ஆதார் எண் கட்டாய இணைப்பு உத்தரவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள
மனுக்களை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை (வியாழன்)
விசாரிக்கவுள்ளது.
மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத்
திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய
அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார்
எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும்
உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தனிநபர்
சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள
பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் தரப்பில்
கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நாளை (வியாழன்) விசாரணைக்கு எடுத்துக்
கொள்வதாக உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று (புதன்)
அறிவித்தார். தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள்
ஏ.கே சிக்ரி, ஏ.எம். கன்வில்கர், டி.ஓய். சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண்
ஆகியோர் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது.
ஆதார் தொடர்பான விளக்கங்கள்
மற்றும் இடைக்கால உத்தரவு கோரும் மனுக்களையும், இந்த அமர்வு பரிசீலித்து
உத்தரவு பிறப்பிக்கும் எனத் தெரிகிறது.
முன்னதாக, வங்கிக் கணக்கு
உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைப்பதற்கான அவகாசத்தை 2018 மார்ச் 31-ம் தேதி
வரை நீட்டிக்கத் தயாராக இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு
சார்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment