வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை நகரில் சீரமைப்பு பணிகளை
மேற்கொள்ள துப்புரவு பணியாளர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 6000
பணியாளர்கள் வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர்.
வர்தா புயல் நடத்திய கோரத்தாண்டவத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்
ஆகிய மூன்று மாவட்டங்களில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு
சாய்ந்துள்ளன. புயலுக்கு தாக்குப் பிடித்து நிற்கும் மரங்களிலும் கிளைகள்
ஒடிந்து விழுந்துள்ளன. மரங்கள் விழாத தெருக்களே இல்லை என்று சொல்லும்
அளவுக்கு சென்னை நகரமே சின்னா பின்னமாகியுள்ளது.
சிலர் இல்லங்களில் பார்த்து பார்த்து வளர்த்த மரங்கள் இப்படி வேரோடு
சாய்ந்து கிடப்பதை பார்த்து வேதனை பட்டனர். பல கல்லூரில்களில் நிழல் தந்த
மரங்கள் இன்று உருக்குலைந்து கிடக்கிறது. குறிப்பாக அண்ணா பல்கலைக் கழக
வளாகத்தில் ஏராளமான மரங்கள் புயல் காற்றால் சாய்ந்து கிடக்கின்றன.
வர்தா புயல் சென்னையை தாக்கி விட்டுச் சென்று மூன்று நாட்களாகிவிட்ட
போதிலும் இன்னமும் பெரும்பாலான தெருக்களில் சாலைகளில் மரங்கள் கிடக்கின்றன.
முக்கிய சாலைகளில் மரக் கிளைகளை வெட்டி ஓரமாக போட்டு விட்டு வாகனப்
போக்குவரத்து சீராக்கப்பட்டு வருகிறது.
சரிந்து விழுந்துள்ள மரங்கள் அனைத்தும் மின்சார கம்பிகளையும்
விட்டுவைக்கவில்லை. இதனால் சென்னை புறநகர் பகுதி மூன்றாவது நாளாக இருளில்
மூழ்கி கிடக்கிறது. எனவே முதலில் மின்சார கம்பங்கள் மற்றும் மின்சார
கம்பிகளை அகற்றும் பணியில் வெளிமாவட்ட மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நகர்பகுதிகளில் தற்போது படிப்படியாக மின்விநியோகம் செய்யப்பட்டு
வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் வர்தா புயலால் முறிந்து போன மின் கம்பங்களை
சீரமைக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்
சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் உட்பட மின்வாரிய ஊழியர்கள்,
இவர்களோடு துப்புரவு பணியாளர்கள், ஜெனரேட்டர் ஆப்பரேட்டர்கள்,
மீட்புக்குழுவினர் என ஏராளமானோர் சென்னை விரைந்துள்ளனர்.
இதனிடையே சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க சேலம், ஈரோடு, தஞ்சாவூர், கோவை
உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து பல்வேறு பணிகளை மேற்கொள்ள 6
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். இவர்கள்
கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சூளைமேடு, நுங்கம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட
பகுதிகளில் சாய்ந்துள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணிகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியின் 18 ஆயிரம் பணியாளர்களும்
இந்த பணிகளை செய்து வருகின்றனர்.
துப்புரவுப் பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சென்னை மாநகராட்சி
அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு
வருகிறார்கள். மேலும், காவல்துறையினர், தீயணைப்பு துறையினரும் மீட்பு
பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நகரை சுத்தம் செய்வதே தங்களது
கடமையாக கொண்டு இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.



No comments:
Post a Comment