எங்களுக்கு அதிமுக என்ற கழகம்தான் முக்கியம். பதவிக் காலம் முடிந்தவுடன் அமைச்சர்கள் வீட்டுக்கு செல்ல நினைக்கலாம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இரட்டை இலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் ஜாமீன் பெற்ற தினகரன் சனிக்கிழமை சென்னை வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது தோப்பு வெங்காடசலம், தங்கதமிழ்ச் செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் கட்சித் தலைமைக்கு எதிராக பேசிய அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி, தங்கமணி, வீரமணி உள்ளிட்டோரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ஆலோசனையில் கோரிக்கை வைக்கப்பட்டது.
எந்த மாற்றமும் இல்லை
இந்நிலையில் கட்சி பணிகளில் தான் தொடர்வேன் என்று டிடிவி தினகரன் கூறியது தொடர்பாக 20 அமைச்சர்கள் ஒன்றுகூடி அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதன் முடிவில் தினகரனை ஒதுக்கி வைக்கும் என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
ஜெயகுமார் பொதுச் செயலாளரா
இதனிடையே பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் அமைச்சர் ஜெயகுமார் கட்சியின் பொதுச் செயலாளர் போல் செயல்படுகிறார்.
யாருக்கும் அதிகாரம் இல்லை
என்னை கட்சியிலிருந்து நீக்கவோ ஒதுக்கவோ ஜெயகுமார் உள்பட யாருக்கும் உரிமை இல்லை. ஜெயகுமார் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு வானளாவிய அதிகாரத்தை யார் அளித்தது?
கட்சிதான் முக்கியம்
எங்களின் பொறுமையை பயன்படுத்திக் கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறார்கள். அமைச்சராக இருப்பவர்கள் பதவிகாலம் முடிந்தவுடன் வீட்டுக்கு செல்ல நினைக்கலாம். ஆனால் எங்களுக்கு கட்சியின் எதிர்காலம் தான் முக்கியம். ஜெயகுமார் இவ்வாறு பேசியதற்கு நான் வருத்தப்படுகிறேன். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன். அவராகவே புரிந்து கொண்டு நல்வழிக்கு வருவார் என்று நம்புகிறேன் என்றார் தினகரன்.
No comments:
Post a Comment