ஒரு தொகுதியில் வென்றதன் மூலம் டிடிவி தினகரனை பெரிய அரசியல் தலைவராக
தூக்கி வைத்துக் கொண்டாதீர்கள் அவர் ஜெயலலிதாவுக்கு மாற்று அல்ல, 2019
தேர்தலில் எத்தனை தொகுதியை வெல்கிறார் பார்ப்போம் என காங்கிரஸ் கட்சியின்
தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு பேசியதாவது:
“ஜெயலலிதாவை பல முறை பார்த்திருக்கிறேன். அவருக்கு எதிரான அரசியல்
நடத்தி இருக்கிறேன். ஆனாலும் அவர் ஒரு எடுத்துக்காட்டான தலைவர். அவர் மீது
மிகுந்த மரியாதை உண்டு. அவர் அளவுக்கு தினகரன் வர முடியாது. அவர் சாதாரணமான
நபர் தான். பணம் கொடுத்து வாக்குகளைப் பெற்ற வெற்றி அது. இந்த ஆட்சி
நீடிக்கக்கூடாது என்று மக்கள் விரும்புகிறார்கள், ஓபிஎஸ், ஈபிஎஸ்தான்
ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக துரோகம் செய்துள்ளார்கள் என்ற கோபம் மக்களுக்கு
இருந்திருக்கும்.
ஜெயலலிதாவின் தொகுதி அது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற
வீடியோவை வெளியிட்டது கூட அனுதாப ஓட்டாக மாறியிருக்கும். 2ஜி வெற்றியை
வைத்து திமுக வாக்கு கேட்டதே இல்லை. ஆனால் அதிமுக, பாஜக அனைத்து
தேர்தலிலும் 2ஜியை வைத்துதான் பிரச்சாரமே செய்துள்ளார்கள். 2011
தேர்தலிலிருந்து அனைத்து தேர்தலிலும் இரண்டு கட்சிகளுக்கும் இதுதான் வேலை.
தற்போது வந்த தீர்ப்பு காங்கிரஸ் பக்கம் நியாயம் இருப்பது தெளிவாகி விட்டது
அல்லவா?
திமுக, பாஜக கூட்டு என்பது போலியான வாதம். ரூம் போட்டு
யோசிப்பார்கள் போலிருக்கு. பிரதமர் மரியாதை நிமித்தமாக கருணாநிதியைப்
பார்த்ததை வைத்து இப்படி சொல்லக்கூடாது. அப்படி என்றால் ராகுல் போய்
பார்த்ததை வைத்து கூட்டணி உறுதியாகிவிட்டதா? என்று கேட்கவேண்டும் அல்லவா?
திமுக பாஜக கூட்டணியா என்ற கேள்விக்கு பதில் சொல்ல நான் திமுக செய்தித்
தொடர்பாளர் இல்லை.
ஓபிஎஸ், ஈபிஎஸ் பற்றி ஆடிட்டர் குருமூர்த்தி கூறிய
விமர்சனத்திற்கெல்லாம் நான் பதில் கூற முடியாது. ராகுல் காந்தி எங்களுக்கு
தெளிவாக வழிகாட்டியுள்ளார். யாராக இருந்தாலும் அவரவர் பதவிக்கு மரியாதை
கொடுக்க வேண்டும் அதைத்தான் நான் சொல்கிறேன்.
எனக்குத் தெரிந்து
இவர்கள் ஆட்சியில் இதுவரை எந்த ஒரு நல்ல திட்டமும் வெளிவரவில்லை.
ஆர்.கே.நகரில் கண்ணுக்குத் தெரிந்து பணப் பட்டுவாடா புகார் வந்தது. தேர்தல்
ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது? 20 ரூபாய் நோட்டைக் கொடுத்து ஓட்டு
வாங்கியதாக தகவல் வெளிவந்தது. எந்த நடவடிக்கையும் இல்லை. மாற்றம்
வரவேண்டும். டிடிவி தினகரனால் எந்த மாற்றமும் வரப் போவதில்லை. டிடிவி
தினகரன் 2019 தேர்தலில் எத்தனை தொகுதிகளில் வெல்கிறார் என்று பார்ப்போம்.
அதே
போல் பாஜக நோட்டா அளவுக்கு கூட வாக்குகள் வாங்கவில்லை என்று குஜராத்
சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஸ் மேவானி கூறியிருந்ததை படித்தேன். தமிழகத்தில்
பாஜக தலைகீழாக நின்றாலும், குட்டிக்கரணம் அடித்தாலும், புரண்டு என்ன
செய்தாலும் வர முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment