ஆயுள் தண்டனையையும் தாண்டி சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்ய
வேண்டும் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி
தாக்கல் செய்த மனுவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் விடுவிக்க
வாய்ப்பில்லை, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு
பதிலளித்துள்ளது.
1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி குண்டுவெடிப்பின் மூலம் கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 9 பேருக்கு
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு
தண்டனையை பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
இதைதொடர்ந்து கடந்த 1991-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வரும் தன்னை
முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை
உயர் நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார். 26 ஆண்டுகளாக
சிறையிலிருக்கும் தன்னை தமிழக அரசின் 1994-ம் ஆண்டு அரசாணைப்படி விடுதலை
செய்ய வேண்டும் என அவர், மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கில் தமிழக உள்துறை இணை செயலாளர் எஸ்.எல்.தேவாசிர்வாதம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த
பதில் மனுவில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும்
கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாம் என்று கடந்த 1994-ம்
ஆண்டு பிறப்பித்த அரசாணையின் கீழ் மனுதாரர் உரிமை கோர முடியாது.
ஏனெனில்,
மனுதாரர் மீதான வழக்கை, மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. விசாரித்தது.
அந்த வழக்கு, 1994-ம் ஆண்டு அரசாணைக்குப் பொருந்தாது. மேலும், கடந்த
19.2.2014 மற்றும் 2.3.2016, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7
பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்ச
நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நளினி 7வது பிரதிவாதியாக
சேர்க்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவயில்
இருப்பதை, இந்த மனுவில் அவர் மறைத்துள்ளார்.
ஏழு பேர் விடுதலை வழக்கை
விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம்
செய்ததுடன், தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு தடை விதித்துள்ளது. மேலும்,
அந்த வழக்கு நிலுவையில் உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால், அதில் ஒரு முடிவு
எட்டும் வரை, இந்த மனு மீது எவ்வித விசாரணை நடத்த முடியாது என்பதால்,
நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில்மனுவில் கோரிக்கை
வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

No comments:
Post a Comment