப்பீட்டு திட்டத்தை மோடி அரசுகொடுத்திருக்கிறது. ஆக, இங்கே காவிரி
எதிர்ப்பு என்ற பெயரில் தமிழகத்தை நிலைகுலையச் செய்யும் ஒரு மிகப்பெரிய
சூழ்ச்சியை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எடுத்துச் செல்கின்றன" என்றார்
தமிழிசை.
"அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில்
'நெருப்பாகும்... வெறுப்பு' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கவிதையில்,
ஹெச்.ராஜா, தமிழிசை ஏச்சுக்களால் எங்கு பார்த்தாலும் கொதிப்பு என்று
எழுதப்பட்டுள்ளதே" என்று கேட்கிறீர்கள். "அதை இன்னும் நான் படிக்கவில்லை.
தமிழக அரசு செய்யும் நல்ல காரியங்களை பாராட்டுவேன். தவறுகளைச்
சுட்டிக்காட்டுவேன். அதை எப்போதும் செய்வேன். உறவை பிரிக்கும் வகையில்
ஒருபோதும் செயல்படமாட்டேன்" என்று தமிழிசை பதிலளித்தார்.
No comments:
Post a Comment