வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சூடு
பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அமைதியான முறையில் நடத்தும்
பொருட்டு விவாதிக்க நாளை (வியாழக்கிழமை) அனைத்துக் கட்சிகளின் கூட்டம்
நடைபெற உள்ளது.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கும் குளிர்கால
கூட்டத்தொடரின் முதல் நாள் இறந்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தப்படும்.
அதற்குப் பின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்படும். திங்கள்கிழமை அன்று
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்
வெளியாகின்றன. இரு அவைகள் தொடங்கும் நிலையில் காலை சுமார் 11 மணிக்கு
தேர்தல் வெற்றி யாருக்கு என்று தெரிந்துவிடும் வாய்ப்புகள் உள்ளன. இதனால்,
தேர்தல் முடிவுகளின் தாக்கம் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடம்
கிளம்பி இரு அவைகளிலும் சூடு பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யும் பொருட்டு அனைத்துக் கட்சித்
தலைவர்களின் கூட்டத்தை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்
அனந்தகுமார் நாளை (டிசம்பர் 14) மாலை 7 மணிக்கு கூட்டியுள்ளார். இதில்
பிரதமர் நரேந்திர மோடி உட்பட நாடாளுமன்ற இரு அவைகளின் அனைத்துக் கட்சித்
தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். இதற்கு முன்னதாக காங்கிரஸ் உள்ளிட்ட
எதிர்க்கட்சிகளும் குளிர்கால கூட்டத்தொடரில் தம் செயல்பாடுகளை முடிவு செய்ய
ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளன. குலாம்நபி ஆசாத்தின் நாடாளுமன்ற
அலுவலகத்தில் கூடும் காங்கிரஸ் கூட்டத்தில் சோனியா காந்தி, மக்களவை
எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, அனந்த்சர்மா உள்ளிட்டோர் கலந்து
கொள்ள இருக்கின்றனர்.
இந்த குளிர்கால கூட்டத்தொடரில் நிலுவையில்
இருக்கும் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முயல்கிறது. இதன்
பட்டியலில் குடியுரிமை சட்டம் 1955, மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும்
பிற்படுத்தப்பட்ட வகுப்பின் தேசிய ஆணையம் சட்டம் ஆகியவற்றை சட்டத்திருத்தம்
செய்ய 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மசோதாக்கள் இடம் பெற்றுள்ளன.
இதனுடன் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் மீது எதிர்க்கட்சிகள்
நாடாளுமன்றத்தில் அமளி செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதில் குஜராத் தேர்தல்
காரணமாக இந்தமுறை குளிர்காலத்தொடரின் தாமதத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள்
அதிக அமளி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
டிசம்பர் 15 முதல்
ஜனவரி 5-ம் தேதி வரை 21 நாட்கள் நடைபெறும் குளிர்காலக் கூட்டத்தொடரில் 14
வேலை நாட்கள் அமைந்துள்ளன. கடந்த வருடம் நவம்பர் 16 முதல் டிசம்பர் 16 வரை
என குளிகாலக் கூட்டத்தொடரில் 22 வேலை நாட்கள் இருந்தன.

No comments:
Post a Comment