
காவல் ஆய்வாளர் தன்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயன்றார் என்று
காவலர் மனைவி அட்லின் ரேபா தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரனிடம் புகார்
அளித்துள்ளார்.
இப்புகார்
குறித்து அட்லின் ரேபாவிடம் பேசினோம், 'எனது கணவர் அருள்ஜாக்சன்
தட்டார்மடம் காவல் நிலையத்தில் காவலராகப் பணி புரிந்துவருகிறார். காவல்
நிலையத்தின் அருகிலேயே குடியிருந்து வருகிறோம். கடந்த 12-ம் தேதி
வியாழக்கிழமை இரவில் 8.15 மணி அளவில் நான் கடைக்குப் போய்விட்டு நடந்து
வந்தபோது, ஆய்வாளர் கஜேந்திரன் என்பவர் என்னை மேலும் கீழும்
பார்த்துவிட்டு, "நீங்க அருள் ஜாக்சன் மனைவியா?'' எனக் கேட்டார். அதற்கு
நான், "ஆமாம்" என்றேன்.
அருகில் இருந்த ஏட்டு சுயம்பு, குமரேசன் ஆகியோரைக் காட்டி,
``இவர்களுடன் சேர்ந்து தண்ணி அடிக்க வேண்டும். அதற்கு மூவாயிரம் ரூபாய்
பணம் கொடுத்துட்டுப் போ" என்றார்.
``எனக்கு வேலை இருக்கிறது. நான்
வீட்டுக்குப் போகிறேன்'' எனச் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். ஆனால்,
"உன்னிடம் நிறைய பேசணும்" எனச் சொல்லி சிறிது தூரம் அழைத்து வந்தவர், "நீ
அழகாய் இருக்கிறாய்'' என்றவர் தொடர்ந்து ஆபாசமாகப் பேசினார். என்னை
வீட்டுக்குச் செல்ல விடாமல், 'உன் போன் நம்பரை கொடுத்திட்டுப் போ" என்றார்.
போன் நம்பர் கொடுக்க நான் மறுத்ததும், ``என்னோட நம்பர் உன் புருசன் போன்ல
இருக்கும். அதுல எடுத்து பேசு. உங்கிட்ட நிறைய பேசணும். நீ பேசலேன்னா உன்
புருசனைக் காடல்குடிக்கு மாத்திடுவேன்" என சொன்னார். ஆய்வாளர் கஜேந்திரன்
மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பியிடம் மனு அளித்துள்ளேன்" என்றார்
கண்ணீர் மல்க.
இப்புகார் குறித்து ஆய்வாளர் கஜேந்திரனிடம் பேசினோம்.
``காவலர் அருள் ஜாக்சன் சமீப காலமாக மது அருந்திவிட்டு சரியாக பணிக்கு
வரவில்லை. அவருக்கு பெண்களுடனான தொடர்பு இருப்பது குறித்தும் எச்சரித்தோம்.
தொடர்ந்து இதே நிலை நீடித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி
எஸ்.பியிடம் பரிந்துரைக்க வேண்டியது வரும் எனக் கூறினோம். இதைப் பற்றி அவர்
தன் மனைவியிடம் கூறி உள்ளார். அவர் மனைவி வேண்டுமென்று என் மீதும்,
காவலர்கள் மீதும் வீண் புகார் கூறுகிறார். அருள் ஜாக்சனின் நடவடிக்கை
குறித்து இதற்கு முன்பாக பணிபுரிந்த ஆய்வாளரும் எச்சரித்துள்ளார்''
என்றார்.
No comments:
Post a Comment