வர்தா புயலால் உயிரிழந்த 16 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்
பேரிடர் நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்ச்சேதம்
தவிர்க்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்
ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 12 ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
அவற்றை சரிசெய்யும் பணியில் 8,400 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். புயலால்
மூன்று மாவட்டங்களில் 430 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 119 அவசர
ஆம்புலன்ஸ்கள் புயல் பாதித்த பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வர்தா புயல் காரணமாக 1,388 குடிசைகள் முழுமையாகவும் 5,739 குடிசைகள்
பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது
ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது 104
முகாம்களில் 13,578 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணம், சீரமைப்பு
பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புயலால் உயிரிழந்த 16 நபர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய்
பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். சேதமடைந்த
குடிசைகளுக்கு நிவாரணம் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு
பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment