மத்திய போக்குவரத்துத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி காலாவதியான
பேருந்துகளை இயக்குவதில் பிஹாருக்கு அடுத்து தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது
என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக
இன்று வெளியிட்ட அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் அரசுப்
போக்குவரத்து கழகங்கள் இயங்கி வரும் நிலைமை குறித்து வெளியாகியுள்ள
தகவல்கள் பெரும் அதிர்ச்சியை தருகின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்
கழகங்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர்களும், 40 ஆயிரம் அதிகாரிகளும்
பணிபுரிகின்றனர். மேலும 50 ஆயிரம் ஓய்வு பெற்ற ஊழியர்களும் உள்ளனர். 23
ஆயிரம் பேருந்துகளில் நாள்தோறும் 2 கோடியே 20 லட்சம் பேர் பயணம்
செய்கின்றனர்.
இந்தியா முழுவதும் உள்ள 47 போக்குவரத்துக் கழகங்களை ஒப்பிடும்போது
தமிழகத்தில்தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அதிக சேவையை வழங்குகின்றன.
இன்றியமையாக போக்குவரத்துத் துறை பல வகைகளில் சீரழிக்கப்பட்டுள்ளதால் அதன்
எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
மதுரையைச் சேர்ந்த மக்கள்
விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் ஹக்கீம், அரசுப் போக்குவரத்துக்
கழகங்களின் செயல்பாடுகள் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்
பல்வேறு தகவல்களைப் பெற்றுள்ளார்.
8 அரசுப் போக்குவரத்துக்
கழகங்களில் பணிமனைகள், நிலம், கட்டிடங்கள் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டு
ரூ. 2 ஆயிரத்து 458 கோடியே 88 லட்சம் கடன் பெற்றுள்ள தகவல் வெளியாகி
உள்ளது. அரசுப் பேருந்துகளும் அடமானம் வைக்கப்பட்டுள்ளன. இதில் கோவை
கோட்டம் ரூ. 1,549 கோடிக்கு அசையும், அசையா சொத்துகளை அடமானம் வைத்துள்ளது.
போக்குவரத்துத் துறையினர் சீரழிவுக்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க
முடியாது.
மத்திய போக்குவரத்துத் துறை வெளியிட்ட
புள்ளிவிவரங்களின்படி காலாவதியான பேருந்துகளை இயக்குவதில் பிஹாருக்கு
அடுத்து தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
போக்குவரத்துத் துறை
மட்டுமின்றி தமிழக அரசின் ஒட்டுமொத்த நிதி நிலைமையும் மோசமாகி வருகிறது.
தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ. 15 ஆயிரத்து 850 கோடி என்றும், தென்
மாநிலங்களிலேயே இதுதான் அதிகம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நடப்பு
நிதியாண்டில் தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ. 42 ஆயிரம் கோடியாக
உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடன் சுமை ரூ. 5 லட்சத்து 75 ஆயிரம்
கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்துத் துறை
மட்டுமின்றி மற்ற துறைகளையும் ஆய்வு செய்தால் தான் அதிமுக அரசின்
ஒட்டுமொத்த செயல்பாடுகளும் தெரிய வரும்.
வேளாண் உற்பத்தி பாதிப்பு,
தொழில் துறை முடக்கம் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி
பொருளாதார நெருக்கடியில் இருந்து தமிழகத்தை மீட்க அதிமுக அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.
No comments:
Post a Comment