ஹரியானா
மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான தீபா மாலிக் ராணுவ அதிகாரியின் மனைவி.
இவருக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். தீபா மாலிக் 28 வயதில் பேரப்லெஜிக்கால்
பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது
இடுப்புக்கு கீழே அனைத்து உறுப்புகளும் செயல் இழந்துவிட்டன.
சக்கர நாற்காலி வாழ்க்கை
செயல்
இழந்த உடல் உறுப்புகளை சரி செய்வதற்கு 31 அறுவை சிகிச்சைகள், 183 தையல்கள்
போடப்பட்டன. இதற்கு பின்பும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை
தீபாவால் இதனால் 31 வயதில் சக்கர நாற்காலியோடு அவரது வாழ்க்கை
முடங்கிப்போனது.
மனம் தளராத தீபா மாலிக்
சுழன்று
சுறுசுறுப்போடு இருந்த ஒருவர் திடீரென சக்கர நாற்காலியில் தான் இனி எஞ்சிய
காலத்தை கழிக்க வேண்டும் எனில் அது எவ்வளவு கொடுமையான விஷயம். எனினும்
சோர்ந்து போகாமல் கடவுளின் விளையாட்டிற்கு அர்த்தம் இருக்கும் என்பதை
உணர்ந்து, கேட்டரிங் உணவகத்தை முதலில் தொடங்கி பின்னர் பெரிய அளவில்
ரெஸ்டாரண்ட்டாக மாற்றியுள்ளார்.
கார் பந்தைய பயிற்சி
அப்போது
எதேச்சையாக ஒரு வாடிக்கையாளர் நீங்கள் பைக் ஓட்டலாமே என்று கேட்டு
வெளிநாடுகளில் மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு பைக் ரேஸ் செய்கின்றனர் என்பதை
காட்டியுள்ளார். தீபாவிற்கு இரு சக்கர வாகனம் ஓட்டுவதில் தீராத பிரியம்,
அதை தன் கணவரிடம் தெரிவித்துள்ளார். அதை ஊக்குவித்து இருசக்கரம் மற்றும்
கார் பந்தய பயிற்சியில் கணவர் சேர்த்துள்ளார்.
முதல் மாற்றுத்திறனாளி
உலகின்
மிகவும் ஆபத்தான ரேஸ் என்று அழைக்கப்படும் ஹிமாலயன் மோட்டர் ரேசில் ஜம்மு,
லே, சிம்லா, இமயமலை என 1,800 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலைவனத்திலும்
பனியிலும் தனது பயணத்தை வெற்றிகமாக நிறைவு செய்தார். பைக் ரேஸில் பங்கேற்க
ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் பெண் மாற்றுத்திறனாளி இவர்தான்.
செதுக்கிக் கொண்ட தீபா
இவர்
சிறந்த நீச்சல் வீராங்கனையும் கூட. யமுனா நதியில் நீரோட்டத்தை எதிர்த்து
ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீந்தி சென்று லிம்கா சாதனை படைத்தார்.
இத்தனை சாதனைகளுக்கிடையே குண்டு எறிதலிலும் மாவட்ட, மாநில அளவில்
பதக்கம்வென்றார். பிறகு, சர்வதேச வீராங்கனையாக உருவெடுத்தார்.
அர்ஜூனா விருதுக்கு சொந்தக்காரர்
வாழ்வில்
ஏற்படும் தடைகள் நிரந்தரமானதல்ல என்பதை மாற்றிப் போட்ட தீபா
நியூசிலாந்தில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலக
சாம்பியன்ஷிப் போட்டியில் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அந்த
சாதனையைப் பாராட்டி 2012ம்ஆண்டு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. சக்கர
நாற்காலியில் முடங்கிப் போனவரை நடைபிணம் என்று விமர்சித்தவர்களுக்கு
மத்தியில் தனது கையில் அர்ஜூனா விருதை ஏந்தி கம்பீரமாக மின்னிய முதல்
மாற்றுத்திறனாளி என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார் தீபா.
பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம்
வெற்றியை
ஒரு முறை ருசித்தால் அதன் வைப்ரேஷன் இருந்துகொண்டே இருக்கும் என்பதை
நிரூபிக்கும் விதமாக 2016ம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்றார்.
இந்த முறை குண்டு ஏறிதல் போட்டியில் பஹ்ரைன், கிரீஸ் வீராங்கனைகளுக்கு
கடும் நெருக்கடி கொடுத்து இறுதியில் வெள்ளிப்பதக்கத்தை வாங்கி வந்தார்
தீபா. இதன்மூலம், பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல்
இந்தியப்பெண் என்ற வரலாற்றையும் படைத்தார்.
சாதனை நாயகி
தேசிய
அளவில் 45 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என 52 பதக்கங்களை வென்ற தீபா,
சர்வதேச அளவில்13 பதக்கங்களையும் குவித்துள்ளார். அதிக தூரம் பயணம் செய்த
மாற்றுத் திறனாளி பெண், இந்தியாவின் உயரமான ஒன்பது இடங்களை ஒன்பது நாளில்
கடந்த முதல் மாற்றுத் திறனாளி பெண் என தீபாவின் சாதனைப்பட்டியல் மிக நீளம்.
முன் உதாரணம்
தீபா
மாலிக் நம்பிக்கைக்கான நாயகி மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும் கூட. தான்
சாதித்த விஷயங்களை உதாரணமாக வைத்து இளம் சமுதாயத்தினருக்கு உத்வேகம்
அளித்து வருகிறார் தீபா.
No comments:
Post a Comment