
ஸ்வீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட
பிரதமர் மோடி, இன்று காலை டெல்லி திரும்பினார். டெல்லி திரும்பியதும் முதல்
வேலையாக, அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, சிறுமிகளுக்கு எதிரான பாலியல்
வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில்
சட்டத்திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதலை பெற்று நடவடிக்கை
எடுத்துள்ளார்.
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து
கொண்டே இருக்கின்றன. அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா
பகுதியில் ஆசிஃபா என்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட
சம்பவம் தேசிய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த
சம்பவத்தை அடுத்து, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கடுமையான
தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற குரல்கள் தேசிய அளவில் வலுத்தன.
இந்த சம்பவம் தேசிய அளவிலான கவனத்தை கடந்து சர்வதேச அளவிலான
கவனத்தையே ஈர்த்தது. சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டியன்
லகார்டே, இந்தியாவில் என்ன நடக்கிறது?, காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில்
8வயது சிறுமி பலாத்காரம் செய்து, கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெண்கள்
நலனுக்காக பெரும் புரட்சியை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவின் பிரதமர் மோடி முதல் அனைத்து அதிகாரிகளும் பெண்கள், குழந்தைகள்
நலனில் அதிக அக்கறை எடுத்துச் செயல்படுவார்கள் என நம்புகிறேன். இப்போதுள்ள
நிலையில் இந்தியாவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம்
என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை
முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, முதல் வேலையாக அமைச்சரவை
கூட்டத்தை கூட்டினார். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண
தண்டனை விதிக்கும் வகையில் போக்ஸோ சட்டத்தில் திருத்த ஏதுவாக அவசர
சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
No comments:
Post a Comment